சித்திக்கு மகனாகவும்,
அத்தைக்கு மருமகனாகவும் இருப்பதை விட,
பெற்றத் தாய்க்கு மகனாக இருப்பது
பெரும் பேறு என்பதனை மறந்தது ஏனோ தமிழா?
ஈன்றெடுத்த தாய்மொழியை மறந்து,
எவளோ ஒருவளுக்கு மகனாக மாற,
தன் அடையாளத்தை மாற்ற நினைக்கும் தமிழா!
பெரும் பேறு பெற்றெடுத்த தாய்க்கு மகனாகவும்
தத்தெடுத்த தமிழுக்கு தனயனாகவும் வாழ்வது
என்பதனை மறந்தது ஏனோ தமிழா?
கன்னித் தமிழில் காவியமும்,கவிச்சுவை காதலும்,
இலக்கியமும் இன்னும் பல நூற்கள் இருந்தும்,
இவற்றையெல்லாம் மறந்த தமிழா?
ஒரு பருக்கை சோற்றுக்கு ஊரை விற்றார் போல்,
பேர் பெறுவதற்காக
பெற்றவளை மறந்தது ஏனோ தமிழா?
ஆயிரம் நீ கற்றாலும்,
ஆன்றோர் சான்றோர் என பெயர் பெற்றாலும்,
அன்னை தாய்மொழி உனக்கு
தமிழ் என்பதனை மறந்தது ஏனோ தமிழா?
உடைகளை மாற்றினாலும்,
உணவுகளை மாற்றினாலும்,
உன் குருதியில் ஓடுவது
தமிழினக் குருதி என்பதனை மறந்தது ஏனோ தமிழா?
சொச்ச ரூபாய் சம்பாதித்த பின்னர்,
மெச்சும் வாழ்க்கைக்காக,
மிச்ச அடையாளங்களையும் மாற்றிவிடும் தமிழா!
நாளைய சமுதாயம் உன் வரலாற்றைத் தேடினால்,
அது உனக்கு இழுக்காகிவிடும் என்பதனை
மறந்தேனோ தமிழா?
- மு. முஹம்மது சுஹைப்
Published in Nagore Puranam October month magazine 2025

0 Comments