நான்‌ கண்ட பாரதி தொடர் - 04 | January 2024 | மு. முஹம்மது சுஹைப்

 


ஓர் தாயின் பிள்ளை:

ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர் -தம்முள் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ...

நாம் அனைவரும் பாரத தாயின் மக்கள். நம்முள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் சண்டைகள் இருந்த போதிலும் நாமெல்லாம் சகோதரர்கள், பாரத தாயின் புதல்வர்கள் என்று கூறி நாட்டு மக்களிடையே ஒருமைப்பாட்டை எடுத்துரைக்கிறார்.

உயர்ந்த நாடு :

நம் பாரத நாடு பெரும் சிறப்புகள் பல பெற்று உலக அளவில் உயர்ந்திருப்பதனை ,உலகிற்கு எடுத்துரைக்க நினைத்த பாரதி

"ஞானத்தி லேபர மோனத்திலே உயர் மானத்தி லேஅன்ன தானத்திலே, கானத்தி லேஅமு தாக நிறைந்த கவிதையி லேயுயர் நாடு

ஞானத்திலும் மானத்திலும் உயர்ந்த நாடு, அமுதம் போன்ற பல கானங்கள் நிறைந்த நாடு என்கிறார். மேலும் வீரத்திலும் உபகாரத்திலும் உயர்ந்த நாடு நம் பாரத நாடு என்கிறார்.

சுதந்திரத்தில் பாரதியார்:

பாரதியார் தனது பாடல்களின் மூலம் பேதமையிலிருந்த நாட்டு மக்களுக்கு சுதந்திர தாகம் குறித்து எடுத்துரைத்தார்.

"வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ? "

நாடு விடுதலை அடைவதற்காக சுதந்திர போர் புரியும் நமக்கு வீர சுதந்திர மன்றி வேறொன்றும் சுகமளிக்குமோ என்கிறார். மேலும் நாடு விடுதலை அடைவதே நம் அனைவரின் ஒரே குறிக்கோள் என்கிறார்.

"பிறந்தவர் யாவரும் இறப்பது உறுதியெனும் பெற்றியை அறிந்தாரேல் -மானம் துறந்தறம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது சுகமென்று மதிப்பாரோ?

சுதந்திரத்திற்காக போராடும் நமக்கு வந்தே மாதரம் ஒன்றே தாரக மந்திரம் ஆகும். இவ்வுலகில் பிறந்தவர்கள் எல்லாம் ஒரு நாள் இறப்பது உறுதி. இருக்கும் வரை மானத்துடன் வாழ வேண்டும் என்று கூறி நாட்டு மக்களிடம் சுதந்திர தீயை மூட்டினார் மகாகவி.

'வந்தே மாதரம் என்று வணங்கிய பின் மாயத்தை வணங்குவாரோ? வந்தே மாதரம் ஒன்றே தாரகம் என்பதை மறப்பாரோ? "

தேசமும் மாநிலமும் :

தாய் நாட்டினை நேசிப்பது போல் நாம் வாழும் மாநிலத்தையும் பெரிதும் நேசித்தவர் பாரதியார்.

"வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்"

மேற்காணம் இவ்வரிகளின் மூலம் பாரதியாரின் நாட்டுப்பற்றும் மற்றும் மாநில பற்று குறித்து அறிய முடிகிறது.

சுதந்திரப் போராட்டத்தில் பாரதி ஆற்றிய பணி :

தனது சுதந்திர தாகத்தை தணிக்க 1905 ஆம் ஆண்டு முதல் அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். சுதந்திரப் போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணம் செய்து கொண்டார். இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மக்களிடம் காட்டுத் தீ போன்ற பரவி தமிழர்களை வீறுக்கொள்ள செய்தது.

நாம் பெற்ற சுதந்திரம் :

அந்நியர்களிடமிருந்து போராடி நாம் பெற்ற சுதந்திரம் பல லட்சம் வீரர்களின் உயிர் தியாகத்தினால் உண்டானதாகும்.

'தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ!

புதிய பாரதத்தில் வாழ தகுதியற்றவர்கள்:

பாரதியார் தான் உருவாக்க நினைத்த புதிய பாரதத்தில் யாரெல்லாம் வாழ தகுதியற்றவர்கள் என்றும், அவர்களை நாட்டை விட்டு வெளியே போ போ என்றும் தமது கவிதைகளின் வாயிலாக உரைக்கிறார்.

" வலிமையற்ற தோளினாய் போ போ போ மார்பி லேஒடுங்கினாய் போ போ போ பொலிவி லாமுகத்தினாய் போ போ போ பொறி யிழந்த விழியினாய் போ போ போ"

வலிமை இல்லாத தோளினை உடையவனும், ஒடுங்கிப் போன மார்பினை உடையவனும், பொலிவில்லாத முகத்தை உடையவனும் இந்த புதிய பாரதத்தில் வாழ தகுதியற்றவர்கள் என்கிறார். மேலும்

"ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ தரும மொன்றி யற்றிலாய் போ போ போ நீதி நூறு சொல்லுவாய் காசொன்று நீட்டினால் வணங்குவாய் போ போ போ"

ஜாதி பேதங்களை பேசுபவர்களும், நீதியினை விலைக்கு விற்பவர்களும் இந்த புதிய பாரதத்தில் வாழ தகுதியற்றவர்கள் என்கிறார்.

தீண்டாமையற்ற தேசம் :

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பல தலைவர்கள் மற்றும் போர் வீரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிக் கொண்டிருந்தனர். ஆனால் பாரதியோ நாட்டின் உள்ளே மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த சாதி மத பேதங்களை எதிர்த்து தைரியமாக குரல் எழுப்ப தொடங்கினார். அக்காலத்தில் உயர் சாதியினர் மட்டுமே கோயில்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் பயன்படுத்தும் குளங்கள் மற்றும் கிணறுகளை தாழ்த்தப்பட்டவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று கொடுமையான கோட்பாடுகளும் பின்பற்றப்பட்டன.

இதனைக் கண்ட பாரதியின் மனம் கலங்கியது. பிராமண குளத்தில் பிறந்தவர் ஆயினும் பூணூல் அணிவதை தவிர்த்தார் பாரதி. சமுதாயத்தில் நடைபெறும் இந்த இழிவு நிலையை மாற்ற நினைத்த இவர் ஆதிதிராவிடர் இனத்தை சார்ந்த ஒருவரை அழைத்து அவருக்கு மந்திரம் ஓத கற்றுக் கொடுத்து உயர் சாதியினர் குளிக்கும் குளத்தில் குளிக்க வைத்து அவருக்கு பூணூல் அணிவித்தார்.

இச்செயலை கண்டு பலர் பாராட்டினாலும் சாதி பேதம் பேசும் சிலர் கடுமையாக சாடினர். பல இடையூறுகளும் இன்னல்களும் சூழ்ந்து வந்த போதிலும் தனது கோட்பாடுகளில் இருந்து கடுகளவும் பின் வாங்காமல் இருந்தார் பாரதி.

சுதந்திரப் போராட்டத்திற்கு பாரதியார் கையாண்ட ஆயுதம் :

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்றோர் துப்பாக்கியுடனும், மகாத்மா காந்தி போன்றோர் அகிம்சை வழியிலும் போராடிக் கொண்டிருக்க பாரதியார் கையாண்ட ஆயுதமோ அவரது எழுத்துக்கள். கூர்த்திட்டிய பல பாடல்களின் மூலம் நாட்டு மக்களிடம் விடுதலை உணர்வை தூண்டினார்.

சுதேசமித்திரன் எனும் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக பணியாற்ற தொடங்கிய இவர் சுதந்திர தாகம் குறித்து பல கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வெளியிட்டார். இவரது எழுத்துக்களுக்கு நாட்டு மக்களிடையே பெரும் ஆதரவு கிட்டியது. இதனை அறிந்த பிரிட்டிஷ் அரசாங்கம் இவருடைய பத்திரிகையை தடை செய்தது.

சுதந்திரத்தை வெளிப்படுத்தினார் :

நம் இந்திய திருநாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரே

“ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே... ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று ஆடுவோமே... "

என்று பாடி தனது சுதந்திர தாகத்தை வெளிப்படுத்தினார்.

சமுதாயப் புரட்சியில் பாரதி :

இந்திய திருநாட்டில் வாழ்ந்தவர்கள் தொழில்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்டனர். பிற்காலத்தில் தொழில்களின் பெயர்கள் சாதிகளாக மாற்றப்பட்டது. பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் கருதப்பட்டது. 30 கோடி மக்களை கொண்ட இந்திய திருநாடு முழுவதும் அனைவருக்கும் பொதுவென்று உரைத்தார் பாரதி. இதனை தனது பாடலில்,

“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் "

மேலும் ஒரு மனிதன் பட்டினியாக இருக்க மற்றவர்கள் எல்லாம் உணவு உண்பதற்கு அனுமதி இல்லை என்றும் தனது பாடலின் மூலம் புதியதோர் சமுதாய சட்டம் உருவாக்க நினைத்தார் பாரதி.

பாரதியின் சமுதாயப்பற்று :

மகாகவி பாரதியாரின் சமுதாயப் பற்றினை கூறுபவர்கள் எல்லாம் இவரது கவிதைகளில் பாரத சமுதாயம் என்னும் தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ள இவ்வரிகளை கூறுகின்றனர்,

எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்

எல்லாரும் இந்திய மக்கள்,

எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை

எல்லாரும் இந்நாட்டு மன்னர் நாம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர் ஆம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க!

மேற்கூறப்பட்ட இவ்வரிகள் பாரதி உருவாக்க நினைத்த புதிய பாரதத்தின் சட்டங்களாக கருதப்படுகிறது. மேலும் இவர் கூறுகையில் இந்த பாரத தேசத்து மக்கள் அனைவரும் பொது நோக்குடனே வாழ வேண்டும் என்கிறார்.

என் உணவு, நான் விலைக்கு வாங்கிய உணவு நான் சமைத்த உணவு நான் உற்பத்தி செய்த உணவு என்று யாரும் கூறக்கூடாது உணவு என்பது உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது அதனை பங்கிட்டு கொள்கின்ற உரிமை மனிதர்களுக்கு உடையது என்கிறார்.

புதிய சமுதாயம் :

புதியதொரு சமுதாயத்தை உருவாக்க நினைத்த பாரதி ஆன்மீக தூய நெறி பின்பற்றியும் குலப் பாகுபாடு இல்லா முறையையும் பின்பற்றினார்.

"நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் -இந்த நாட்டினில் இல்லை; குணம் நல்லதாயின் எந்தக் குலத்தினரேனும் - உணர் வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்."

சொல்லுதல் யாருக்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்ற வள்ளுவரின் குரளுக்கு ஏற்ப சாதி குல பகுபாடற்ற சமுதாயத்தை உருவாக்க நினைத்ததுடன் அதனை தனது வாழ்விலும் பின்பற்றியவர் மகாகவி.

- மு. முஹம்மது சுஹைப் 

Published in Nagore Puranam January month magazine 2024

Post a Comment

0 Comments