ராஜ குருவின் கைது மற்றும் மரணம் நாட்டு மக்களைச் சென்றடைந்தால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு மக்களின் நம்பிக்கைக்குக் கலங்கம் உண்டாவதாக விளங்கும் என்பதனை அறிந்த மன்னர் ராஜகுரு ராமநம்பி இறைவனைக் காண கைலாசம் சென்றுவிட்டார் என்பதாக அரண்மனையிலிருந்து தந்தூராவின் மூலம் ஊர்மக்களுக்குச் செய்தியினைத் தெரிவித்தார்.
அரச மரியாதையுடன் நகர் முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ராஜகுரு உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மறுநாள் காலையில் அரேபியர்களை அழைத்து அரச விருந்தளித்தார் மன்னர். அப்போது சுவாரஸ்யமான உரையாடல்கள் நீண்டு கொண்டே செல்ல இடை செய்தியாக நிலவு பிளந்து மீண்டும் சேர்ந்த செய்தியினைச் சொல்லி இன்றுவரை அந்தப் புதிரை என்னால் விளக்கி கொள்ள முடியவில்லை என்பதாக கூறினார் மன்னர்.
அப்போது அரேபியர்கள் மன்னர் சேரமான் பெருமாளே! நிலவு இரண்டாகப் பிளந்து மீண்டும் சேர்ந்தது உண்மை. அது எங்களின் தலைவர் இறை தூதர் முகமது நபி அவர்கள் நிகழ்த்திய அற்புதமே என்றார். என்ன நிலவைப் பிளந்து மீண்டும் சேர்த்தாரா? என்று வாயைப் பிளந்த வண்ணம் வியப்பில் ஆழ்ந்தார் மன்னர்.
அதற்கு அரேபியர்கள் மன்னர் பிரானே !இது மட்டுமல்ல இன்னும் பல அற்புதங்களை அவர்கள் நிகழ்த்துவார்கள். அவர்கள் இறைவனின் இறுதி தூதர் ஆவார்கள் என்பதாக கூறினர்.
அரேபியர்களின் நடவடிக்கைகளும் அவர்களின் வாழ்க்கை முறையும் நபிகள் நாயகம் நிலவைப் பிளந்து மீண்டும் ஒன்றாக சேர்த்தது போன்ற ஆச்சரியங்களைக் கண்டதன் மூலம் பெரும் ஈர்ப்பு கொண்டார் மன்னர் சேரமான் பெருமாள்.
அரேபியர்கள் இந்த நிலத்தில் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம் என்று அரசாணையும் வெளியிட்டார். மன்னரின் இவ்வாறான செயல் சேர நாட்டு மக்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையிலான தொடர்பை அதிகப்படுத்தியது.
இவ்வாறே சில மாதங்கள் கழிந்தன.
அரேபியர்கள் மீண்டும் தனது தாய் தேசத்திற்குச் செல்ல முற்பட்டனர். கப்பல் கட்டும் துறை முழுதும் சேர நாட்டு மக்கள் சூழ பெரும் விழா கோலம் பூண்டது.
அனைவரும் தன்னால் இயன்ற அன்பளிப்புகளைக் கொடுத்து அரபியர்களை வழி அனுப்பி வைத்தனர்.
அரண்மனையில் இருந்து கப்பல் கட்டும் துறை வந்த மன்னர் கப்பலின் மேலே ஏறி நாட்டு மக்கள் முன்னிலையில் வீரம் செறிந்த சேர நாட்டு மக்களே! நான் அரேபிய நாட்டில் தோன்றியிருக்கும் நபிகள் நாயகம் என்னும் தீர்க்கதரிசியைச் சந்திப்பதற்காக செல்கிறேன். என்னுடன் நமது தலைமை அமைச்சரும் வருகிறார் நாங்கள் சந்தித்து விட்டு சில மாதங்களில் நாடு திரும்பவும். எங்களின் பயணம் நலமும் வளமும் பெற்று மீண்டும் இந்த சேர நாட்டின் மண்ணிற்குத் திரும்ப அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்றவாறு பிரசங்கம் செய்தார்.
மன்னர் சேரமான் பெருமாளையும் தலைமை அமைச்சரையும் பெரும் மதிப்பு மரியாதையுடன் தனது கப்பலின் உள்ளே அழைத்து சென்றனர் அரேபியர்கள். கப்பலில் பாய் மரம் ஏற்றப்பட்டது. காற்றின் திசையை நோக்கி கடற்கரை ஓரத்தில் இருந்து மெல்ல மெல்ல கப்பல் நகர்ந்தது. சேரமான் பெருமாள் வேந்தர் தனது கைகளை அங்கும் இங்குமாக ஆட்டியபடி தனது நாட்டு மக்களை உற்சாகப்படுத்தினார். கப்பல் கட்டும் துறையே அதிரும் வண்ணம் சேரமான் பெருமாள் வேந்தரே வாழ்க! என்ற கோஷங்கள் விண்ணைப் பிளக்க செய்தது.
சேரமான் பெருமாள் மறைவு குறித்த இரு வேறு கருத்துக்கள் :
கருத்து - 1
சேரமான் பெருமாள் அரபு நாட்டிற்குச் சென்று நபிகள் நாயகத்தைச் சந்தித்து இஸ்லாத்தைத் தழுவி பின்னர் தாய் நாட்டிற்குத் திரும்பும் வழியில் ஓமன் என்னும் தேசத்தில் மறைந்ததாக இன்றளவும் அந்த நாட்டில் சேரமான் பெருமாள் அவர்களின் கல்லறையாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கருத்து - 2
சேரமான் பெருமாள் அரபு நாட்டிற்குச் சென்று நபிகள் நாயகத்தினைத் தரிசிக்க வேண்டும் என்று முடிவு செய்து அரேபியர்களுடன் கப்பலில் செல்லும் போது கப்பல் கடலில் மூழ்கி உயிரிழந்த தாக சொல்லப்படுகிறது.
அனேக நூல்கள் மற்றும் ஆய்வு கட்டுரைகளில் மேலே கூறப்பட்ட முதலாவது கருத்தே ஆதாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்டது. மாமன்னர் சேரமான் பெருமாள் அரேபியர்களுடன் அரபு நாட்டுக்குச் சென்று நபிகள் நாயகத்தினைச் சந்தித்து அவர்களது திருக்கரத்தில் இஸ்லாத்தைத் தழுவினார். தாஜுதீன் என்றும் பெயரிடப்பட்டார். பின்னர் தாய் நாட்டிற்கு திரும்பும் வழியில் ஒமன் என்னும் தேசத்தில் நோய்வாய் பட்டு மறைந்தார்.
தான் இறக்கும் முன் தன்னுடன் வந்த சகாக்களிடம் இந்த இஸ்லாம் நமது சேர நாட்டை சென்றடைய வேண்டும் என்று கோரிக்கை வைத்ததோடு மட்டுமல்லாமல் சேர நாட்டில் இறைவனை தொழுவதற்காக ஒரு இறை இல்லம் கட்ட வேண்டும் என்றும் ஆணையிட்டார். அதுதான் இன்று கேரள மாநிலம் கொடுங்கலூரில் உள்ள சேரமான் ஜும்மா மசூதி.
வெற்றிலையை கிள்ளிப் போடும் பழக்கம்:
அரேபியர்களுடன் சென்று மக்க மாநகரை அடைந்தார் மன்னர் சேரமான் பெருமாள். அவர் தமிழ் நிலத்தின் பாரம்பரிய முறைப்படி உடல் முழுவதும் தங்க நகைகளை அணிந்து முத்துக்கள் பொருந்திய கீரிடத்துடன் அரபுநாடு சென்ற மன்னரை அவ்வூர் மக்கள் சற்று விசித்திரமாகவே பார்த்தனர்.
தீர்க்கதரிசி இறைத்தூதர் நபிகள் நாயகத்தினை சந்தித்து அவர்களின் திருக்கரத்தில் இஸ்லாத்தைத் தழுவினார். பின்னர் தனது அரச உடைமைகளைக் கழற்றி எறிந்துவிட்டு பாமர மக்களைப் போல் உடை அணிந்து கொண்டார். அவர்களின் முறைப்படி அனைவரும் ஒன்று கூடி ஒரே தட்டில் உண்டு மகிழ்ந்தனர். மன்னர் சேரமான் பெருமாளோ சாப்பிட்ட பின் வெற்றிலை போடும் பழக்கத்தைக் கொண்டவர். இருப்பினும் அது அரபு நாடு என்பதனால் அங்கு செடி கொடிகள் சாத்தியமற்றது என்பதனை அறிந்து மௌனமாக இருந்தார்.
பின்னர் இச்செய்தி இறைத்தூதர் நபிகள் நாயகம் அன்னவர்களைச் சென்றடையவே அவர்களின் உத்தரவுப்படி ஒரு சற்பம் வெற்றிலையை மடக்கி தனது வாயால் கொண்டு வந்து சேரமான் பெருமாளிடம் கொடுத்துவிட்டு போனது. சற்பம் வாயில் நஞ்சு இருப்பதனால் அது கவ்வி கொண்டு வந்த வெற்றிலையின் மேல் பகுதி (காம்பு பகுதி) & கீழ் பகுதியைக் கிள்ளி விட்டு மீதமிருந்த வெற்றிலையைத் தனது வாயில் போட்டு மென்று சாப்பிட்டார் மன்னர் சேரமான் பெருமாள்.
இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் குறிப்பாக கடற்கரை ஓரங்களில் வாழும் முஸ்லிம் (கீழக்கரை, காயல்பட்டினம், பரங்கிப்பேட்டை, நாகூர்) வீடுகளில் அனேகமான பெரியோர்கள் வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தினைக் கொண்டவர்கள். அவர்கள் வெற்றிலையின் மேல் புறமுள்ள காம்பு பகுதியையும் கீழ்புறம் உள்ள பகுதிகளையும் கிள்ளி போட்டுவிட்டு மீதமிருக்கும் வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி போடும் பழக்கம் இன்றளவும் அவ்வூர் பகுதிகளில் தொடர்கின்றது.
தெரிந்து கொள்ள வேண்டியவைகள் :
1.மன்னர் சேரமான் பெருமாள் இஸ்லாத்தைத் தழுவிய முதல் இந்திய மற்றும் முதல் தமிழர் ஆவார்.
2.இந்தியாவில் கட்டப்பட்ட முதல் இறையில்லம் சேரமான் பெருமாள் வேண்டுகோளுக் -கிணங்க கொடுங்கலூரில் கட்டப்பட்ட சேரமான் ஜும்மா பள்ளிவாசல்.
மேற்கோள்கள் :
1. மறைவழி கண்ட மாமன்னர் சேரமான் பெருமாள் - ஏ.எம். யூசுப்
2. இசுலாமிய கலை களஞ்சியம் - எம்.ஆர்.எம். அப்துர் ரஹீம்.
3. ஆய்வு கட்டுரை - மூன்றாம் சேரமான் பெருமாள் வரலாறு
- முஹம்மது சுஹைப்
Published in Nagore Puranam September month magazine 2025

0 Comments