அவள் தந்த கவர் | December 2025 | கவிஞர் | December 2025 | மு.அ. அபுல் அமீன்


இன்று வெற்றிகரமான மூ‌ன்றாவது வார துவக்கம் ,இரண்டு வாரம் தொடர்ந்தது வீணாகவில்லை சட்டை செய்யாமல் சென்றவள் மெதுவே திரும்பிப் பார்க்கிறாள், பாதி வெற்றிதான். என் அழகில் நிச்சயம் மயங்குவாள் இன்றுதான் திரும்பி என்னைப் பார்த்திருக்கிறாள். என் உருவம் உடை தலைவாரி இருக்கும் அழகு நிச்சயம் அவளைக் கவரும், இரண்டு வாரங்களாக நான் தூங்காதது போல் இன்றிரவு அவள் தூங்கமாட்டாள், என் உருவம் முன் நிற்கும்.

முயற்சி வீணாகவில்லை, இந்த வார இறுதியில் கடித பரிமாற்றம் நடக்கும், பிறகு சந்திப்புகள், தையில் கல்யாணம்.

பில்லைப் பார்த்ததும்தான் தின்ற சிற்றுண்டியின் அளவை அறிந்தான். ஆயினும் கலங்கவில்லை இனிய நினைவுகளோடு ஆழ்ந்த நித்திரை.

அடுத்த நாள் அலுவலகத்தில் அவன் சுறுசுறுப்பின் காரணம் அறியாது பலர் மண்டைப் பிய்த்துக் கொண்டனர். கிசுகிசுக்களுக்கும் குறைவில்லை..

நாலரை மணிக்கு அலுவலகத்தை விட்டு புறப்பட்டு பேருந்து நிலையத்தில் நின்றான், அந்த பேருந்தில் அவள் நின்றாள் அந்த பேருந்தில் இன்று நிறைய கூட்டம், சபித்துக்கொண்டே ஏறினான், சிறுக சிறுக நகர்ந்து அவள் அருகில் நின்றான்,

பல்லவன் நல்லவன், பள்ளம் படுகுழி ஏறி இறங்கி குலுங்கிக் குலுங்கி மோத விட்டான்.

இன்று அவன் நடையின் வேகத்தைக் குறைத்து நளினமாக நடந்தான். மயில் தோகையின் வெளிர் நீல வண்ண சேலையில் அந்த அன்னம் அசைந்தது, எண்ணம் இனிக்க எட்டியே நடந்தான் எழிலை விழியால் பருகியவாறு.

வெங்கடாசல தெருவில் திரும்பினான், நின்றான் திரும்பினான் ,சற்றே தயங்கினான், மனத்தில் தைரியம் வைரியாய் மாறுகின்றன வேகமாக நடந்து அருகில் நின்றான்.

அவள் அவன் கையில் ஒரு காவரைத் திணித்து விட்டு கணத்தில் பறந்தாள்,அவனுக்கு அளவில்லா மகிழ்ச்சி, உலகமே அவன் கைவசமானது போல களிப்பு,

விழிகளில் வழிந்திடும் ஆனந்த கண்ணீரோடு நேற்றுபோல் இன்றும் தின்றுவிட்டு ஆனந்த பள்ளு பாடியவாறே அறையைத் திறந்து கட்டிலில் சாய்ந்து கவரைப் பிரித்தான்.

முறுக்கு மீசையுடன் கூடிய முரட்டு உருவம் காவல் ஆய்வாளர் உடையில் உள்ள புகைப்படம், அதன் கீழ் இவர்தான் என் வருங்கால கணவர்,ஜாக்கிரதை,என்ற வரிகள்.

அப்படியே விழுந்தான்,

மரகதம் மருத்துவமனையில் மண்டை கட்டுடன் படுத்திருக்கும் அவனைப் பார்க்க வரும் நண்பர்களின் என்ன நடந்தது என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாம‌ல் அசடு வழிகிறான்.

- கவிஞர் மு.அ. அபுல் அமீன் 

Published in Nagore Puranam December Month Magazine 2025

Post a Comment

0 Comments