முருகன், இராமன், சிவன் என அனைத்து தெய்வங்கள் மீதும் பாக்கள் எழுதிய போதிலும், கடவுள் ஒருவரே என்றும், எவ்வுயிரும் தம்முயிர் போல எண்ணுதல் வேண்டும் என்றும், கோவில்களில் உயிர்ப் பலி கூடாது என்ற சமய சீர்திருத்தக் கொள்கையுடையவர்.
சாதி சமய வேற்றுமைகளையும், வழிபாட்டுச் சடங்குகளையும் மறுத்து, இறையை ஒளி வடிவாக வணங்கும் அருட்பெருஞ்சோதி வழிபாட்டை முன்வைத்தவர். தமது சமரச சுத்த கொள்கைக்காக தனிக் கொடி, தனிச் சபை என ஏற்படுத்திய வள்ளலார் 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று இவர் ஏற்றிய 'அணையா அடுப்பு' இன்றளவும் வடலூர் தர்மசாலையில் மக்களின் பசியாற்றிக் கொண்டிருக்கிறது.
இவர் எழுதிய திருவருட்பாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர், அவரின் பாடல்களை மருட்பா என்று சொல்லி மறுக்க, இருவருக்குமிடையே, அருட்பா மருட்பா விவாதமும் நடந்துள்ளது.
சென்னையில் வாழ்ந்த காலத்தில் ஒழிவில் ஒழுக்கம் (1851), தொண்ட மண்டல சதகம் (1855), சின்மய தீபிகை (1857), ஆகிய மூன்று நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
வள்ளலார் இளம் வயதிலிருந்தே சிறந்த ஞான நூல்களை ஆராய்ந்து பதிப்பிக்கும் ஆற்றலைப் பெற்று இருந்தார் என்பதனை இந்தப் பதிப்புகள் மூலம் நன்கு அறியலாம்.
தொண்ட மண்டல சதகம் (1855):
சென்னையில் வாழ்ந்த காலத்தில் 1855-ல் தொண்டை மண்டல சதக்கத்தை முதல் முறையாக தன்னுடைய 32 வது அகவையில் பதிப்பித்தார்.
இப்பதிப்பிற்கு காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார், புரசை அட்டாவதானம் சபாபதி முதலியார், புதுவை சுப்புராய முதலியார், விருத்தாசலம் தியாகராஜ கவிராயர் ஆகிய நால்வரும் சாற்றுக்கவிகள் அளித்துள்ளனர். இந்நூலில் மொத்தம் 101 அருட்பாடல்கள் உள்ளனர்.
ஒவ்வொரு பாடலின் கடைசி இரண்டு சொற்கள் தொண்ட மண்டலமே என்று இடம்பெறுகிறது. சின்மய தீபிகை (1857) பெருமான் அவர்கள் தன்னுடைய 37 வது அகவையில் சென்னையில் வாழ்ந்த காலத்தில் 1857-ல் சின்மய தீபிகையை பதிப்பித்தார்கள்.
பெருமானார் கடைசி முறையாக அச்சிற் பதிப்பித்தது இந்த அரிய ஞான நூலைதான். 119 அருட்பாடல்கள் உடைய இந்நூல் வாழ்வியலை விளக்கி அருளியலை அடைய அருட்துணையாக விளங்குகின்றது. சின்மய தீபிகை என்பதற்குச் சிவஞானத்தை விளக்கும் அருள்விளக்கு என்று பொருள்படும்
வள்ளலாரின் நால்வகை ஒழுக்கம்:
வள்ளலாரின் பல அற்புதமான தத்துவங்கள் இன்றளவும் பலராலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அண்ணல், இன்பமான வாழ்வுக்கு நான்கு வகையான ஒழுக்கங்கள் தேவை என்று எடுத்துரைத்துள்ளார். இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் ஆகிய இந்த நான்கை பற்றியும் சிறு குறிப்பாக காணலாம்.
இந்திரிய ஒழுக்கம்:
கேடான வார்த்தைகள் செவி புகாதபடி இறைவனின் நாமங்களை கேட்பது, குரூரமாக பார்க்காமல் இருப்பது, சுவையை விரும்பாமல் இருப்பது, இனிமையாக பேசுவது, உயிர்வதை ஏற்படும் போது எவ்வித தந்திரத்தையாவது பயன்படுத்தி அதைத் தடுப்பது, பெரியோர்கள் எழுந்தருளியிருக்கும் இடங்களுக்குச் செல்ல வேண்டும், மிதமாக உணவு உண்ணுதல், அதிக இன்பத்திற்கு ஆசைப்படாதிருத்தல், சஞ்சரிக்கும் காலத்தில் காலில் கவசம் தரித்தல், உச்சி மற்றும் மார்பு முதலிய அங்கங்களை மறைத்தல், அழுக்காடை உடுத்தாமல் இருப்பது போன்றவை இந்திரிய ஒழுக்கமாக அமைகிறது.
கரண ஒழுக்கம்:
மனதை புருவ மத்தியில் நிறுத்தி ஒருமுகப்படுத்துதல், மற்றவர்களின் குற்றத்தை கண்டுபிடிக்காமல் இருப்பது, பிறர் மீது கோபம் கொள்ளாமல் இருப்பது, நம்மை நாமே பெருமைப்படுத்திக் கொள்ளாமல் இருப்பது, தனது தத்துவங்களை அக்கிரமத்தில் செல்லாது கண்டித்தல் என்பன.
ஜீவ ஒழுக்கம்:
ஆண்மகன், பெண்கள் உள்ளிட்ட அனைவரிடத்திலும் சாதி, சமயம், பேதம், ஆசிரமம், சூத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திரபந்தம், தேச மார்க்கம், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் பேதம் நீங்கி அனைவரும் நம்மவர்களாக சமமாக நினைத்து வாழுதல்.
ஆன்ம ஒழுக்கம்:
யானை முதல் எறும்பு வரை, இந்த உலகத்தில் தோன்றிய அனைத்து சரீரங்களிலும் உள்ள ஆன்மாவை திருச்சபையாகவும், அதன் உள் ஒளியே பதியாகவும், யாதும் நீக்க மறக் கண்டு, எவ்விடத்திலும் பேதமற்று இருத்தல் வேண்டும் என்று ஆன்ம ஒழுக்கத்தில் வேண்டுகிறார்.
வள்ளலார் தன்னுடைய வாழ்நாளில் ஏறத்தாழ 6000 பாக்கள் படைத்துள்ளார். மேலும் வள்ளலாரை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசு 2007-ல் இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டது. இவருடைய காலத்தில் வாழ்ந்த பெருமக்களாக இருந்தவர்கள் காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார், திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ஆறுமுக நாவலர், குலாம் காதிறு நாவலர், சிதம்பரம் சபாபதி முதலியார் போன்றோர்கள்.
சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவிய வள்ளலார் ஜனவரி 30,1874 ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார்.
- நாகூர் செய்கு அப்துல் காதிர் மரைக்காயர்

0 Comments