Nagore Puranam
நான் கண்ட பாரதி - (தொடர் - 1)। மு. முஹம்மது சுஹைப் | October 2023

நான் கண்ட பாரதி - (தொடர் - 1)। மு. முஹம்மது சுஹைப் | October 2023

 நான் கண்ட பாரதி - (தொடர் - 1)


கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர் சுதந்திர போராட்ட வீரர் என பன்முக ஆளுமை கொண்டவர் எட்டையபுரத்தில் பிறந்த மகாகவி பாரதியார். மாபெரும் கவிஞராக திகழ்ந்த இவர் தனது கவிதைகளின் மூலம் சாதி மத பாகுபாடு, பெண் அடிமை போன்ற சமுதாய சீர்திருத்த கருத்துக்களையும், நாட்டுப் பற்று குறித்த கவிதைகளையும் இயற்றி மக்களை விழிப்புணர்வு அடைய செய்தார். அவர் குறித்து நான் ஆராய்ந்து படித்தவைகளை சிலவற்றை நான் கண்ட பாரதி எனும் தலைப்பில் இக்கட்டுரையாக இயற்றியுள்ளேன்.

இந்தியர் என்பதில் பெருமிதம்:

மகாகவி பாரதியார் தனது பாடலில்

"பாரத தேசமென்று பெயர் சொல்லுவோர் பயம்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார்"

இவ்வடிகளில் பாரததேசமென்று நம் இந்திய திருநாட்டை குறிப்பிடுகிறார். யாரொருவர் இந்தியா என்னும் பெயரை உச்சரிக்கின்றாரோ, அப்போதே அவர் வறுமை குறித்த அச்சத்தில் இருந்து விலகிவிடுவார். மேலும் இவ்வுலகில் வாழும் மாந்தர்களின் பெரும் பகையான துன்ப துயரங்கள் நீங்கிவிடும் என்கிறார். இந்திய நாடு என்னும் இப்பெயர் மிகவும் சக்திமிக்க ஆற்றல் வாய்ந்த பெயராகும் என்று கூறியும் புகழாரம் சூட்டுகின்றார்.

வேற்றுமையின்றி ஒற்றுமை:

நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாய் வாழ வேண்டும் என்னும் கருத்தை தனது பாடலில்

" ஜாதி மதங்களை பாரோம் உயர் ஜன்ம்இத் தேசத்தில் எய்தின ராயின் வேதிய ராயினும் ஒன்றே அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே"

இந்நாட்டில் வாழ்பவர்கள் ஜாதி, மதம் என்று பிளவுபட்டிருக்க வேண்டாம். உயர்ந்த குலத்தில் பிறந்தவரும், தாழ்ந்த குலத்தில் பிறந்தவரும் ஒன்றே.

இங்கு வாழ்பவர்களுக்கு ஏற்ற தாழ்வு என்ற எதுவும் கிடையாது. அவரவர் இந்த நாட்டில் எங்கு எப்படி வாழ்ந்திருந்தாலும் அனைவரும் இந்நாட்டு மக்களே என்ற உயரிய கருத்தை தனது பாடலில் கூறுகிறார்.

ஈனப் பறையர்க ளேனும்-அவர் எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ? சீனத்த ராய்விடு வாரோ?-பிற தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ?"

அவர்கள் தாழ்ந்தவர்கள் என்று சொன்ன போதும் அவர்கள் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தானே அவர்கள் வேறு தேசத்தவர் போல் நமக்கு என்ன தீங்கு செய்தவர்களா என்று நாட்டு நடப்புக்கு ஏற்ப நல்லதோர் உயரிய கருத்தை தனது பாடலின் மூலம் எடுத்துரைக்கிறார் பாரதியார்.

தாய்நாடு:

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்தும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே!

மேற்கூறப்பட்ட இப்பாடல் வரிகளில் பாரதியார் என்னைப் பெற்றெடுத்த தாயும் மகிழ்ந்தது இந்த இந்திய திருநாட்டில் தான். என் மூதாதையர்களும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் வாழ்ந்ததும் இந்த இந்திய திருநாட்டில் தான் என்கிறார். மேலும்,

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்தருள் ஈந்ததும் இந்நாடே - அவர் கன்னிய ராகி நிலவினி லாடிக் களித்ததும் இந்நாடே

இளம் பெண்களான கண்ணிகள் பலர் நிலவினை கண்டு ஆடிப்பாடி விளையாடிதும் என்னைப் பெற்றெடுத்த தாய் வளர்ந்ததும் இந்த இந்திய திருநாட்டில் தான் என்கிறார்.

- மு. முஹம்மது சுஹைப்

Published in Nagore Puranam October month magazine 2023


Post a Comment

0 Comments