இரண்டு வருடத்தில் 

முடிவதாக சொன்ன ஒப்பந்தம்,

இருபது ஆண்டுகள் கழித்தும் 

முடியவில்லை‌.


படிக்கச் சொன்னார்கள் - படித்தேன்.

அதனை முடிக்க சொன்னார்கள்- முடித்தேன்.


ஓடச்சொன்னார்கள் - ஓடினேன்.

அப்போது தொடங்கிய ஓட்டம்.


ஓடினேன்... ஓடினேன்... 

இப்படியே ஓடியோடி 

ஓடாய்‌ தேய்ந்தேனே அன்றி ஒய்வில்லை.


அவ்வப்போது 

இரத்த பந்தத்தின் இன் சொற்கள் 

சற்று தென்றலாய் ஆறுதல் கூற,

களைப்பு கனம் மாறிய நொடி 

கடன் சுமையும், பணி சுமையும் 

மீள முடியாமல் செய்தது.


எனக்கு "ஓய்வு" என்று அறிவித்தார்கள்.

அப்பாட, இனி

ஆறு மணி கடிகாரம், 

அரைகுறை தூக்கம்,

அரைமணி நேர சாப்பாடு,

ஆறு நாள் அயராத பணி,

ஆறாத ஓட்டம்... 

இவற்றிலிருந்தெல்லாம் தப்பித்துக் கொள்ளலாம் 

என்று எண்ணினேன்.

ஆனால் அது " நிரந்தர ஓய்வாக" இருக்கும் 

என்று நான் ஒருபோதும் எண்ணவில்லை.


அதன்பின் விளங்கிக் கொண்டேன்

நடுத்தர வர்க்கத்தில் பிறந்தவன். ஆம், 

நான் பாவப்பட்ட

நடுத்தர வர்க்கத்தில் பிறந்தவன். 


- மு. முஹம்மது சுஹைப் 

Published in Nagore Puranam December Month Magazine 2025