ஆண்டுதோறும் ஆட்டிப்படைக்கும் தலைப்பாக, விவாதமாக அமைவது தமிழ் புத்தாண்டு எப்போது? தை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? அல்லது சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்பதா? என அரங்கும் அதிர அலசுவார்கள். ஆனால் காலம் சென்ற மூத்த தமிழ் அறிஞர்கள் 'தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு' என புத்தியில் உரைக்கும் வண்ணம் நமக்கு எடுத்துரைக்கிறார்கள்.
தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என மூத்த தமிழ் அறிஞர்கள் ஒன்று என்று கூடியவர்களின் விபரங்களும் கருத்துக்களும்...
மறைமலை அடிகளார் :
19ஆம் நூற்றாண்டு தமிழ் அறிஞர். நான்காம் தமிழ் சங்கம் அமைத்த மகாவித்துவான் குலாம் காதிர் நாவலரின் அருமை மாணவர்களில் ஒருவர்.
தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என தமிழ் அறிஞர்கள் கூடி முடிவு செய்த மாநாட்டில் தலைமை பொறுப்பு வகித்தவர்களின் முக்கியமானவர். இவரோ முதன்மை சைவ சித்தாந்தவாதி.
தேவநேயப் பாவாணர் :
இருபதாம் நூற்றாண்டு தமிழ் அறிஞர். இவர் தமிழ் மொழிகளின் மீது அளவற்ற ஆர்வத்தால் சொற்களை ஆழமாக ஆராய்ச்சி செய்தவர்.
இவர் தமிழ் தேசியத்தந்தையாகப் போற்றப்படும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் ஆசிரியர்.
பாவலரேறு பெருஞ்சித்திரனார் :
20 ஆம் நூற்றாண்டு தமிழறிஞர். இந்தி எதிர்ப்பு போராட்டம்,தமிழீழ போராட்டம் ஆகிய மாபெரும் போராட்டங்களில் முதன்மை பங்கு வகித்ததோடு அதற்காக சிறைவாசமும் அடைந்தார்.
இவர் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றிக் கொண்டே 'பெருஞ்சித்திரன்' என்ற புனைப்பெயரில் பத்திரிகையில் எழுதினார்.
மு.வரதராசனார் :
மு.வா என்று அன்பாக அழைக்கப்பட்டவர். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார்.
மேலும் பெருமைக் கொண்ட சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவராக 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
கி.ஆ.பெ விசுவநாதர் :
'முத்தமிழ் காவலர்' என்று அறியப்பட்டார். தமிழ் இலக்கண கடல் என்றும் அழைக்கப்பட்டார்.
நீதி கட்சியின் முக்கிய பங்கு வகித்தவர்களில் முன்னோடி இவர்.
திரு.வி.க :
இந்திய விடுதலைப் போராட்டங்களில் பங்கு கொண்டவர். தமிழ் தென்றல் என்ற சிறப்புப் பெயரை கொண்டு அழைக்கப்பட்டார்.
திராவிடன்,தேசபக்தன், நவ சக்தி உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியராக பணியாற்றியவர்.
பாரதிதாசன் :
புரட்சிக்கவிஞராகவும் 80க்கும் மேற்பட்ட நூல்களையும் இயற்றி பாரதிதாசன் பல்கலைக்கழகம் என்று நாடு போற்றும் அளவு பிரபலமானவர்.
புதுச்சேரி மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என தமிழ் அறிஞர்கள் கொண்டு வந்த தீர்மானத்தின் முக்கியமான கருத்துக்கள்.
1) "தை மாதத்தைப்பற்றி இலக்கியங்கள் பெருமை பேசுவதால், அதுவே புத்தாண்டின் தொடக்கம்"
2) "தைத் திங்கள் தண்கயம் படியும்" என்று நற்றிணையும், “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" எனக் குறுந்தொகையும், “தைஇத் திங்கள் தண்கயம் போல்" என புறநானூறும்
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என கலித்தொகையும் பாடியுள்ளது. இவை அனைத்தும் தை மாதத்தை மட்டுமே சிறப்பித்துள்ளன.
3) குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல்,பாலை என ஐவகை தமிழ் நிலத்தில் பாலை என்பதொன்று தனியாக இருந்ததில்லை. குறிஞ்சி நிலத்திலும் முல்லை நிலத்திலும் ஏற்படும் பருவநிலை மாற்றத்தினால் புல் பூண்டு, செடி, கொடி இன்றி காய்ந்து பாலை நிலமாக மாறிவிடும்.
இது சித்திரையின் போதுதான் நிகழும். எனவே இத்தகைய வருந்தத்தக்க காலநிலையை புத்தாண்டாக கொண்டாடியிருக்க முடியாது.
4) நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள் தரணி ஆண்ட தமிழனுக்குதை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!
- பாவேந்தர் பாரதிதாசன்.
மேற்பட்ட இலக்கிய கருத்துக்களை நம் ஆராய்ந்து பார்த்தால் நமக்கும் புரியும் தமிழர்களின் புத்தாண்டு தை மாதமே ஆகும். அறுவடைக்கு தயாரான பிறகு அதனை அறுவடை செய்து அதனை கொண்டு நன்றி செலுத்தும் நிகழ்வே பொங்கல் விழாவாகும்.
பொங்கல் ஒரு மதத்தையோ சாதியையோ வைத்து வழிபடும் விழா ஆகாது. மாறாக அது விவசாயம் செய்து அறுவடைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி செலுத்தும் வகையில் அமைந்த ஒரு தமிழ் சமுதாய பண்டிகை ஆகும்.
தமிழ் மக்களாகிய நாம் தை முதல் நாள் அன்று, வீடுகளில் பொங்கல் சமைத்து விவசாய பெருமக்களுக்கு நன்றியுனை உரித்தாக்குவோம். அந்நந்நாளில் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ள வேண்டுகிறேன்.
- நாகூர் செய்கு அப்துல் காதிர்
Published in Nagore Puranam January month magazine 2024

0 Comments