முன்னுரை :
திருக்குறள் மனிதநேயக் கருத்துக்களை நிறைந்து வழிகின்ற ஊற்றாக திகழ்கிறது. மனிதம் என்ற சொல்லுக்கு அன்பு, நன்மை, பக்தி என்று பொருள். ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய வாழ்க்கையில், தன் குடும்பம், உற்றார், உறவினர், நண்பர்கள் போன்ற தொடர்புடையவர்களோடும், தொடர்பில்லாத மற்றவர்களோடும் பழகும் வாய்ப்பு இயற்கையாகவே அமைகிறது. ஒரு மனிதன் தொடர்புள்ளவர்களோடும் தொடர்பில்லாதவர்களோடும் காட்டும் அன்பை, திருவள்ளுவர் அழகாகவும், ஆழமாகவும் பல குறட்பாக்களின் வழி கூறியுள்ளார். மனிதம் சார்ந்த சுற்றுச்சூழல் கருத்துக்கள் அறத்துப்பால், பொருட்பால் மற்றும் காமத்துப்பால் ஆகிய திருக்குறளின் மூன்று பகுதிகளிலும் காணப்படுகின்றன.
நெருங்கிய தொடர்புடையவர்களிடம் காட்டும் மனிதம் :
"நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து.". (குறள் – 1128)
சூடான பண்டத்தைச் சாப்பிட்டால் நெஞ்சுக்குள் இருக்கின்றகாதலருக்குச் சுட்டுவிடும் என்று அஞ்சுகின்ற அளவுக்கு நெஞ்சோடு நெஞ்சாகக் கலந்திருப்பவர்களே காதலர்களாவார்கள்.
இந்தக் குறட்பாக்களிலிருந்து, காதலர்களிடையே உள்ள உறவானது மிகுதியானது என தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இவர்கள் மண வாழ்க்கையில், கணவன் மனைவியாக வாழும்பொழுது, அவர்களுடைய இல்வாழ்க்கையில் அன்பையும் அறத்தையும் அமைத்து கொண்டால் அது மூலம் பண்பையும் பயனையும் உள்ளடக்கும் என்று வள்ளுவர் கூறுகிறார்.
" அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது ". (குறள் - 45)
இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.
ஒருவன், அன்போடும் அறத்தோடும் இல்வாழ்க்கை நடத்தும்பொழுது, அவனோடு தொடர்புடைய பெண்டு, பிள்ளை, தாய், தந்தை, அண்ணன் தங்கை மற்றும் உறவினர் ஆகியோருக்கு,அவன் உற்ற துணையாகவும் ஆதரவாகவும் இருந்து அன்பு காட்டவேண்டும் என்ற கருத்தையும் திருவள்ளுவர் திருக்குறளில் சுட்டி இருப்பதைக் காண்கிறோம். ஆகவே, ஒருவன் தன்னோடு நெருங்கிய தொடர்புடையவரிடம் மனிதத்துடன் இருக்க வேண்டும் என்ற கருத்தை திருக்குறளில் காண்கிறோம்.
நெருங்கிய தொடர்பில்லாதவர்களிடம் காட்டும் மனிதம் :
இந்த அவசர கால உலகில் ஒடிக்கொண்டிருக்கும் நாம் நட்பில்லாமல் காலப்போக்கில் ஒருவன் சிலர் மீது நட்பு கொண்டபின். அவனுக்கும் அவனுடைய நண்பர்களுக்குமிடையே உள்ள உறவு நெருக்கமாகியதும், எவ்விதத் தயக்கமும் இல்லாமல், தன்னுடைய ஆடை நழுவினால், அதை ஒருவன் உடனே சரிசெய்துகொள்வதைப்போல் ஒருவருக்கொருவர் உதவிசெய்ய வேண்டும் என்றகருத்தை வள்ளுவர்,
" உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. " (குறள் - 788)
அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நட்புக்கு இலக்கணமாகும்.
இவ்வாறு உதவி செய்வதும் மனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டுதான். அதைப்போல மக்கள் அனைவரும் பிறப்பினால் சமம் என்றும், பிறர் துன்பத்தை தன் துன்பமாகக் கருதுவதுதான் ஒருவன் அறிவினால் பெற்ற பயன் என்றும் வள்ளுவர் கூறுவது திருக்குறளில் காணப்படும் மனிதநேயத்திற்கு மற்றுமொரு சான்று.
“ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.” (குறள் – 972)
பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்.
மக்கள் யாவரும் சமமே என உணர்வதும், பிறர்க்கு ஏற்படும் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதுவதும் உயர்ந்த மனிதநேயக் கோட்பாடுகள்தான். ஆனால், அந்தக் கோட்பாடுகளை உள்ளத்தால் உணர்வதுதோடு விட்டுவிடாமல், அவற்றைச் செயல்முறையிலும் நிகழ்த்தி காட்ட வேண்டும் என சொல்லுவதோடு, தன்னிடம் உள்ள உணவு, செல்வம் ஆகியவற்றை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதுதான் தலையாய செயல் என்றும் வள்ளுவர் கூறுகிறார்.
" பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. " (குறள் - 322)
இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை.
நம்மால் இயன்றதைப் பிறருக்கு அளித்து உதவுவதை வள்ளுவர் ஈகை என்று கூறுகிறார். வறியவர்களுக்குத் தேவையானவற்றை, அவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல் நாம் கொடுத்து உதவுவதுதான் உண்மையான ஈகை என்ற கருத்தும் திருக்குறளில் காணப்படுகிறது.
" தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. " (குறள் – 212)
தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.
- நாகூர் செய்கு அப்துல் காதிர்
Published in Nagore Puranam March month magazine 2024

0 Comments