பெற்றதை பேணிப் பாதுகாப்போம் | மு. முஹம்மது சுஹைப் | August 2024

இருநூற்றாண்டு கால போராட்டத்திற்கு பின் ஆங்கிலேயர்களிடம் இருந்து நம் இந்திய திருநாடு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் விடுதலைப் பெற்றது. இந்நன்னாளில் கொடியேற்றுவதும், இனிப்புகளை வழங்குவதும் ஒருபுறம் இருந்தாலும், அந்த சுதந்திரப் போரின் தியாகம் குறித்து மக்களிடையே கட்டாயம் எடுத்துரைக்க வேண்டும்.

ஆழக்கால் பதித்திருந்த ஆங்கிலேயர்களை அடியோடு இந்நாட்டிலிருந்து வெளியேற்ற, அவர்களுக்கு எதிராக புரட்சிகள் செய்து, இன்னல் பல கண்டு, சிறைபிடிக்கப்பட்டு போராடியதன் விளைவு இன்று நாம் சுவாசிக்கும் இந்த சுதந்திர காற்றாகும்.

இந்த சுதந்திரப் போர் மூன்று விதமாக நடைபெற்றது.

தேசப்பிதா மகாத்மா காந்தியை பின் தொடர்ந்தவர்கள் அகிம்சையின் வழியில் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரத்தை பெற விரும்பினர். இவரது அறவழிப் போராட்டங்களில் முக்கியமான போராட்டம் ஒத்துழையாமை இயக்கம். இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமே இங்கிலாந்தில் சொல்லப்படும் எந்த ஒரு கூற்றுக்கும் செவிசாய்க்க கூடாது என்பதே ஆகும். மேலும் காந்தியும் அவரை பின் தொடர்ந்தவர்களும் ஆங்கிலேயர்களால் தயாரித்து தைத்துக் கொடுக்கப்படும் ஆடைகளை மறுத்துவிட்டு அதற்கு பதிலாக கைத்தறியால் நெசவு செய்த ஆடைகளை அணிந்து தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

அகிம்சையால் ஆங்கிலேயர்களை வெல்ல முடியாது என்று நினைத்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புரட்சியை தனது கையில் எடுத்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட வலுவிழந்த இந்திய தேசிய இராணுவத்திற்கு ஊக்கமளித்து புரட்சி தீ மூட்டினார். தொழில்நுட்பம் வளராத அந்த காலத்தில் "ஆசாத் ஹிந்து" என்ற வானொலி சேவையையும், *சுதந்திர இந்திய மையம்" என்ற அமைப்பையும் தொடங்கி மக்களிடம் சுதந்திர தாகம் மூட்டினார். இவரது புரட்சிப்போர் படையையும், அதன் மேல் மக்கள் காட்டும் நேசத்தையும் கண்ட ஆங்கிலேயர்கள் பலமுறை இவரை சிறைபிடிக்க நினைத்தனர். ஆங்கிலேயர் படைகளை ஆட்டம் காண வைத்த ஆண்மகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்பது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

சர் செய்யத் அஹமது கான் 1857 ஆம் ஆண்டு தொடங்கிய சுதந்திரப் போரில் மக்கள் தோல்வி அடைவதற்கான காரணங்களை ஆராய தொடங்கினார். அதன் விளைவாக மக்களிடையே நவீன அறிவுகள் குறைவாக இருப்பதே காரணம் என்பதையும் கண்டறிந்தார். இதன் காரணமாக 1859 ஆம் ஆண்டு ஒரு பாடசாலையை நிறுவினார். இப்பாடச்சாலை மதம் சார்ந்த சாலையாக இல்லாமல் ஹிந்து முஸ்லிம் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்திற்கு நவீன அறிவியல் மற்றும் பொதுஅறிவை வளர்க்கும் இடமாக உருவாக்கினார்.

அடிபணியாதே! என்பது காந்தியின் அகிம்சை கூற்று, 

அடி! பணியாதே! என்பது நேதாஜியின் புரட்சிக் கூற்று, 

படி பணியாதே! என்பது அகமது கானின் நவின கல்வியின் கூற்று.

இம்மூன்று வகையாக விடுதலை போர் புரிந்து, இன்னல் பல கண்டு, இரத்தம் சிந்தி இன்னுயிர் நீத்து இச்சுதந்திரத்தை நமக்கு பெற்று தந்துள்ளனர் நம் முன்னோர்கள்.

மேலும் 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கழகத்திற்கு முன்பே நம் தமிழ்நாட்டின் வீர மங்கை வேலுநாச்சியார் தலைமையில் பல விடுதலைப் போர் நடந்துள்ளது. ஆங்கிலேயரின் படையெடுப்பால் கணவரை இழந்த வீரமங்கை மாவீரன் ஹைதர் அலி சந்தித்துப் பேசினார். விருப்பாச்சியில் சில காலம் தங்கி மருது சகோதரர்களின் பெரும் உதவியால் சிவகங்கை மக்களை ஒன்று திரட்டி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் புரிந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

போர் புரிந்து உயிர் நீத்தது மட்டுமில்லாமல் தூக்கு மேடை ஏறியும், ஆங்கிலேயர்களின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகியும், இரத்தம் சிந்தி இன்னல் கண்டு பெற்றுத்தந்த இச்சுதந்திரத்தை வகுப்புவாதத்தால் பிளவு படுத்திவிடாமல் பேணிப் பாதுகாப்போம்.

"போராடி பெற்றுவிட்டோம் சுதந்திரத்தை..! கொண்டாடி மகிழ்வோம் சுதந்திர தினத்தை..! நீங்காது நினைத்திருப்போம் சுதந்திர தியாகத்தை ".

- மு. முஹம்மது சுஹைப் 

Published in Nagore Puranam August month magazine 2024

Post a Comment

0 Comments