இளங்கன்றுகளின் மரணம்
இளங்கனவுகளின் இரத்தம்
வீதியில் விழ யார் காரணம்?
மூச்சு முட்டுகிறது
ஓட்டில்லா சிறார்களுக்கும்
வீட்டை நிர்வகிக்கும் பெண்டிருக்கும்
கூட்டி வந்த குடும்பத் தலைவனுக்கும்
மூச்சு முட்டுகிறது
காவிய நாயகனின் முகம்
காண சென்ற கூட்டம்
தள்ளுமுள்ளு தடியடி என நீளுது
அரசியல் பகடையாட்டம்
விரைகின்றன 108க்கள்
மேலும் மேலும் மக்கள் திரள்
மூச்சு முட்டுகிறது
கதையின் நாயகர்கள் சூழ்ந்து
கதை சொல்லுகிறார்கள்
உயிரற்ற உடல்களை
வைத்துக் கொண்டு
ஊகித்தறிய முடியா
உண்மைகளுக்காக
ஊர் வாயை மெல்லுகிறார்கள்
அழகழகாய் புனையப்பட்ட கதைகளைக் கொளுத்தி நீட்ட மக்கள்
கொழுந்து விட்டெரியும் பொய்களில் மாயும் விட்டில்களாகிவிட்டார்கள்
தலைக்கு விலை வைத்துவிட்டபிறகு-அது
கொலையில் வராது
கூடிய விரைவில்
சிலைகள் எழும்
மாலைகள் விழும்
மற்ற நாள்களில்
பறவைகள் எச்சம்
பாவத்தின் மிச்சம்
அரசியல் த(ரு)றுதலைகளோ ஆஜராகின்றன அவசர கதியில்
கொள்கைகளோ விட்டுச் சென்ற பாதணிகளாகி வீதியில்
கூட்டம் அகற்றி வெளியேறுகையில்
நாசியில் மூச்சில்லை
ஆதர்ச நாயகனின் உதடுகளிலும்
உண்மை(யில்) பேச்சில்லை
தண்ணீர் புட்டிகள் வீசுகிறார்கள்
சினிமா கொட்டகையில்
சில்லரை கொடுத்து
கவரி வீசியவர்களை நோக்கி
கண்ணீர் விட்டு கதறியழுபவர்களை நோக்கி
தண்ணீர் புட்டிகளை வீசுகிறார்கள்
மூச்சு நின்று போனவர்கள் பிணவறையில்
பேச்சு நின்றபாடில்லை ஊர் எல்லையில்
கனவு நாயகனுக்கும் அவன்
கடைசி ரசிகனுக்கும் கூட சுய ஒழுங்கில்லை
சுற்றி நின்ற சட்டம் ஒழுங்கும்
தன் கடமை செய்யவில்லை
வேடிக்கை பார்க்க வந்த உயிர்கள் விலை மலிவு
அடுத்தடுத்த நிகழ்வுகள்
அரசியல் பொழிவு
அரசியல் சதுரங்கம்
அதில் எளிய மனிதர்களின் குரல்வளை நெறிக்கப்படும்
அரசியல் சாதுர்யம்
அது காலத்தின் பேழையில்
முன்மாதிரி யாக்கப்படும்
வானத்து நட்சத்திரமா
பார்த்து ரசிக்க
இது- சினிமா நட்சத்திரம்
சிந்தித்து நட
- கவிஞர் சூ. சிவராமன்
Published in Nagore Puranam November month magazine 2025

0 Comments