Nagore Puranam
தமிழ்மொழி தொன்மையானதே | February 2024 | மு. முஹம்மது சுஹைப்

தமிழ்மொழி தொன்மையானதே | February 2024 | மு. முஹம்மது சுஹைப்


இயலாததையும் இயன்றுக் காட்டும் இணையத்தில் இன்றளவும் பேச்சு பொருளாக இருக்கும் ஒரு செய்தி தமிழ் உண்மையாகவே தொன்மையானதா?.

நாம் தமிழர்கள், அதனால் தமிழ் மொழியில் பெருமையாக பேசுகிறோம். அதற்காக பிற மொழியை விட தமிழ் மொழி தொன்மையான மொழி என்று பொய் புகழ் சூட்டுகிறோம் என்றெல்லாம் இணையத்தில் விவாதம் செய்வதை நாம் நாள்தோறும் கண்டு கொண்டிருக்கிறோம். மேற்காணும் கேள்விகளுக்கும், இவ்விவாதங்களுக்கும் பதில் கூறுவதாக இத்தலையங்கம் அமையும் என நம்புகிறேன்.

மொழி என்பது ஒருவர் மற்றொருவர் இடையே தொடர்பு கொள்ள உருவாக்கப்பட்ட (Communication tool) இணைப்பு கருவியாகும். ஆதியில் ஒரு மனிதன் மற்றொரு மனிதர்களுடன் செய்கையில் பேசியதாகவும் பின்னர் அதனை வாய்மொழி கொண்டு பேசியதாகும் அதுவே நாளடைவில் எழுத்து வடிவம் பெற்றதாகவும் மொழியின் வளர்ச்சி குறித்து பல ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

உலகின் முதல் மனிதன் எங்கு எப்போது தோன்றினான் என்று தெரிந்தால் அவன் பேசிய மொழியே உலகின் மூத்த மொழி என்பது உறுதியாகும். நவனாகரிகம் வளர்ந்த இந்நூற்றாண்டிலும் பல்லாயிரக்கணக்கான ஆராய்ச்சிகள் பல மேற்கொண்டும் முதன் மனிதன் தோன்றிய பூமி இந்த தமிழ்நாடு தான் என்று கூறப்படுகிறது. அதற்கு காரணம் முதல் மனிதர் என்று சொல்லப்படும் ஆதம் இந்த தமிழகத்தில் தான் வாழ்ந்தார் என்பதற்கு பல சான்றுகள் உள்ளது.

பன்னெடுங்காலமாக தொண்டுத்தொட்ட தமிழ்நாட்டில் தமிழ் மொழியைத் தவிர வேறு எந்த மொழியும் பேசியதாக ஒரு வரலாறு கூட கிடையாது. அப்படியானால் தமிழ்நாட்டில் வாழ்ந்த முதல் மனிதர் பேசிய மொழி தமிழே என்பது அறுதியிட்டு கூற முடியும். அப்படி முதல் மனிதர் பேசிய மொழியே தமிழ் என்றால் அது தானே உலகின் மிகவும் தொன்மையான மொழி.

அடுத்து ஈழத்தில் கிடைத்த மண்பாண்ட சாசனம், தஞ்சை மற்றும் கோவையில் கிடைத்த சுடுமண் தாங்கிகள், ஈட்டி முனை, வாள், கீழடியில் கிடைத்துள்ள முதுமக்கள் தாழி, பானை ஓடுகள், மட்பாண்டம், போர் கருவிகள், எழுத்தாவணங்கள் இவைகள் எல்லாம் 1st BCE அல்ல, அதற்கும் மிக மிக தொன்மையானவை,

அடுத்து தமிழ் மொழியின் நூல்களில் மிகவும் தொன்மையான நூல் தொல்காப்பியம் ஆகும் இருப்பினும் இது முதல் நூல் அல்ல. இதற்கு முன்பும் பல நூல்கள் இருந்துள்ளதாக தொல்காப்பியர் தனது நூலில் "என்ப, என்மனார் " என்னும் சொற்றொடர்களை பயன்படுத்துவதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு எண்ணில் அடங்கா பல இலக்கண இலக்கியங்களும் தொன்மையான பல வரலாற்று சான்றுகளையும் கொண்ட நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை தொன்மையான மொழி என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற வள்ளுவனின் குரலுக்கேற்ப தமிழ் மொழியின் வரலாற்றை தெரிந்து கொள்ள அதனை முழுமையாக ஆராய்ந்து அறிந்த ஒருவரிடம் கேட்டு தெரிந்துகொண்டோ அல்லது ஆராய்ந்து அதன் மெய்த் தன்மையை அறிய முற்பட்டால் அப்போது உரைப்பார்கள் தமிழ் தொன்மையான மொழிதான் என்று.


- மு. முஹம்மது சுஹைப் 

Published in Nagore Puranam February month magazine 2024

Post a Comment

0 Comments