நீரின்றி அமையாது உலகு | March 2024 | கவிஞர் மு.அ. அபுல் அமீன்

 


உலக நீர் நாள் மார்ச் 22. நிலத்தில் வாழும் மக்கள் மற்ற உயிரினங்கள் மரம்,செடி,கொடிகள் உட்பட்ட தாவரங்களின் உலகம் நீரில்லையேல் சீர்கெடும். போர் மூளும். உலகம் அழியும்.

இதனை உணர்ந்து தமிழ்நாட்டில் சிறு கிராமம் தொடங்கி பெரு நகரம் வரை வாய்க்கால் வழியோடும் நீர் குளங்களில் பிற நீர் நிலைகளில் நிறைந்து பெரும் பயன் விளைவித்ததை முதியோர் அறிவர். இன்றைய ததை இளைஞர்களுக்கு விந்தையான செய்தி.

" அறையும் பொறையும் மணந்த தலைய, எண்நாள் திங்கள் அனைய கொடுங்கரைத், தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ" என்று புறநானூறு 118 வது பாடல் பகர்கிறது.


அதாவது நீளம் குறைந்து கொள்ளளவு அதிகம் கொண்ட எட்டாம் பிறை வடிவில் ஏரி குளம் அமைய வேண்டும் என்று இப்பாடல் அறிவுறுத்துகிறது.

வாய் நன்கு அமையாக் குளனும், வயிறு ஆரத், தாய் முலை உண்ணாக் குழவியும், சேய் மரபின், கல்வி மாண்பு இல்லாத மாந்தரும், இம்மூவர் நல் குரவு சேரப்பட்டார்" என்று செப்புகிறது திரிகடுகம் 83 ஆம் பாடல்.

பெரும்படையைத் தடுத்து நிறுத்தும் வீரர்கள் போல் ஆற்று வெள்ளத்தைக் கற்சிறை தடுத்து நிறுத்துவதாக தொல்காப்பியம் கூறுகின்றன.

ஆற்றின் இருபுற மதகுகளையே கற்சிலை என்ற சொல் குறிக்கிறது. மதகுகள் வாய்க்கால்கள் அனைத்தையும் இடித்து தகர்த்து மெகா மாடிகள் கட்டுவோருக்குக் கட்டியம் கூறவா முடியும். சுட்டிகாட்டி இடித்துரைத்து இனியும் இம்மக்கள் விரோத செயல்களைச் செய்யாது தடுக்க வேண்டும்

பெருக்கெடுத்து ஓடும் நதிக்கரையில் அமர்ந்து இருந்தாலும் நீரை வீண் விரயம் செய்யாதீர்கள் என்பது செம்மல் நபி செப்பிய மொழி..

சிறுபஞ்ச மூலத்தில் காரியாசான் பொது, கிணறு வரத்து கால் மிகை நீர், வெளியேற்று கலிங்கு மதகுகள், அமைப்போர் சொர்க்கம் புகுவர் என்று கூறுகிறார்.

குளம் குட்டைகளில் குளிப்போர் நீரில் முக்குளித்து அடியில் கிடக்கும் மணலை இரு கைகளிலும் அள்ளி வந்து கரைக்கு மேல் கொட்டுவர். குளிக்கும் எல்லோரும் எடுக்கும் மணலால் நீர் நிலைகள் ஆழமாகி நீர் நிரம்பி தளும்பும். வரண்டு வண்டலாகாது.

மதகுகளில் ஏறி குதித்து விளையாடும் சிறுவர்கள் இன்னும் அதிகமான மணலை அள்ளி கொண்டு வந்து கரையில் கொட்டுவர்.

தூர் வாரும் பெரும் செலவும் பேரழிவும் தவிர்க்கப்படும். அக்கால நிகழ்ச்சி எக்காலமும் நினைவில் நிற்கும்.

இக்காலத்தில் குப்பைகளைக் கொட்டி நீர் நிலைகளைத் துர்க்கும் மக்கள் சிந்திக்க வேண்டும்.

சிலப்பதிகாரம் மாமழை போற்ற நான்மணிக்கடிகை மழையின்றி மாநிலம் இல்லை என்கிறது.

மழை பெய்ய புரிவாயே தெய்வமே, நல்ல மழை பெய்ய புரிவாயே என்று வண்ணச் சாரம் தண்டபாணி சுவாமிகள் வேண்டுகிறார்.

மாநபிகள் இறைவனை வேண்டி மழை பெய்ததை மழை அழைப்பித்த படலம் என்று ஒரு படலமே பாடினார் உமறுபுலவர் சீறாபுராணத்தில்.

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து என்று ஆண்டாளின் திருப்பாவை பாடுகிறது.

இக்காலத்தில் மழையை வேண்டுகிறோம். மழை பெய்து மழை நீர் ஓடும் அனைத்து வாய்க்கால்களையும் அடைத்து உடைத்து நீர்த்தேக்கங்களை ஆக்கிரமித்து அபகரித்து அடுக்குமாடிகள் கட்டிடம் கட்டி ஆபத்தை விலை கொடுத்து வாங்கிவிட்டு அபாயம் என்று அலறி என்ன பயன்?

மீண்டும் நீரோடும் வாய்க்கால்கள் நீர் தேக்கங்கள் எங்கெங்கு தேவையோ அங்கெல்லாம் தோன்ற வேண்டும். இல்லையேல் தோற்று தொலைவோம். நாடு நலியும்.

கவிஞர் மு. அபுல் அமீன் 

Published in Nagore Puranam March month magazine 2024

Post a Comment

0 Comments