உழவும் தொழிலும் இரு கண்கள் | கவிஞர் மு.அ. அபுல் அமீன் | May 2024

அமெரிக்காவின் ஆதி குடிமக்களையும், பிற நாடுகளில் இருந்து அழைத்து கொண்டு வந்த கொத்தடிமைகளையும் உண்ண உறங்க ஓய்வு தராது ஓயாது உழைத்து துடிதுடித்து சாகடித்து கொண்டிருந்த இரக்கமற்ற அரக்க குணம் கொண்ட கொடிய முதலாளிகளின் கொட்டத்தை அடக்க க கொதித்து எழுந்து போராடிய சிகாகோ நகரின் தெருக்களிலே குருவிகளைச் சுடுவது போல சுட்டு வீழ்த்தி கொல்லப்பட்ட தியாகிகளின் குருதி ஆறாக பெருகி ஓடிய நினைவு நாளே மே முதல் நாள் " உலக தொழிலாளர் நாள்".

அன்றைய போராட்டத்தில் எழுப்பப்பட்ட ஒரே கோரிக்கை ஒரு நாளைக்கு 12 மணி நேர வேலை என்பதே. அன்றைய அந்த போராட்டத்தின் தொடர் விளைவே இன்றைய எட்டு மணி நேர வேலை. எட்டுக்கும் வேட்டு வைத்து இட்ட வேலையைத் தொட்டு விட்டால் முடிக்க வேண்டும் என்று அதற்குரிய அதிக பணம் தராமல் அதிகாரம் செய்வது வேதனையே.

தொழில்கள் அழிவதில்லை. தொழிலாளர் தோற்றதில்லை என்னும் உண்மையை உலகுக்கு உணர்த்திய நாளே மே முதல் நாள்.மேதினியில் தொழிலாளர் நாள்.

இந்த 21 ஆவது நூற்றாண்டிலும் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் பன்னாட்டு முதலாளிகள். முதலைகள் எட்டு மணி நேர வேலையை ஏற்க மாட்டோம்.பனிரெண்டு மணி நேர வேலைக்கு உறுதி வேண்டும் என்று கோருவது நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து நினைத்து விட்டால் என்று பாரதி பாடியது போல பாடி சாட தோன்றுகிறது.

தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளைப் பெற்று பயனடைய முடியாமல் தவிப்பதைப் பரிதாபப்படுகிறோம். அதற்கான காரணம் மிக வெளிப்படையானது.

ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம் என்பதை உதறி எறிந்து விட்டு, ஒரு தொழிலுக்கு ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு சங்கம் என்று ஒரு தொழிலுக்குப் பல சங்கங்கள் தோன்றி ஆளும் கட்சிக்கு ஆதரவான சங்கம் ஆளும் அரசுக்குத் தாளம் போட எதிர் கட்சி சங்கங்களும் ஒன்று சேராமல் ஒவ்வொரு சங்கம் ஒவ்வொரு விதமாய் கோரிக்கைகளைத் திசைதிருப்ப தொழிலாளர் எப்பயனும் கிட்டாமல் ஏமாற்றப்படுகின்றனர். கோமாளி கூத்துதான் நடக்கிறது.

ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம் என்ற கொள்கையை நிலைநிறுத்தி தொழிலாளர்கள் ஒன்று பட்டால் மட்டுமே வென்று காட்டலாம்.வேதனை நீங்கும்.இல்லையேல் வாழ்வே சோதனைதான்.

- கவிஞர் மு.அ. அபுல் அமீன் 

Published in Nagore Puranam May  month magazine 2024

Post a Comment

0 Comments