ஒருவர் தனது கருத்துக்கள் மற்றும் படைப்புகளை வெறும் வாய்மொழியால் தனதளவில் மட்டும் வைத்துக்கொள்ளாமல் பிறருக்கும் அதனை கடத்த உருவாக்கப்பட்டதே புத்தகம் ஆகும். புத்தகம், நூல், பனுவல் என பல்வேறு பெயர்களால் குறிக்கப்படுகின்றன.
ஆங்கிலத்தில் ஒரு பிரபலமான பழமொழி உள்ளது"Today Reader, Tomorrow Leader". நம் நாட்டிலுள்ள பல தலைவர்கள் அன்றாட புத்தகம் வாசிப்பதின் மூலமே தனது அறிவை வளர்த்துள்ளார்கள். அதன் விளைவாக நல்ல தலைவர்களாகவும் உருவாகினர்.
புத்தகம் படிப்பவரை தனது பக்கம் கவரும் வசியம் கொண்டது. உதாரணமாக பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் தன்னிகரற்ற தலைவர். தான் படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தில் ஒரு சில பக்கங்கள் மீதம் இருப்பதால் தனது அறுவை சிகிச்சையையே மறுநாள் மாற்றி வைக்கச் சொன்னார்.
இணையத்தையே மையமாக கொண்டிருக்கும் இந்நூற்றாண்டிலும் புத்தகத்தின் மீது காதல் கொண்டோர் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
என்னதான் இணையவழியிலும், செயற்கை நுண்ணறிவுகள் மூலம் படித்தாலும், பாடங்கேட்டாலும் கையில் புத்தகப் பிரதியை எடுத்துப் பிரட்டி படிப்பது என்பது ஒரு தனி சுகம் தான்.
சமூக வலைத்தள பக்கத்தில் "நீ உன்னை புத்தகம் போல் மாற்றிக்கொள்" என்ற ஒரு குறுந்தகவலை படித்தேன்.
அதற்கு விளக்கமாக "தனக்குள்ளே ஆயிரமாயிரம் கருத்துக்கள் கொண்டிருந்த போதும், எந்த வித அசைவுமின்றி நூலகத்தில் அமைதியாக இருக்கிறது புத்தகம் " என்பதாக நான் விலகி கொள்கிறேன். அது போல் மனிதன் தன் வாழ்வில் ஆயிரமாயிரம் அறிவுகள் கொண்டிருந்தாலும், சொத்துச் சுகம் பல பல பெற்றிருந்தாலும் நூலகத்தில் இருக்கும் புத்தகம் போல் அமைதியாக வேண்டும் என்பதாக நான் விளங்கி கொண்டேன்.
புத்தக வாசிப்பின் மூலம் தினந்தோறும் புதுவிதமான புத்தாக்கங்களைக் கற்றுக் கொள்ளலாம். புத்தகம் வாசிப்பு மூளைக்கு உடற்பயிற்சி போன்று செயல்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த தலைமுறையினர் வரை புத்தகத்திற்கும், நூலகத்திற்கும் கொடுத்த முக்கியத்துவம் இன்றைய தலைமுறையினரிடம் மிகச் சொற்பமாக உள்ளது.
பொழுதுபோக்குக்காக இணையத்தையும், கைப்பேசிகளையும் பார்த்து நாட்களை நகர்த்தும் மக்கள் சற்று புத்தகத்தின் பக்கமும் திரும்பினால் நம்முடைய நாட்களும் நன்றாக அமையும்.
நம்மில் பலரும் நமது தாய்மொழியில் கூட எழுதுவதிலும் பேசுவதிலும் பிழைவருவதனை தடுக்கத் தொடர்ச்சியாக புத்தகம் வாசிப்பது ஏதுவாக அமையும்.
இம்மாதம் 23 ஆம் நாள் உலகப் புத்தக தினம். அன்றிலிருந்தாவது இணையத்தில் மூழ்கியிருப்பதிலிருந்து வெளிவந்து தினமும் நூல் நிலையம் சென்று தனக்குப் பிடித்த புத்தகத்தினை தேடி கண்டுபிடித்துப் படிக்க ஆராம்பிக்க தொடங்குவோம். கவனச்சிதறல்களை உண்டாக்கும் சமூக வலைத்தளங்களுக்கு மத்தியில் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வோம்.
- மு. முஹம்மது சுஹைப்

0 Comments