மகாதேவன் சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில அஞ்சல் தலைவர் ( Postmaster General) அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரி.
எவ்வளவு கோபமாக வேகமாக விவகாரம் புரிய வரும் புகார் கொடுக்க வரும் பொதுமக்களை உட்காரவைத்து அவர்களின் புகார் அல்லது குறைகளை இடைஇடையே பேசாமல் தடுக்காமல் கேட்டு தக்க பதில் கூறி மிக்க கோபமாய் வந்தவர் சிரித்து கொண்டே திரும்ப செல்ல வைப்பதில் கில்லாடி. சம்பந்தப்பட்ட பிரிவிற்குச் சென்று குறை களைய ஆலோசனை கூறுவதிலும் வல்லவர்.
மலை விழுங்கி என்னும் சொல் தீங்கிழைத்து திரவியம் தேடுவோரைக் குறிக்கும் சொல்.. ஆனால் மகாதேவனைப் பொறுத்தமட்டில் அவர் நல்லன புரிவதில் வல்லவர் என்று குறிப்பிடவே பயன்படுத்தினர்.அந்த அளவிற்கு எந்த செயலையும் நன்மையாய் முடித்து கொடுக்கும் பன்முக தன்மையர்.
பார்க்க சாதுவானவர். மூர்க்கமானவர் -களையும் சீக்கிரமாக நல்ல மார்க்கத்தைக் காட்டி நல்லவர்களாக மாற்றும் ஆற்றல் மிக்கவர்.
டில்லி இந்திய அஞ்சல் துறை பொது இயக்குனர் (Director General), அலுவலகத்திலிருந்து துணை பொது இயக்குனர் (D.D.G) தமிழ் நாடு மாநில அஞ்சல் துறை தலைவர் அலுவலக ஆண்டு ஆய்விற்காக சென்னை வரும் அறிவிப்பு வந்தது.
டில்லி சென்னை துரித புகைவண்டியில் சென்னைக்குச் செவ்வாய் காலை அவரின் குழந்தையுடன் சென்னை வருகிறார். வரவேற்கவும் என்று தந்தி வந்தது.
(Balbir Singh DDG arriving Delhi Chennai Tamilnadu Express with his child Receive) என்ற தந்தியை மகாதேவன் கையில் கொடுத்து புகைவண்டி நிலையத்திற்குள் அனுப்பிவிட்டு மற்ற அதிகாரிகள் பிளாட்பாரம் வாசலில் மாலையுடன் நின்றனர்..
முதல் வகுப்பு பெட்டியில் துவங்கி கடைசி பெட்டி வரை அத்தனை பெட்டிகளிலிருந்தும் இறங்கிய தலைப்பாகை கட்டி தாடி வைத்த குழந்தையுடன் வந்த அத்தனை பஞ்சாபியரையும் மகாதேவன் நீங்கள் DDG பல்பீர்சிங்கா என்று விசாரித்து ஓய்ந்து சாய்ந்து விழும் நிலைக்கு வந்துவிட்டார்.
பிளாட்பாரம் காலியாகி விட்டது.
அதிகாரிகள் மாலையுடன் வெளியில் கால்கடுக்க நின்று களைத்து விட்டனர்.
மகாதேவன் பார்வையில் மிரண்டு விழித்தபடி வயது வந்த கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணுடன் நின்ற பஞ்சாபியரைப் பார்த்து கும்பிட்டு எல்லாரையும் கேட்ட கேள்வியைக் கேட்டார். வந்தவர் கோபம் பொங்க வெடித்தார். கத்தினார்.
நல்ல வேளை அவரின் மடியில் தொங்கிய கிர்பானை எடுத்து குத்தவில்லை.
மகாதேவன் கண்களில் கண்ணீர் வழிந்தோட தந்தியை அவரிடம் காட்டி நடந்ததை நவின்றார்.
கடகடவென சிரித்தார் DDG.
அப்புறம் அவரையும் அவரின் மகளையும் மகாதேவன் அழைத்துவர அதிகாரிகள் மாலை அணிவித்து வரவேற்று அவரின் தங்கும் இடத்திற்கு அழைத்து சென்றனர்.
DDG மகாதேவனைப் பற்றி அழைக்க வந்த அதிகாரிகளிடம் விசாரித்தார். அவருக்குத் திருப்தியான பதில் கிடைத்தது.
அதன் பின் ஆய்வு மேற்கொண்ட ஐந்து நாள்களும் காலை பத்து மணிக்கு அவரின் மகளை அழைத்து சென்று சென்னையைச் சுற்றி காட்டும் பொறுப்பை மகாலிங்கத்திடம் ஒப்படைத்தார்.
மகாலிங்கம் ஒவ்வொரு நாளும் அவரின் மகளை அழைத்து சென்று சென்னையைச் சுற்றி காட்டிவிட்டு மாலை ஆறு மணிக்குத் திரும்பி வருவார்.
அதன் பின்னர் அந்த DDG ஆய்வு அறிக்கை தயார் செய்ய அவர் விரும்பிய வண்ணம் உதவி செய்தார்.
DDG டில்லிக்குத் திரும்பும்போது மகாதேவனிடம் என் மகள் தாயை இழந்தவள். தந்தைக்குரிய பாசத்தோடும் பரிவோடும் வளர்க்கிறேன். நீங்கள் இந்த ஐந்து நாள்களும் தந்தைக்குத் தந்தையாக தாயாக கவனித்து கொண்டீர்கள். உங்கள் உதவியை என்றும் மறக்க மாட்டேன் என்று சொல்லி விடை பெற்றார்.
வரும்பொழுது மகாதேவனை அழவிட்ட அந்த அதிகாரியின் கண்களில் கண்ணீர்.
- கவிஞர் மு.அ. அபுல் அமீன்
Published in Nagore Puranam September month magazine 2025


0 Comments