ஒரு ஊரில் பல குருக்கள், சில சீடர்களுக்கு அருளிய உபதேசத்தை யோக்கியன் ஒருவன் கேட்க நேர்ந்தது..

குரு தொடர்ந்தார்..

கோடைக்காலத்தை பழுப்பு நிறத்தில் உதிர்த்துக்கொண்டிருக்கின்றன வாதாம் மரங்கள். அதன் நிழலில் இரண்டு பொதி கழுதைகள் என்று நிறுத்தினார்.

இப்படித்தான் கவித்துவமாக இந்தக் கதை தொடங்கியது.

பிறகு அவர் உரையாடலில் கவனம் குவித்தேன்.

முதல் கழுதை, தன் முதுகில் பொதியை சுமக்கச் செய்தவர் கடவுள் என்றது. அது மேலும் கடவுளுக்கு நன்றி சொன்னது

இரண்டாவது கழுதையோ இல்லை அது விதியின் செயல் என்றது. மேலும் அது வானத்தை நோக்கி கனைத்து மகிழ்ந்தது

உரிமையாளனோ நெருங்கி வந்து சாட்டையைச் சொடுக்கினான்.

மேலும் பணிந்த உயிர்கள் மீதும், வளைந்த முதுகினர் மீதும் பொதிகளை மேலும் மேலும் சுமக்கப் பழக்கினான்.

தன் பங்கிற்கு கடவுளுக்கு நன்றி சொன்னான்.

இத்தனையும் கண்டிருந்த பூனையோ, நீ ஒருவரின் சுமையை ஏந்திக்கொண்டால் உனது சுமைகளை கடவுள் ஏந்திக் கொள்வார் என்றபடி தனது பால் கிண்ணத்தையும் கழுதையின் முதுகின் மேல் வைத்துக் கட்டியது.

நாயும் நான்கு நல்வார்த்தைகளைச் சொல்லி நயமாகத் தன் எலும்புத் துண்டையும் ஏற்றிவிட்டது.

இப்படியாக நன்மொழி சொன்னவர் பொருள்கள் யாவையும் ஏந்திய கழுதை இலக்கைத் தொட எத்தனை முயன்றும் முடியாமல் சாட்டையடிகளால் தோல் பிய்ந்து அழுதது.

அப்போது கழுகுகள் வட்டமிட்டபடி.. அடடா நல்லவர்களை ஆண்டவர் தான் எப்படி சோதிக்கிறார் பாருங்கள் ஆனாலும் கைவிடமாட்டார் என்றது.

உண்மை முற்றிலும் உண்மை..

கழுதைகளை, மனிதர்களை காப்பாற்றும் பொருட்டு சுமையுந்துகளை கடவுள்தான் படைத்திருக்கவேண்டும் என்றார் குரு.

சீடர்கள் குனிந்து வணங்கினர்.

- கவிஞர் சூ.சிவராமன்.

Published in Nagore Puranam October month magazine 2023