நம் இந்திய திருநாட்டில் அந்நியரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய நாளே ஆகஸ்ட் 15 இந்திய விடுதலை நாள்.
மக்களுக்குப் பாதகமான அந்நிய சட்டங்களை அகற்றி சட்ட மேதை அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் நிர்ணய அவை கூடி அலசி ஆராய்ந்து தேர்ந்து தெளிந்து மக்களின் கருத்துக்களையும் கேட்டு தயாரித்த சட்டங்கள் இந்திய அரசில் நடைமுறைக்கு வந்த நன்னாளே இந்திய குடியரசு நாள் ஜனவரி 26,
மக்களை மக்களே ஆளும் ஆட்சியே குடியாட்சி எனப்படும். மக்களாட்சி குடியாட்சியில் தலைமை மாறும்பொழுது நிலைமையும் மாறும் நிலையற்ற தன்மை நிலை குலையவும் செய்யும் அரசியல் போட்டி, பொறாமை, பூசல், அதிகாரத்தைப் பிடிக்கும் சூழ்ச்சி, பிடிக்காதவர்கள் பிடித்து விட்டால் முடக்கும் தடுக்கும் முன் முயற்சிகள், நீதி வழுவும் நெறிமுறைகள், விவாதங்களும் ஆதரவும் எதிர்ப்பும் செயலில் தாமதம் ஏற்படுத்தும் செயலின்மை மக்கள் நலனை விட கட்சி நலனே மேலோங்கி நிற்கும் திட்டங்கள் மட்டமாகிவிடும். தீமையே விளையும் ஊழல் பெருகும். பொதுமக்களின் கருத்துக்கள் புகார்கள் புறக்கணிக்கப்படும்.
உலகில் குடியரசு ஆட்சியில் எந்த நாட்டிலும் வறுமை ஒழிக்கப்படவில்லை. எனினும் குடியரசில் மக்கள் சுதந்திரமாக செயல்படுவது போல் பிற ஆட்சிகளில் செயல்பட முடியாது. செப்புவன செப்ப முடியாது. செயல்படுத்துகிறார்களோ இல்லையோ ஏற்கிறார்களோ மறுக்கிறார்களோ மக்கள் எண்ணியதைத் திண்ணமாக சொல்லமுடியும் குடியரசில்.
குடியரசில் மக்கள் மதிப்பு உடையவர்கள். நடைமுறையில் ஆணவம் பிடித்த ஆள்வோர் ஆங்காங்கே அலட்சியப்படுத்தினாலும் அப்படி அலட்சியப்படுத்துவோர் அதள பாதாளத்தில் விழுந்து அவதிக்கு ஆளாவதைப் பார்க்கின்றோம்.
அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி தட்டி கேட்டு தடுத்து திருத்தும் உரிமை குடியரசில் மக்களுக்கு உள்ளது.
ஆளும் கட்சி எண்ணிக்கையில் கூடி சதிகாரமாக ஏதாவது செய்தாலும் மக்களின் போராட்டங்கள் மக்களின் சட்ட உரிமைகளை மீறி ஆள்வோர் செயல்பட முடியாமல் செய்துவிடும். மக்களின் ஒற்றுமையின்மை குடியரசைக் குலைத்து விடும்.
இந்திய குடியரசின் இணையற்ற பெருமை இந்திய மக்களின் பொறுமை.பொறுமை வெறுமை ஆகாது காப்பது இந்திய குடியரசின் கடமை.
- கவிஞர் மு.அ. அபுல் அமீன்

0 Comments