கல்வியில் சிறந்த தமிழ்நாடு | November 2025 | மு. முஹம்மது சுஹைப்

 


உலகையே அச்சுறுத்திய கொரோனா நோய் தொற்று மெல்ல மெல்ல குறைந்து இயல்பு நிலையை எட்டிய காலம் அது. 

என்னுடன் பிறவா சகோதரன் தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்த பின் முனைவர் பட்ட ஆய்வினைத் தொடங்க பதிவு செய்வதற்காக சென்னை பல்கலைக்கழகம் இன்று இரவு செல்வதாக சொன்னான். உடன் நானும் வருவதாக சொல்லி இரு தினங்களுக்கான உடைகளை எடுத்துக்கொண்டு ரயில் நிலையத்தை சென்றடைந்தோம்.

சற்று நேரத்தில் ரயில் வந்தது. எங்கள் ஊரில் இருந்து கிளம்பி சரியாக எட்டு மணி நேரம் தொடர் பயணத்திற்கு பின்னர் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

அங்கிருந்து ரேப்பிடோ செயலியில் புக்கிங் செய்து ஆட்டோ ஏறி திருவல்லிக்கேணி பிரதான சாலையை வந்தடைந்தோம்.

அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் ஒரு நாள் வாடகையாக 700 ரூபாய் கொடுத்து தங்கியிருந்தோம். பயண களைப்பால் சற்று ஓய்வெடுத்த பின்னர் என் சகோதரன் அறையில் என்னை இருக்க சொல்லிவிட்டு கோப்புகளை எடுத்துக்கொண்டு சென்னை பல்கலைக்கழகத்தை நோக்கி விரைந்தான். 

ஒரு மணி நேரத்தில் திரும்புவதாக சொன்னவன் வெகு நேரமாகியும் திரும்பவில்லை.

அறையில் தனித்தே இருப்பது சலித்துப்போனதால் வெளியில் வந்தேன். தெரியாத ஊர் அறியாத முகங்கள். அவன் வரும் வரை நேரத்தை எவ்வாறு போக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தபோது எனக்கு தெரிந்த ஒரே பொழுதுபோக்கு நூல்கள் படிப்பது.

மைதான விளையாட்டு, கைபேசி விளையாட்டை விட நான் அதிகம் நேசித்து பொழுதைக் கடத்தியது புத்தகத்துடனே. 

கொரோனா தொற்று அதிகரித்தது உயிர்பலி வாங்க தொடங்கிய வேலை. 2020 ஆம் ஆண்டு அரசாங்கம் ஊரடங்கு என்று சொல்லி எல்லோரையும் வீட்டிற்குளேயே சிறை வைத்தது. அப்போது என் சகோதரனால் எனக்கு அறிமுகமான நூல்களின் மீதான பற்று இன்று வரை குறையவில்லை. அதன் விளைவு இன்று அமீரகத்தில் பணிபுரியும் என்னையும் அன்னைத் தமிழ் விட்டுவிடவில்லை.

இதன் காரணமாக எல்லோரும் சென்னைக்கு வந்தால் வணிக வளாகங்களையும், திரையரங்கங்களையும் சென்று சுற்றிப் பார்க்க விரும்புவார்கள் ஆனால் அந்த பற்று என்னை நூலகத்தை நோக்கி செல்ல வைத்து.

கூகுள் map செயலியை திறந்து அருகாமையில் உள்ள நூலகம் ஏதேனும் இருக்கின்றனவா ? தேடினேன். இருக்கும் இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் சரியாக வாலாஜா மசூதியின் பின்புறம் உள்ள வல்லப அக்ரஹாரம் தெருவில் அமைந்துள்ள உயர்நிலைப் பள்ளியை ஒட்டி ஒரு சிறிய நூலகம் இருந்தது. 

உள்ளே சென்று பார்த்தபோது தோராயமாக 80 ஆண்டு பழமையான கட்டடம் அது. 200 சதுர அடிக்கு குறைவான அந்த இடத்தில் நான்கு அடுக்குகளாக புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. 

அடுக்கி வைத்தப் புத்தகங்கள் எல்லாம் தூசிகள் படிந்து அப்படியே இருந்தன. வயதான இரு முதியவர்கள் தினத்தந்தி தினகரன் நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தனர். அந்த நூலக செயலர் கையில் பாரதியின் கவிதை நூல் இருந்தது. 

உள்ளே சென்றேன் ஏதாவது ஒரு நூலை எடுத்துப் படிக்கலாம் என்று எண்ணிய போது சுவற்றில் அங்கங்கு கரையான் அரைத்துப் போய் தூசிகள் படிந்தபடியாக இருந்தமையால் முன்புறத்தில் இருந்த ஒரு புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்து ஒரு ஒன்றரை மணி நேரம் செலவிட்டிருப்பேன். 

அதற்கிடையில் பல்கலைக்கழகத்தில் சேர்க்கைப் பதிவேடு வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டன பத்து நிமிடங்களில் நான் வந்து விடுவேன் என்று கைபேசியில் அழைத்துச் சொன்னான். 

அதனால் புத்தகத்தை மூடிவிட்டு அங்கிருந்து எழுந்து நூலகத்தின் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு வெளியில் வந்தபோது எனக்கு ஒரு ஆச்சரியம் மத்திய சென்னையின் முக்கியமான இடங்களில் ஒன்று திருவல்லிக்கேணி. அதிலும் திருவல்லிக்கேணியின் பிரதானமானது வாலாஜா மசூதி மற்றும் பார்த்தசாரதி கோயில் இதற்கு இடையில் அமைந்துள்ள இந்த நூலகம் இருக்கும் இடம். இவ்வாறு இருந்தும் பாழடைந்து கிடக்கும் இந்த நூலகத்தினை யாருமே சரி செய்ய முன்வரவில்லை என்று எண்ணிக் கொண்டு அதனையும் என் சகோதரனிடம் எடுத்துரைத்தேன்.

அவன் மெல்ல சிரித்துக் கொண்டு இது மட்டுமல்ல இன்னும் சென்னையில் பல நூலகங்கள் இவ்வாறுதான் பாழடைந்துள்ளன என்றான். தமிழ்த் துறையில் முதுகலைப் பட்டம் பயின்ற போது பல அறிஞர் பெருமக்கள் மற்றும் பெரும் ஆசான்களுடன் பழகிய அவன் அனுபவத்தினால் கூறிய இவ்வார்த்தைகளில் உண்மைத் தன்மை இருந்தது. 

உதாரணமாக தமிழறிஞர்கள் மற்றும் பெரும் புலவர்கள் பலர் கூடி சொற்பொழிவாற்றிய நந்தனம் YMCA மைதானம் இன்று நூற்றிற்கும் குறைவான மக்களின் வருகையையே கொண்டுள்ளது. அவ்விடத்தில் மகாகவி பாரதியார் வாழ்ந்த காலத்தில் கூட்டம் கூட்டமாக மக்கள் சென்று அவரது சொற்பொழிவு கேட்டு இரசித்தனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பின்னர் எழும்பூர் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து ரயில் ஏறி ஊர் வந்தடைந்தோம்.

சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னைக்கு மீண்டும் சென்றபோது அந்த நூலகம் அமைந்திருக்கும் தெருவில் எதிர்பாராத விதமாக சென்றேன். அப்போது அந்த நூலகத்தின் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு தற்போது அழகு சேர்க்கும் வகையில் சிறப்பாக கட்டப்பட்டுள்ளது. இதனைக் கண்டு மனம் நெகிழ்ந்தேன்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பாரதியின் கூற்றுப்படி வெறும் பள்ளிக்கூட கல்விக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் பொதுவுடமையான நூலகங்களை பேணிப் பாதுகாப்பதிலும் நம் மக்கள் மேன் மக்களே! 

-  மு. முஹம்மது சுஹைப்

Published in Nagore Puranam November month magazine 2025


Post a Comment

0 Comments