காரைக்கால் அரசு உயர்நிலை பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு தமிழ் வழி கல்வி தமிழ்நாடு கல்வித்துறை முறையில் அமைந்தது எங்கள் தலைவிதி.
தமிழ்நாட்டில் கல்லூரியில் கடைபிடிக்கப்பட்ட ஈர் ஆண்டு இடைநிலை இன்டர்மீடியட்ஸ் வகுப்பை புதுமுக வகுப்பு பி யுனிவர்சிட்டி கோர்ஸ் பி.யு.சி என்று வைத்துவிட்டனர். கல்லூரியில் குறைத்த ஓராண்டை பள்ளி மாணவர்கள் தலையில் கட்டி புது பத்தாம் வகுப்பு நியூ 10த் ஸ்டாண்டர்ட் என்று எங்கள் பள்ளி கல்வியை 11 ஆண்டுகள் ஆக்கிவிட்டனர்.
புது பத்தாம் வகுப்பில் நெடுங்காடு கிராமத்தில் இருந்து ராமதாஸ் என்ற மாணவரும் பயின்றார். அவர் குடும்பம் பெரிய மிராசு குடும்பம். நன்செய், புன்செய் தோட்டம் எல்லாம் உண்டு.
ராமதாஸ் அடிக்கடி பழுத்த பழங்கள், பச்சையாக தின்னும் பிஞ்சு காய்களை கொண்டு வருவார் காலை முதல் வகுப்பில் ஆசிரியருக்கு கொடுத்துவிட்டு எல்லா மாணவர்களுக்கும் கொடுப்பார்.
அன்று காலை முதல் வகுப்பு ஆங்கிலம், மாணவர் ராமதாஸ் பிஞ்சு வெண்டைக்காய்களை கொண்டு வந்து கொடுத்தார்.
ஆங்கில ஆசிரியர் வெண்டை பிஞ்சைத் தொட்டு தடவி இதற்கு ஆங்கிலத்தில் Ladies Finger என்று பெயர். எவ்வளவு அழகாக பெயர் வைத்து இருக்கிறார்கள். அதுதான் ஆங்கில மொழி அழகு என்றார்.
உடனே அந்த வகுப்பில் பயிலும் பள்ளி மாணவர் தலைவர் எழுந்து விளைந்ததற்கும் வெந்ததற்கும் ஒரே பெயர் அது அழகா ? என்று கேட்டார்.
ஆங்கில ஆசிரியர் புரியும்படி சொல் என்றார்.
மாணவர் விளைந்தது என்றால் Grown வெந்தது என்றால் Cooked இரண்டுக்கும் அதாவது விளைந்த அரிசிக்கும் வெந்த சோற்றுக்கும் ஒரே பெயர் Rice இது அழகா?.
மாணவர்கள் கலகலப்பாக சிரித்தனர். ஆங்கில ஆசிரியர் கேள்விக்கு பதில் சொல்லாது இந்த கலகலப்பு பாடத்தை ஆரம்பிக்கிறேன் உங்கள் வாழ்வும் கலகலப்பாக அமையட்டும் என்று சொல்லி பாடத்தை நடத்தினார்.
- கவிஞர் மு.அ. அபுல் அமீன்

0 Comments