வாழ்க்கையெனும் தோட்டத்தில் உலா வந்தேன்
வறுமை எனும் அரக்கன் எனைப் பிடித்தான்
வாட்டு வாட்டு என்று வதைத்தெடுத்தான்
வாயடைத்துப் போய் வாடி நின்றேன்
வரிசையாக சென்ற எறும்பு கண்ணில் பட
வேடிக்கையாய் அதை நான் பார்க்க
சிறு கையில் மழைக்கால உணவுகொண்டு செல்ல
வருமுன் காக்கும் வழிதனைக் காட்டி
வழியில் ஊர்ந்து நடந்தனவே
குரங்கொன்று வாயின் இருபுறமும் குவித்து வைத்த உணவை உண்டு மகிழ்ந்ததுவே குயில் ஒன்று கவலை இன்றி கானம் இசைத்து பாடியதே மயில் ஒன்று வண்ண தோகை வகை வகை நடனம் ஆடியதே.
முயல் ஒன்று துள்ளிக் குதிக்க மான் ஒன்று தாவி ஓட யானைக் கூட்டம் அசைந்து வர பறவைக் கூட்டம் பறந்துசெல்ல எதுவும் வறுமையில் வாடவில்லை
எதுவும் இல்லை என்று தேடவில்லை
எனக்கு மட்டும் வறுமை ஏன் வந்தது
நாலு நிமிடம் என் வாழ்வை ஒட விட்டேன்
படைப்புகள் வறுமையில் வாட வில்லை
நல்லதொரு பாடம் நானும் கற்றேன்.
உழைப்பால் வறுமையை ஓட்டிடுவேன்
சேமிப்பால் வாழ்க்கையை மாற்றிடுவேன்
அளவுக்கு மீறிய ஆசையினை
அறவே துடைத்து எறிந்திடுவேன்
அதிசயம் வாழ்வில் நடந்துவிடும்
ஆனந்தம் வாழ்வில் கிடைத்து விடும்
வறுமை ஓடியே ஒளிந்து விடும்
இன்பம் என்னைச் சூழ்ந்து விடும்
இனிதே வாழ்க்கை மலர்ந்து விடும்.
- பாவலர் அல்போன்ஸஸ் மோசஸ்
Published in Nagore Puranam February month magazine 2026

0 Comments