இராமலிங்க அடிகளார் (தொடர் - 01) | நாகூர் செய்கு அப்துல் காதிர் மரைக்காயர் | April 2024

 


திருவருட் பிரகாச வள்ளலார் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் இராமலிங்க அடிகளார். இவர் அக்டோபர் 5 ஆம் தேதி 1823-ம் ஆண்டு சிதம்பரத்தை அடுத்துள்ள மருதூரில் இராமையா - சின்னம்மாள் இணையருக்கு ஐந்தாவது மகனாக பிறந்தார்.

ஆன்மீக உலகில் மறுமலர்ச்சியுற்ற எண்ணங்களை விதைத்த இவரை ஓதாதுணர்ந்த அறிஞர், சமூக சீர்திருத்தவாதி, ஆன்மீகச் சொற்பொழிவாளர், நூலாசிரியர், பதிப்பாசிரியர், மொழி ஆய்வாளர், சித்த மருத்துவர், பொதுத் தொண்டாற்றியப் புனிதர் என பன்முகங்களைக் கொண்டவர். மேலும் வடலூர் ராமலிங்கம் என்றும் அறியப்பட்டுள்ளார்.

பேராசிரியர் முனைவர் மு.வரதராசன் அவர்கள் வள்ளலாரை "தமிழ்க் கவிதைக்குத் தெளிவும் எளிமையும் உருக்கமும் தந்து தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய பெருமை இராமலிங்கரையே சாரும்" என பறைச் சாற்றுகிறார்.

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை" என்ற தாரக மந்திரத்தினை தமிழ் நாடெங்கும் மணக்கச் செய்தவர்.

சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்களையும் சாதி சமய பாகுபாடுகளையும் தகர்த்தெறிந்ததோடு செந்தமிழின் சுவையறிந்து ஆன்மீக நெறியை சங்கத் தமிழில் செழித்தோங்கச் செய்தார்.

தாம் தமிழ்குடியில் பிறந்தவர் என்பதனால் மட்டும் அவர் தமிழ் மொழியை போற்றிப் புகழவில்லை, மாறாக அன்னைத் தமிழ் குறித்து அறிந்து ஆராய்ந்து பரம்பொருளாளனின் பண்புகளை பாரெங்கும் எடுத்துரைக்க தமிழ் மொழியை தனது கருவியாக எடுத்து அருளிச் செய்தார்.

நிலைத்து நிற்கும் நிறுவனங்கள்:-

அடிகளார், தம் பின்னாளில் விளங்கிய வடலூரில் நான்கு நிறுவனங்களை நிறுவினார். அவை இன்றளவும் சீரோடும் சிறப்போடும் நடைபெற்று வருகிறது.

1. சமரச சுத்த சன்மார்க்க சங்கம் (1865)

2. சமரச சுத்த சன்மார்க்க தருமசாலை (1865)

3. சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை (1872)

4. சித்தி வளாகம் (1870)

"தங்கமே அனையார் கூடியஞான சமரச சுத்த சன்மார்க்கச் சங்கமே கண்டுகளிக்கவும் சங்கம் சார்திருக் கோயில்கண் டிடவும் துங்கமே பெருஞ்சார் சங்கம் நீடூழி துவங்கவும் சங்கத்தில் அடியேன் அங்கமே குளிர நின்றனைப் பாடி ஆடவும் இச்சைகாண் எந்தாய் " முதல் மூன்றும் வடலூரில் ஒரே இடத்தில் அமையப்பட்டது. நான்காவது, வடலூர்க்குத் தெற்கே மூன்று மைல்கல் தொலைவில் மேட்டுக்குப்பம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.

சிதம்பரம் ராமலிங்கம் அவர்களின் தம் வாழ்க்கையினை இரு பகுதியாக பிரிக்கலாம். ஒன்று சென்னை வாழ்க்கை மற்றொன்று வடலூர் வாழ்க்கை. தன்னுடைய இளமை பருவம் முதல் 25 ஆம் அகவை வரை சென்னையிலும், வடலூர் வாழ்க்கையோ வழிபாடு, பாடல் செய்தல், உபதேசஞ் செய்தல் எனப் பின்னர் காலம் முழுவதும் அமைந்திருந்தது.

சன்மார்க்க சங்கம்:

1858 ஆம் ஆண்டு வடலூரை அடுத்த கருங்குழி வள்ளலாரின் உறைவிடமாயிற்று. தன்னுடைய பெரும் பணியாக சிதம்பரம் சென்று வழிபடுவதையும், பாமாலைகள் பாடிப் பரவுதையுமே அடிகள் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் தமது மார்க்கத்திற்கு ஒரு சங்கம் காண விரும்பினார். சமரச சுத்த சன்மார்க்கச் சங்கத்தை நிறுவ இறைவனிடம் விண்ணப்பித்து 1865-ல் கருங்குழியில் நிறுவினார். சங்கம் அமைப்பது புதியது அல்ல, மாறாக தமிழ் நாட்டில் ஆன்மீகத்திற்கென்றே முதன்முதலில் சங்கம் நிறுவியவர் வள்ளலாரே.

வள்ளலாரின் தொலைநோக்கு சிந்தனை இதில் விளங்கும். காரணம், மடம் அமைக்காது சங்கம் அமைப்பதின் நோக்கம் என்ன? மடம் என்பது ஆடவர்களுக்கு மட்டுமே பொருந்தும் மாறாக சங்கம் பெண்டீர்க்கும் உரியது. இன்றளவும் நாடெங்கும் சன்மார்க்கச் சங்கத்திற்கு வள்ளலார் வித்தாக விளங்குகிறார்

சத்திய தருமசாலை:

தாம் இயற்றிய 'சீவகாருணிய ஒழுக்கம்' என்ற நூலின் அடிப்படையிலேயே வாழ்க்கையையும் அமைத்தார். அதன்படி சத்திய தருமசாலையை நிறுவினார். வள்ளலாரின் கொள்கைகளில் முதன்மையானது சீவகாருணியம்.

அதாவது அற்றார் அழிபசி தீர்த்தல், புலால் மறுத்தல் என இருவகையில் வற்புறுத்திக் கூறுவார். வள்ளலாரின் வாய்மொழியாக அமைந்ததே சீவகாருணிய ஒழுக்கமே கடவுள் வழிபாடு என்பதாகும். 23.05.1867 இல் சத்திய தருசாலையை வடலூரில் அடிக்கல் நாட்டுவதும் திறப்பு விழாவும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தன.

சத்திய ஞான சபை:

வள்ளலாரின் கொள்கை கடவுள் ஒருவரே. அவர் ஜோதி ஒளி வழிபட வேண்டும் என்பதே அவர் கூற்று.

இறைவன் ஜோதி வடிவில் வழிபடுவதற்கென்றே வடலூரில் வள்ளலாரால் சத்திய ஞான சபை நிறுவப்பட்டது.

சித்தி வளாகம்:

1870 இல் வள்ளலார் மேட்டுக்குப்பம் சென்றார்கள். அடிகள் தனித்துறைத்த இடமே சித்தி வளாகத் திருமாளிகை. சித்தி வளாகம் என்பது அடிகளே இட்ட பெயர். 30.01.1874 இல் சித்தி பெற்றது இங்கேயே.

வள்ளலார் மேலும் பத்து நிறுவனங்களை நிறுவத் திட்டமிட்டார். ஏற்பாடுகளையும் செய்தார், ஆயினும் அவை நிறுவப் பெறாமலேயே நின்று போயின.

1.வைத்தியசாலை

2.சாஸ்திரச சாலை

3.உபகார சாலை

4.விருத்தி சாலை

5.உபாசனா சாலை

6.யோக சாலை

7.விவகார சாலை

மேற்கூறப்பட்ட ஏழும் நிறுவப்படவில்லை.

-  நாகூர் செய்கு அப்துல் காதிர் மரைக்காயர் 

Published in Nagore Puranam April Month Magazine 2024

Post a Comment

0 Comments