ஏழுகடல் நீரையும் எழுதும்மையாக்கினால்
எழுதுகோல்தாங்கவேண்டும்- என் எண்ணத்தின் வலிமையை
இன்னும்மடங்காக்கியே இறையருள் காக்க வேண்டும்.
வாழுமுயிர் எல்லாமும் வணங்கிடும் தூயவன்
வாழ்த்துவான்எழுத்தில்நிற்பான்- எம்
வள்ளல் இர சூல்நபி வாழ்க்கையை எழுதஎன் வரிகளில் துணையிருப்பான்,
ஏழைபோல் வறுமையில் எப்போதும் வாழ்ந்தவர் இதயத்தால் உயர்ந்த செல்வர்
அவர் எளிமைநிறை வாழ்க்கையை ஏற்றுமே நடப்பவர்
எதனையும் எளிதில் வெல்வர்.
பாழ்பட்டு நின்றதாய் பண்புகள் அற்றதாய்
பாலைவன மக்கள் உள்ளம்- தம்
பாதையில்தீமைகள் பரவிட வாழ்ந்தார்கள்
பாவத்தில் அனைத்து இல்லம்.
அம்மண்ணில் தீன்பயிர் அழகுற செழித்திட
ஆண்டவன் அருளைப் பற்றி இவர்
ஆற்றிய சேவைகள் ஏற்றுபின்மக்களும்
எழுந்தார்கள் தீனைச் சுற்றி எம்முறை
எடுத்தோதி இயம்பியே எழுதினும்
எத்தனை நூல் அடங்கும்- என்
எழுதுகோல் வலிமைபெற இறைவனே அருளுவான் எல்லையில் பலமடங்கும்.
ஈருலகத் தலைவராய்
எல்லையிலாப்புகழுடன் இருக்கும்
நபிவாழ்க்கைசொல்ல- என் இதயத்தில் குர்ஆனின்
உண்மை ஒளிகாட்டிட ஏந்துகிறேன் இருகை மெல்ல,
சேருகிறஎழுதுகோல் சிந்தைநிறை புகழ்சொல்ல
செயல்பாட்டை உயர்த்து
அல்லாஹ் உன் சிந்தனையைமட்டுமே
சிரம்பணிந்து ஏற்கிறேன் சீர்நபிவாழ்வைச்சொல்ல!.
- கவிப்பேரொளி சே.அப்துல் லத்தீப் (நீரை அத்திப்பூ)
Published in Nagore Puranam November month magazine 2025

0 Comments