இறைவன் அருளிய
திருமறைப் புகழை
எடுத்துச் சொன்னால் முடியுமா – அது
எத்தனை நூல்கள்
எழுதிய போதும்
எல்லா விளக்கமும் அடங்குமா?
இரசூல் நபிகளின்
நாற்பது வயதில்
இறங்கிடத் தொடங்கிய வசனங்கள்
தொடர் இருபத்து மூன்று
ஆண்டுகள் வரையிலும்
இறங்கிய நல்ல தருணங்கள்.
வேதநூல் தெளிவுரை
வேண்டிய நன்மைகள்
வேண்டா தீமைகள் பிரித்திடும் – இது
தெளிவாம் அத்தாட்சி
ஒளி சத்தியத்தை
தெளிவாய் நினைவில் இறுத்திடும்.
ஞானம் நிறைந்தது
கண்ணியம் மிக்கது
நேர்வழி காட்டிடும் மதிப்புடன் – இது
அருள் நிவாரணம்
நல்லுப தேசம்
அனைத்தும் வழங்கும் உவப்புடன்.
உறுதியானது பாதுகாப்பிலே
உலகோர் பெற்ற அருட்கொடை – இது
உயிருள்ளது
இறக்கி வைத்தது
புனிதம் தாங்கிய உயிர்விடை.
சட்டம் உண்மை
ஆக்கி வைத்தது
சகருக்கும் நற்செய்தி – இது
அச்சம் ஊட்டி
எச்சரிப்பது
பரிசுத்தம் போற்றும் உயர் விதி.
சங்கைக் குரியது
மேன்மைக் குரியது
அரபி மொழியை உடையது – இது
உயர்வேயானது
வியப்பு மிக்கது
உயர் ஆதாரங்கள் நிறைந்தது.
அல்லாஹ்வின் கயிறு
ஆதாரமுள்ளது
அனைத்தும் நினைவில் ஊட்டி விடும் – நம்
அத்தனை பேர்க்கும் .
- கவிப்பேரொளி சே.அப்துல் லத்தீப் (நீரை. அத்திப்பூ)
Published in Nagore Puranam October month magazine 2025

0 Comments