நாற்றம் + துர்நாற்றம் | கவிஞர் சூ. சிவராமன் | January 2026

 


ஒரு பூப்பந்தை 

வாங்கி வருபவனின் 

கைகளில் இருப்பது

பூமிப்பந்து


ஒரு முழம்.. 

இரண்டு முழம்..

மூன்று முழம்..

இந்தக் கணக்கே கவிதைதான்


அவன் 

காம்பில் நூலால் சுருக்கிடும் 

விரல்களின் நளினம்

அவள் பொறாமைப்படும் தருணம்


பன்னீர்ப் பூக்கள் 

உதிர்ந்துகிடக்கின்றன

அவன் நைந்த லுங்கியின் மடியில்


அவள் சிரித்துவிட்டுப் 

போய்விடுகிறாள்

இவன் புன்னகைகளை 

பொறுக்கி சரமாக்கி

பூப்பந்துகளாக்கி 

வைத்துக்கொள்கிறான்.


தினந்தோறும் ஒரு 

பூக்காத மலரை தொடுக்காமல்

எடுத்து வைக்கிறான்

கொடுக்காமல் விட்ட 

கடந்தகாலத்திற்குள்


காய்ந்து விரைத்த மட்டையை

நீருக்குள் அமிழ்த்தி 

நாறாக்கும் பொழுதுகள் தோறும்

கடக்கும் சைக்கிளின் பெல்

அவனை மட்டையாக்கும்


சரஞ்சரமாய் கோர்த்து மாலையாக்கி

தொங்கவிடுவது

அவளின் ஞாபகச்சரத்தைத் தான்.


ஊர்கூடி, வசவுச்சொற்களால்

மாலை கட்டிப்போட்டது 

அவனுக்கு சாவுக்கும், சிரிக்கும் 

மலர்களையே கோர்த்துத்

தருகிறானென.


றாக்குடியாரம் கடைசியாக 

அவள் சடங்கிற்கு கட்டியதுதான்


மணமக்களுக்கு ஜோதிகா

மாலைகள் கட்டித்தர உத்தரவிட்டாலும்

இவன் கரங்கள் மாலதி அணியும்

மாலைகளையே கட்டி 

அனுப்பிக்கொண்டிருந்ததை

ஊர் அறியாது.


குண்டுமல்லியும், மீன் கவுச்சியும்

எதிரெதிர் துருவம்தான்

ஆனாலும் ஈர்க்கும்


அந்தி மயங்கிச் சரிகையில்

அந்தக் கருவாட்டுக் கூடையில்

ஒருமுழம் மல்லி மலர்ந்து சிரிக்கிறது


கோலாமீன்கள் சுமப்பவள் கொண்டையில்

இவன் தொடுத்த முல்லரும்பு

முல்லரும்பு..முல்லரும்போய்..


சுட்டக் கொடுவா கருவாடு

மொக்கவிழ்ந்த முல்லரும்பு

கருவாட்டு வாசனையை விஞ்ச முடியாத

சரங்கள்துவண்டுவிடுகின்றன


நம் வாழ்வில், நாம் கடந்து சென்றது

எத்தனை முழம் மல்லிகை

நாம் கடந்து சென்றது

எத்தனை கருவாட்டுக் கூடைகள்


ஆகா..

இந்த கணக்கே கவிதைதான்.


- கவிஞர் சூ. சிவராமன்

Published in Nagore Puranam January Month Magazine 2026

Post a Comment

0 Comments