நினைவுப் பீப்பாய்கள் 

வழிய வழிய ஊறுகாய்ப் பொட்டலங்களோடு 

மாங்காய்க் கீற்றுகளோடு மாட்டுக்கறி வறுவலோடு 

குளிர்ச்சியான பியர் பாட்டிலோடு

என்னைக் கடந்துகொண்டிருக்கிறாய்.


ஆலையின் சங்கொலி 

தேவாலயத்தின் மணியோசை 

அவன் போதையை மறுதலித்துக் கொண்டிருக்கிறான் .

சாலை மினுங்குகிறது 

காகம் கடலைப் பையை அபகரிக்கிறது

தணிக்கைச் சாவடிகள் எதற்கு

தெளிந்ததும் எழுந்து நடப்பான்.


அப்படித்தான் அம்மணமாக 

வீதியில் கிடப்பேன் 

உள்ளத்தின் கண்ணாடி உடல் 

என் உள்ளக் கிடக்கையெல்லாம் 

இந்த மதுபான விடுதியில் வைத்து

உன்னை முத்தமிடவேண்டும்.


1981 

அவள் பிறந்த வருடத்தை 

நினைவு கூறுகிறது 

நழுவவிடப்பட்ட கண்ணாடிக் குவளைக்குப் பதிலாக 

காகிதக் குவளையாவது தந்துதவுங்கள்

காயத்திற்குதேம்பி அழும் 

கண்ணீரின் ஒருதுளி கலந்தால் போதும்.


சோமபானம் 

சாவை ரசிப்பவனுக்கு அருமருந்து

கொண்டைக்கடலை பனங்கிழங்கு

சத்தானத் துணைமருந்து.


வாந்தியின் மீது கவிழ்ந்து கிடப்பவன்

இந்த உலகத்துக் கயமைகளுக்கெல்லாம்

மேலானவன்.


முயல்கறி என பன்றிக்கறி

பரிமாறுபவனின்  கண்களில்

கெழுத்திமீன் துண்டுகளை

வஞ்சிரம் என்பவன் சிந்தனையில்

மட்டையானவனின் பையில் 

விரல் நுழைப்பவன் கைகளில் காலாவதியான 

மதுப்புட்டியின் தேதி கிழிப்பவன் எண்ணங்களில் 

எப்பொழுதும் ராஜபோதை.


ஊறல் வடித்தெடுத்துப் 

பருகக் கனிந்திருக்கிறது 

உன் நினைவு கோப்பைகளில் 

நிரம்புகிற இந்த நொடி மகத்தானது.


முதலில் புறந்தள்ளிய காதலால்

கடைக்குள் வந்தேன்

வெளியேறுவதற்கான வாய்ப்பு இல்லவே யில்லை 

ஆசிஃபாவுக்காக, பில்கீஸ் பானுக்காக

மேலும் வன்புணர்வு செய்யப்பட்ட

 பெண்களுக்காகப் பருகத் துவங்கினேன்.

 தாகம்.. தாகம்.. 

நீங்கள் நிறுத்தப்போவதில்லை 

நான் தொடர்ந்துகொண்டிருக்கிறேன்

இந்த அற்ப வாழ்வின் 

ஆயுள் நுரைத்துப் பொங்கிக் காணாமலாகட்டும்.


மதுக்குவளைகள் அடுக்கப்பட்டிருக்கும்

அலமாரிகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் 

மதுப்புட்டி நீ கண்ணாடிச் சில்லுகளின் மீது 

களிநடனம் புரிவேன் 

உடைந்து மினுங்கும் கூர்மைக்கு 

என் குரல்வளையை பரிசளிப்பேன்.


இரவை எரிக்கும் கனவுகளுக்கு

எப்போதும் திராட்சை ரசம் 

நல்ல தேர்வு நீரொழுக்கிக் காத்திருக்கும்

நினைவுகளுக்கு கள்ளச்சாராயம்.


-  கவிஞர் சூ சிவராமன் 

Published in Nagore Puranam April Month Magazine 2024