ஆட்டக்காரி வீட்டில் வாட்டக்காரி | February 2026 | கவிஞர் சூ சிவராமன்

 


இரவுத் திருவிழா 

ஆட்டக்காரியை வீடு சென்று பார்க்க

நேருகையில் வற்றிய பகலில்

முற்றிய முருங்கையாக நிற்கிறாள்


இளசு பெரிசுகளின்

உறக்கம் கெடுத்த 

பெருத்த தனங்கள்

இளைத்திருக்க

எலும்புந் தோலுமாய்

எழுந்து வருகிறாள்


வெய்யிலை முறைத்தபடி

மார்புப் பஞ்சுகள் 

கூரையில் காய்கின்றன.

முகச் சுருக்கங்கள் சுமந்து வருகிறது

வயதின் வரைபடத்தை.


மேடை ஒளிவெள்ளத்தில் 

மினுங்கும் ஜிகினா ஆடைகள் 

புரண்டு தொங்குகின்றன

குறுக்கும் நெடுக்குமான கயறுகளில்.


பொருந்தா உள்ளாடைகள் தளர்ந்திருக்க

போதையேற்றும் கண்கள்

சோபையிழந்து பள்ளத்தில் விழுந்த

கோலிக்குண்டுகளாகி விட்டன.


திருவிழா இரவில் துள்ளும் உடல் 

நெடுநாள் இரையெடுக்காத 

பசுவாகி நிற்கிறது  

எவரையும் கிளர்ந்தெழச் செய்யவல்ல

வாளிப்பான உடல்காரி

நிறைபோதையில்

நிலைகொள்ளாமல் நிற்கிறாள் 

சாணம் மெழுகிய குடிசையுள்.


பிறகு..

இருள் கவிகிறது

இல்லாத மேடையில்

நிகழாத நிகழ்வு 

ஆடாத ஆட்டம்

மீதமிருக்கிறது

இன்னும்

இன்னும்

வாழாத வாழ்வு.

கவிஞர் சூ சிவராமன் 

Published in Nagore Puranam February month magazine 2026


Post a Comment

0 Comments