எல்லோரும் போல

எங்களுக்கும் மழை அழகுதான்,

ஆனால் அதை ரசிக்க 

மறந்தவர்கள் நாங்கள்…

இல்லை இல்லை,

ரசிக்க இயலாதவர்கள் நாங்கள்…


கருங்கல் சுவற்றால் கட்டிடம் கட்டி,

வண்ணங்களால் வர்ணம் பூசி

கலைப்பாரும் உங்களுக்கு,

ஒடிந்த குடிசைக்குள்ளே

ஓய்வெடுக்கும் எங்களின் நிலை

ஒருபோதும் தெரியாது…

இல்லை இல்லை,

சொன்னாலும் புரியாது.


மழைத் தூறல் விழுந்து

மண் வாசம் வந்த நொடி,

இடியாடிப் போகும் எங்கள் மனம்.

சுவற்றின் களிமண் கரைந்திடுமோ?

காற்றில் கூரை கலைந்திடுமோ?

ஆம், இன்று இரவு 

தூக்கத்திற்கும் எனக்கும் தடை.

மின்தடையல்ல, மழையாலான தடை.


அடைக்கலம் தந்த இடம்

அலங்கோலமாகிடுமோ?

என்று அலைபாயத் தொடங்கும்

என்பதே எங்கள் நிலை.


சிறிது சிறிதாய் தொடங்கிய மழை

இடி மின்னலுடன் கனமாகப் பெய்யும்.

வானத்தில் மேகங்கள்

தேம்பி தேம்பி அழும்…


ஒருபுறம்,

“நான் இல்லையெனில்

நிலம் என்ன செய்யும்?”

“நான் இல்லையெனில்

நீர் எப்படி கிடைக்கும்?”


மறுபுறம்,

“நான் பெய்யாமல் இருந்திருந்தால்

இவர்கள் தூக்கம் கெடாமல் இருந்திருக்கும்…”

“நான் பெய்யாமல் இருந்திருந்தால்

இவர்கள் வருமானம் கெடாமல் இருந்திருக்கும்…”


மற்றவர்கள் போல்

மழை எங்களுக்கும் அழகுதான்,

என் வீட்டு கூரை ஒழுகாத வரை,

என் அப்பன் சம்பாத்தியம்

கெடாத வரை.


உலகில் எல்லாவற்றிற்கும்

இரு துருவம்,

இரு கருத்து.


- மு. முஹம்மது சுஹைப்

Published in Nagore Puranam January Month Magazine 2026