நான்‌ கண்ட பாரதி தொடர் - 05 | February 2024 | மு. முஹம்மது சுஹைப்

 


துயில் எழுப்பிய புதிய பாரதம் :

வந்தே மாதரம் என்ற சுதந்திர சுடரும், அடிமைத்தனத்திற்கு எதிராக இருந்த புரட்சியும் கொண்ட இந்திய மக்கள் பாரத தாயை புதிய திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்பினர்.

"மதலையர் எழுப்பவும், தாய்துயில் வாயோ? மாநிலம் பெற்றவள் இஃதுன ராயோ?'

இவ்வரிகளை பாடி எழுப்பிய புதிய பாரதத்தில் மாநிலங்களிலும் அதற்கு இடையே இருந்த பிரிவினை சுவர்களும் இடிந்தன. இனப்பிரிவு வேலிகளும் தகர்ந்தன. எல்லோரும் இந்தியராயினர். மேலும் பாரதி மேலும் பாரதி உருவாக்கிய புதிய சமுதாயத்தில் பிரிவினை உணர்ச்சிக்கு இடமே இல்லை.

ஒப்பற்ற சிந்தனை:

பாரதியாரின் மேன்மையான சிந்தனைக்கு ஒரு எடுத்துக்காட்டு

"கேளடா மானிடவா... எம்மில் கீழோர்... மேலோர் இல்லை "

நம்மிடையே யாரும் உயர்ந்தவரும் இல்லை, யாரும் தாழ்ந்தவரும் இல்லை. இந்நாட்டில் வாழ்பவர்கள் அனைவர்களும் அரசன் என்ற கருத்துடன் உலாவுவோம் என்கிறார். மேலும்

"சிறியதோர் வயிற்றினுக்காய் நாங்கள் ஜன்மமெல்லாம் வீணாய் மறிகள் இருப்பதுபோல் - பிறர் வசந்தனில் உழல்வதில்லை "

இவர் கண்ட புதிய சமுதாயத்தில் சொத்துக் குவிப்பு இல்லை, பதுக்கல் இல்லை, இன்னும் சொல்லப்போனால் மனிதன் உணவை மனிதனை பறிக்கும் வழக்கமும் இல்லை. சோற்றுக்கு பஞ்சம் இல்லாத ஒரு தன்னிறைவு சமுதாயத்தை உருவாக்க நினைத்தார் பாரதி.

" ஏழை யென்றும் அடிமையென்றும் எவனும் இல்லை. ஜாதியில், இழிவு கொண்ட மனித ரென்பது இந்தியாவிலேயே இல்லை".

இந்திய திருநாட்டில் எவர் ஒருவரும் ஏழைகள் என்றும் இல்லை, அடிமைகள் என்றும் இல்லை. ஜாதி பேத பாகுபாடு போன்ற இழிவான செயல்களை பின்பற்றக் கூடியவர்கள் இந்த இந்திய திருநாட்டிலேயே இல்லை என்கிறார்.

வாழி கல்வி செல்வம் எய்தி மனம கிழ்ந்து கூடியே மனிதர் யாரும் ஒருநிகர் சமானமாக வாழ்வமே

மேற்கொண்ட இச்சொற்றொடர்களின் விடுதலை பெற்ற இந்திய திருநாட்டின் புதிய சமுதாயத்தின் ஒருங்கிணைந்த குரலாகும்.

"நீதி நெறியினின்று பிறர்க்கு தவும் நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்"

நேர்மையான வழியில் வாழ்ந்து பிறருக்கு உதவி செய்து வாழ்பவர்களே நன்மக்கள் ஆவார்கள். இவர்களே மேல் ஜாதியினரும் ஆவார்கள். மற்றவர்கள் எல்லாம் கீழ் சாதியினரே என்கிறார்.

"சாத்தி ரங்கள்பல தேடினேன் அங்கு சங்கையில் லாதன சங்கையாம்".

மேலும் இவர் சாத்திர சம்பிரதாயங்கள் மூடநம்பிக்கைகளால் உருவாக்கப்பட்டவை என்றும் கூறினார்.

கல்வியும் பாரதியும்:

இந்தியாவை ஆளும் ஆட்சி மொழியாக ஆங்கிலம் இடம் பெற்றிருந்தது. மற்ற மொழிகளை காட்டிலும் பெரிதும் வரவேற்கப்பட்டது. இந்தியர்கள் பலரின் மனதையும் ஆங்கிலம் கவர்ந்தது.

இளநிலை முதல் பல்கலைக்கழகம் வரை ஆங்கிலமே முதன்மையாக கருதப்பட்டது. இதனை மாற்றியமைக்க நினைத்த பாரதி புதிய சமுதாயத்தில் தாய்மொழிக்கே முன்னுரிமை வழங்க முடிவு செய்தார். இதன் மூலம் வான் புகழ் பெற்ற வளமையான தமிழ் மொழியின் நுட்பங்களை உலகிற்கு எடுத்துரைக்க நினைத்தார்.

நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க நினைத்த இவரது கல்விக் கொள்கையில் தாய்மொழிக்கே முதலிடம். வரலாறு, கணக்கு, மத படிப்பு, ராஜ்ய சாஸ்திரம், போதிக சாஸ்திரம், கைத்தொழில், தோட்ட பயிற்சி ஆகிய பல்வேறு துறைகளும் கற்பிக்கும் பாடங்கள். புத்தகங்கள் இலவசம். கல்விக்கு ஒரு ரூபாய் கூட கட்டணம் இல்லை.

இவரது கல்வி திட்டத்தில் தொடக்கக் கல்வி என்பது வெறும் ஏட்டுப் படிப்பாக மட்டுமில்லாமல் அறிவார்ந்த சமுதாயத்தினரை உருவாக்கும் கல்வியாக அமைந்தது.

இயற்றமிழின் இலக்கண இலக்கியங்கள் மட்டுமல்லாது, இசை தமிழும் நாடகத் தமிழும் ஒன்று சேர்ந்து உயர வேண்டும் என்று நினைத்தார். இசைத்தமிழில் கிளி பாட்டு, நலங்கு பாட்டு, பள்ளியறை பாட்டு, அம்மானைப் பாட்டு, தாலாட்டு பாட்டு முதலிய பாடல்களெல்லாம் தேனினும் இனிய பாடல்கள் என்பதனை ஏன் மறந்தோம் என்று கேட்குமாறு புதிய யுகம் ஒன்று வளர்ந்து வரும் என்றார்.

நல்லிணக்க பாரதி:

தமிழ்நாட்டில் பொதுவுடமைக் கட்சியை தொடங்கிய சிங்காரவேலனுடன் நெருங்கிய நட்புணர்வு கொண்டிருந்தவர் பாரதி. பிற்காலத்தில் காந்தியடிகளோடு பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்த போதும் தொடர்ந்து காந்தியடிகளை புகழ்ந்து "வாழ்க நீ எம்மான் என்று "பாடினார்.

" இந்திரன் வச்சிரம் ஓர்பால் - அதில் எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால் மந்திரம் நடுவுறத் தோன்றும் அதன் மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?"

மேற்காணும் இவ்வரிகளில் துருக்கர் என்ற சொல் தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமியர்களை குறிக்க பயன்படுத்தும் சொல்லாகும். இதன் மூலம் பாரதியார் அரசியல் களத்திலும் சமய நல்லிணக்கத்தை பேணியவர் என்று அறிந்து கொள்ள முடிகிறது.

புதிய பாரதத்தில் பெண்கள்:

"விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்"

பெண்கள் வீட்டிலேயே அடிமைப்பட்டிருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என்று நினைத்த பாரதி, பெண் சக்தி பழைய குருட்டு மரபுகளால் முடக்கப்பட்டவள் அன்றி புதுமைப் பெண்ணாக உருவாக வேண்டும் என்கிறார்.

ஆணும் பெண்ணும் சமம் என்பதால் தான் இவ்வையகம் தலைக்கும் என்பதையே சமுதாயத்தின் உயர் கூற்றாக கருதுகிறார். மேலும் பருவமுருவதற்கு முன் திருமணம் செய்வதையும். விரும்பாத வரை மணந்து கொள்ள வற்புறுத்துவது போன்ற அடிமைத்தனங்களையும் தகர்த்தெறிந்தார்.

"மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்"

இந்திய விடுதலை என்ற மாபெரும் போரில் அரசியல் விடுதலை, சமுதாய விடுதலை என்பவற்றோடு பெண் விடுதலை என்பதனை ஓர் இன்றியமையாத கருத்தாக கூறி போராடியவர் மகாகவி பாரதியார்.

"ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே"

ஆடு மாடுகளை போன்று பெண்களும், ஐந்தறிவு ஜீவனாக கருதி ஆணாதிக்கத்தின் அடிமை தனத்தில் மூழ்கியிருந்த பெண்களை விழிப்படைய செய்தவர் பாரதியார். இதனை தனது பாடலில்

'ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவி லோங்கி, இவ் வையம் தழைக்குமாம்"

ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் சமமானவர்கள் என்று நினைக்கும் போது இந்த நாடு அறிவியலில் ஓங்கி சிறப்புப் பெறும் என்கிறார்.

இன்றைய காலத்தில் பாரதியின் கனவை நினைவாக்கும் வண்ணம் பெண்கள் நாட்டை ஆள்கின்றனர், சட்டங்கள் இயற்றுகின்றனர், வானூர்தி இயக்குகின்றனர், விண்ணுக்கு சென்று ஆய்வு மேற்கொள்கின்றனர். ஆழ்கடல் முதல் ஆராய்ச்சிகள் வரை அனைத்து துறைகளிலும் சாதித்து புதுமைப் பெண்ணாக திகழ்கின்றனர்.

- மு. முஹம்மது சுஹைப் 

Published in Nagore Puranam February month magazine 2024

Post a Comment

0 Comments