பெண்மையை பேணுவோம் | மு. முஹம்மது சுஹைப் | February 2025

நவீன மயமான இந்த 21ஆம் நூற்றாண்டில் அடக்குமுறைகள் மற்றும் மூடநம்பிக்கைகள் ஒளிந்து எல்லோருக்கும் எல்லாமும் என்ற கோட்பாட்டில் பயணிக்க தொடங்கிவிட்டனர். ஆணுக்குப் பெண் அடிமை என்ற நிலை மாறி ஆணும் பெண்ணும் சமம் என்ற நிலை எல்லோர் மனதிலும் சமரசமாகவே பதிந்து விட்டது. பெண்களின் முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் வாழ்வு கடந்த 20 நூற்றாண்டுகளை விட இந்நூற்றாண்டில் எல்லாம் ஒரு பிடி அதிகமாக வளர்ந்துள்ளது.

ஆண்களைப் போல் உடைகளை அணியும் பெண்கள், ஆண்களைப் போல் எல்லாத் துறையிலும் சாதிக்கும் பெண்கள், ஆண்களைப் போல் ஊர் சுற்றும் பெண்கள், ஆண்களைப் போல் தனது பாவனைகளை மாற்றிக் கொள்ளும் பெண்கள் என்று எல்லாவற்றிலும் ஆணுக்குச் சமமாகவே இன்றைய காலத்தின் பெண்கள் மாறிவிட்டனர்.

பன்னெடுங்காலமாகவே பெண்கள் அடிமைபடுத்தப்பட்டனர் தமிழ் சமூகத்தில் என்ற பரவலான கூற்றே தவறு. அவ்வாறு இருந்தால் எப்படி வீரமங்கை வேலுநாச்சியார் போன்ற பெண்மணிகள் எழுந்து போரிட்டு ஆங்கிலேயர்களைப் புறமுதுகிட்டு ஓட செய்திருப்பார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியங்கள் 40க்கும் அதிகமான பெண்பாற் புலவர்களை கொண்டுபாடப்பட்டுள்ளது. மேலும் காப்பியங்கள் தோறும் தலைவனுக்கு நிகராகவே தலைவியை புகழ்ந்து பாடியுள்ளனர்.

தமிழர் சமூகத்தில் ஆணுக்குப் பெண் சமமாக தான் இருந்திருக்கின்றனர். இடையில் ஏற்பட்ட சூட்சம வரலாறுகளும், ஒரு சில சமய கோட்பாடுகளுமே பெண்களை அடிமைப்படுத்தியது அன்றி, பண்டைய காலத்தில் இருந்து தமிழ் சமூகத்தில் பெண்கள் அடிமைப்பட்டிருந்தார்கள் என்ற கூற்று முற்றிலுமாக தவறு.

இவ்வாறு ஆண்களுக்கு இணையாக தன்னை மாற்றிக் கொண்டு வரும் இன்றைய பெண்கள் அதனைச் சுதந்திரம் என்று சொல்வது ஒருபுறம் இருந்தாலும் எவற்றில் எல்லாம் அவர்கள் தங்களது சுதந்திரத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்பதே முக்கியமாக கவனிக்க வேண்டியது.

மேற்கிந்திய கலாச்சாரத்தைப் பின்பற்றிக்கொண்டு யாரிடமும் பழகிக் கொள்ளலாம், எவருடனும் ஊர் சுற்றலாம், ஆட்டம் பாட்டம், கூத்து கும்மாளம், புகைபிடித்தல், மது அருந்துதல், விபச்சாரம், சந்ததிகளைச் சீரழிக்கும் லிவ்விங் டுகெதர் வாழ்க்கை போன்ற பழக்கவழக்கங்களை பின்பற்றுவது பெண் சுதந்திரமா? அல்லது அவர்கள் தங்களின் பெண்மையை இழக்கிறார்களா? என்ற கேள்வி நம்மிடையே எழத் தொடங்குகிறது.

மேற்கூறியயவைகளை யார் செய்தாலும் தவறுதான். இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டியது சுதந்திரம் என்பது வேறு, சுதந்திரம் என்னும் பெயரில் தன் பெண்மையை இழந்து கொண்டிருப்பது வேறு.

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற நிலையை மாற்றி கல்வி கற்று சாதிப்பது பெண் சுதந்திரம். தொட்டாலே தீட்டு பார்த்தாலே தீட்டு என்ற நிலையை மாற்றி பெண்களைப் போற்றச் செய்வது பெண் சுதந்திரம். ஆயிரம்தான் தவறு செய்தாலும் அந்த கணவனின் காலில் தான் கிடக்க வேண்டும். கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற பழமொழி கோட்பாடுகளைத் தகர்த்து எறிந்து, சரியில்லாத துணைவரிடம் வாழ விருப்பம் இல்லாத பெண்கள் அவனிடமிருந்து விவாகரத்து பெற்று வந்து மறுமணம் செய்து கொள்ளலாம் என்பது பெண் சுதந்திரம். சமையலறையே பெண்களின் சாம்ராஜ்யம் என்ற நிலையை மாற்றி பல்வேறு துறைகளிலும் சாதித்து காண்பிப்பது பெண்களின் சுதந்திரம்.

மாதவராய் பிறப்பதற்கு மாபெரும் பாக்கியம் செய்திட வேண்டுமென்றார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. ஆகவே பெண் என்பவள் நம் வாழ்வில் அன்றாடம் தாயாக. துணைவியாக, சகோதரியாக மற்றும் தோழியாக இன்னும் பல உருவில் நம்மை சுற்றி வாழ்கின்றனர்.

கடந்த 20 ஆம் நூற்றாண்டில் இருந்த பெண்களுக்கான தன்மை என்பது இந்த நூற்றாண்டில் சுதந்திரம் என்னும் பெயரில் அவர்கள் இழந்து நிற்பதைப் பார்க்கும் போது என் மனம் மிகவும் வலிக்கின்றது. பெண்களுக்குச் சுதந்திரம் வேண்டும் அதனை இங்கு யாரும் ஒருபோதும் மறுக்கவில்லை ஆனால் சுதந்திரம் என்னும் பெயரில் அவர்கள் பெண்மையை இழந்து நிற்பது, நம் தமிழ் சமூகத்திற்கான அடையாளமான தாய்மையை இழந்து நிற்பது மிகவும் வருத்தம் அளிக்கக் கூடிய விடயம்.

இவைகளை எல்லாம் பார்க்கும் பொழுது, நம் தலைமுறையுடனே வெகுளியான தாயும், கள்ளம் கபடம் இல்லாத சகோதரியும், அரவணைக்கும் அன்பு துணைவியும், தோள் கொடுத்து தூக்கும் தோழிகள் போன்ற உறவுகள் காணாமல் போய்விடுமோ என்ற அச்சம் மனதினுள் எழு தொடங்குகிறது!

- மு. முஹம்மது சுஹைப்

Published in Nagore Puranam February month magazine 2025

Post a Comment

0 Comments