தமிழர்கள் உலகில் எத்திசைக்கு சென்றாலும் எல்லோரும் அடைய வலைய சூழ்ந்து கேட்கும் கேள்வி எதற்க்கெடுத்தாலும் ஏன் பழம்பெருமை பேசி தமிழ் மொழியை தூக்குகிறீர்கள்? ஏனைய மொழிகளைப் போல் தமிழும் ஒரு மொழி தானே?
தமிழ் மொழியின் தனித்தன்மையும் அதன் தொன்மையையும் அறிந்திருந்தால் இதுபோன்ற கேள்விகள் எழுப்ப வேண்டிய தேவையே அவர்களுக்கு இருந்திருக்காது. இதில் நமக்கு வருத்தமளிக்கக்கூடிய விடயம் என்னவெனில் இதுபோன்ற கேள்வியை மற்ற இனத்தினரிடம் கேட்டால் அவர்கள் கொதித்து எழுவார்கள்.
பன்னெடுங்காலம் தொட்ட பன்மையான பழந்தமிழ் மொழியினை தாய் மொழியாக கொண்ட நம் மக்களின் அதீத பொறுமையே இதுபோன்ற கேள்வி ஆதிக்கத்திற்கு அடித்தளமாக அமைகிறது.
சமீபத்தில் நான் ஆங்கில இதழ் ஒன்றில் ஒரு செய்தியை படித்து நெகிழ்ந்தேன். அதில் ஒரு கட்டிடம் கட்டி வெறும் 300 ஆண்டுகளே இருக்கும். ஆங்கிலேயர்கள் இது என் இனத்தவரின் கட்டிடக்கலை என்று சொல்லி லண்டனில் இன்றளவும் அதனைப் பேணி பாதுகாத்து வருவதாக கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இணையத்தில் 'Heritage Now என்ற ஆங்கில இதழில் படித்தேன். இச்செய்தி ஒருபுறம் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் மற்றொரு புறம் வேதனையாக இருந்தது. இப்போக்கு ஏன் நம் இனத்தவர்களிடம் இல்லை என்று கேள்வியும் என் மனதில் எழுந்தது.
தமிழ்நாட்டில் நம் முன்னோர்களால் (தமிழர்களால்) கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள், கோட்டைகள் மற்றும் சுரங்கப் பாதைகள் என பல்லாயிரம் ஆண்டுகளை கடந்த பல்வேறு வகையான கட்டிடக் கலைகளும், தொழில்நுட்பம் வளராத காலத்திலேயே கலை நுட்பமாக செதுக்கப்பட்ட சிலைகள் யாவும் இருந்தும் அதனைப் பேணி பாதுகாக்கப்படாமலேயே இன்று அவை அழிவின் விளிம்பை எட்டியிருக்கிறது.
இதுபோன்ற பல கருத்துக்களை அவர்களிடம் எடுத்துரைத்தாலும் மீண்டும் அவர்கள் எழுப்பும் கேள்வி தமிழ் மட்டும்தான் பழமையானதா? மற்ற மொழிகள் இல்லையா?.
அவர்களுக்கான பதில் "உலகில் தோன்றிய முதல் மொழி, மூத்த மொழி, தமிழ் மொழி, அதுவே என் தாய்மொழி என்று அறுதியிட்டுக் கூறுங்கள். இதனை ஏற்க மறுப்போர் இடமும் அதற்கான தரவுகளை தருமாறு " மறுமொழிக் கூறுங்கள்.
நம் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் தொன்மையான நாகரீகத்தையும் மறந்து விட்டனர் இன்றைய தமிழ் சமூகத்தினர். இதன் விளைவாகவே 600 ஆண்டு மட்டுமே கடந்த மொழியினை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற கூற்றெல்லாம் திணிக்கப்படுகிறது.
இந்திய பெருங்கண்டத்தில் தோன்றிய மொழிகளில் தமிழே தொன்மையான மொழி, தமிழ் குடிகளே தொன்மையான குடி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. யாராலும் மறுக்க இயலாதது.
உலகிற்கே ஒற்றுமையையும், வீரத்தையும் சொல்லிக் கொடுத்து கப்பல் கட்டி கடல் கடந்து கண்டங்கள் பல கைப்பற்றி வீர சூர அரசாட்சி புரிந்தவர்கள் நம் தமிழர்கள் என்பதனை சொல்லி சொல்லி நம் சமூகத்தின் இளம் தலைமுறையினரை கூர்மையாக்குங்கள்.
ஆயிரம் ஆண்டு கூடக் கடக்காத மொழிகளள் எல்லாம் அறியனை மொழியாகும் எனில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் பேணி பாதுகாக்கப்பட்டு வரும் நம் தமிழ் மொழிக்கு அந்த அரியணையில் முதன்மையான இடம் வேண்டும் என்பதனை எடுத்துரையுங்கள். இவையாவும் உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை என்பதனை நினைவில் கொள்ளுங்கள்
இறுதியாக தமிழர்கள் பலம் பெருமை பேசுகிறார்கள். ஆம் உண்மைத்தான் பேசுகிறார்கள். அதன் மூலம் இன்றைய தமிழ்ச் சமூகத்தினரிடம் தமிழ்மொழியின் தொன்மை மற்றும் பண்பாட்டை பறைசாற்றுவதற்காகவே என்பதனையும் அவர்களிடம் சொல்ல மறந்து விடாதீர்கள்.
- மு. முஹம்மது சுஹைப்

0 Comments