பெற்ற குழந்தை பேச துவங்கும் பொழுது முதலில் மொழியும் மழலை சொல் தாய் மொழி சொல்லாகவே இருக்கும். குழந்தை தாய் தந்தை முன் பிறந்த சகோதர சகோதரிகள் வீட்டில் உள்ளோம் பேச கேட்பது தாய்மொழி சொல்லாகவே இருக்கும். இப்படி கேட்டு உற்று அறிந்து அக்குழந்தைக்குப் புரியும் மொழியாக தாய் மொழியே அமையும். மூளை வளர்ச்சிக்கும் சிந்தனை செயல்பாட்டிற்கும் தாய்மொழியே தலையாயது.
எனவே துவக்க கல்வி தாய் மொழியில் அமைய வேண்டும். குழந்தைகள் சிரமம் இன்றி சீராய் படிக்கும். படிப்பில் விருப்பம் ஏற்படும். புரியாத மொழியில் அறியாத சொற்களை ஆரம்பத்தில் சொல்லும் போது குழந்தைகள் அஞ்சும் அலறும். இந்நிகழ்வை நிதமும் ஆங்கில வழி மழலையர் பள்ளிகளில் பார்க்கிறோம். தாய் மொழியில் சுயமாக சிந்திப்பது எளிது. நீரை இறைக்க இறைக்க ஊரும் கிணறுகள் போல தாய்மொழியில் சீரிய சிந்தனைகள் முந்தி வரும். குழந்தைகளும் படிப்பில் முதலிடம் பெறுவர்.
இரவல் மொழியில் பிற அந்நிய மொழிகளில் சுய சிந்தனைக்கு இடமே இருக்காது. மனமே மனத்தில் கணக்கும். படிப்பு இணக்கம் இன்றி சுணக்குமே ஏற்படும். குழந்தைகளின் சுறுசுறுப்பு குறையும். தற்காலத்தில் தமிழ்நாட்டில் ஆங்கில வழி கல்வி மோகம் அதிகரித்துள்ளது. ஆங்கில வழி கல்வி கற்பிக்கும் மழலையர், துவக்க, உயர், மேல்நிலை பள்ளிகளின் எண்ணிக்கை கட்டுக்குள் அடங்காது வானம் தொடும் வண்ணம் உயர்ந்து நிற்கிறது.
இல்லாதவர்களும் பொல்லாத வட்டிக்கு கடன் வாங்கி சொல்லாலான துயரத்துக்கு ஆளாவதை சொல்லி மாளாது. தாய்மொழி கல்வியின் சிறப்பை மக்களுக்கு புரிய வைக்கும் வண்ணம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அதிகமதிகம் நடைபெற வேண்டும்.
இந்த அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிப்போர் பல துறைகளிலும் பளிச்சிடுவதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். இதனை அரசு ஆவணம் செய்ய வேண்டும்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராக பணியாற்றும் திருமதி கலைச்செல்வி பள்ளிப்படிப்பை தாய்மொழியில் படித்தேன் என்று பெருமையுடன் சொல்கிறார்.
மதிப்பிற்குரிய இந்த அம்மையார் கூற்றுப்படி தாய் மொழி தமிழ் ஆய்வுக்கும் அரிய உரிய செம்மொழி என்பது செப்பவும் வேண்டுமோ?...

0 Comments