தேசத்தில் தவழும் தென்றலே!

எங்கள் சுவாசத்தை சுதந்திரமாக்க 

தன் சுவாசத்தை நிறுத்திய 

சுதந்திர வீரர்களை சந்தித்தாயோ !

வேற்றுமையில்‌ ஒற்றுமைக்கு உவமையான இம்மண்ணில்

உலா வந்த உன் அழகோ !

ஒற்றுமையை உரு குலைக்க உருவான அரக்கர்களின்

அட்டூழியம் கண்டு அழுகிறாயோ!

குளுமையை சுமந்து வரும் தென்றலே!

உன்னில் கொதிக்கும் வெப்பம் குடிகொண்டு

தற்போது கொடுமைகள் அரங்கேறும்

அவலத்தைச் சொல்லி அலைகிறாயோ!

சமயங்கள் பலதானாலும் 

சர்ச்சைகள் இல்லா தேசத்தில் 

சந்தோஷம் வளர்வதைக் கண்ட நீ

சமயங்களில் பகையை உண்டாக்கி

மனித சடலங்களில் சர்வாதிகாரம்

வாழ்வதைக் கண்டே வருந்துகிறாயோ!

சூழ்ச்சிகள் வலையாகி 

முஸ்லிம்களின் சுதந்திர தியாகத்தை

சாட்சிகள் இல்லாது சரித்திரம் எழுதிட

ஏங்கும் காட்சிகள் கண்டு கலங்கினாயோ!

தியாகிகளின் வரலாற்றை 

திரையிட்டு மறைக்க இயலாது 

அடுத்த தலைமுறைக்கு நாம் சொல்லாமல் 

உண்மையை உணர்ந்திட வழி ஏது?

பகைமை வளர்க்கும் பாசிசம் வீழ்ந்து

பாரத தேசத்தின் பன்முகத்தன்மை மேலோங்கி 

தென்றலே உன்னில் வெப்பம் விலகி

குளுமை குடி கொள்ளும்!

தேசத்தில் சுதந்திர காற்றை சுவாசிப்போம்...

- கவிஞர் வடகரை ஃபரீது வாஹிதி