வள்ளுவனை வைத்து வாழ்வியல் நெறி காட்டுவது என்பது நம் தமிழ்ச் சமூகத்தின் தலையாய நீதி. அதன் வகையில்,
" எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொண்ட மகற்கு "
என்ற வள்ளுவனின் குறளுக்கு பொருளாக எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை என்பது மு. வரதராசனின் கூற்று.
“சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும் "என்பது பழமொழி.
இன்று ஆயிரமாயிரம் பட்டப் படிப்புகளை படித்தாலும், ஆயிரமாயிரம் நூல்களை படைத்தாலும், லட்சோப லட்சம் வருமானம் ஈட்டினாலும் அன்று நமக்கு 'அ' என்ற எழுத்தைக் கற்றுக் கொடுத்தவர் நம் ஆசிரியர் என்பதனை என்றும் மறக்க கூடாது.
பள்ளி கல்லூரி படிப்பை முடித்து முதுகலை பட்டம் பெற்று பின் பல்வேறு துறைகளில் மேலிடங்களில் பதிவி வகிப்பவர்கள் தனக்கு பள்ளியில் பாடம் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களை ஏளனமாக பார்க்கின்றனர். தான் முதுநிலை பட்டதாரி, மேலிடங்களில் பதவி, அதிக ஊதியம் என்ற அகம்பாவமே அதற்கு காரணம்.
ஒன்றை மட்டும் இத்தருணத்தில் நினைவில் கொள்ள வேண்டும். அன்று மழலையாய் ஒன்றும் தெரியாமல் வந்த வயல்வெளியில் இன்று பூத்துக் குலுங்கி அதில் பல அறுவடை நடைபெறுகிறதென்றால் அன்று அந்நிலதத்தை பண்பட உழுதவர் ஆசிரியர் என்பதனை நினைவில் கொள்க.
இன்று இவர்கள் நினைப்பதுபோல் அன்று அவர் நினைத்திருந்தால் அந்த நிலம் அன்றே பாழடைந்திருக்கும்.
கல்வி எனும் ஆழியில் இருந்து நம் வயதிற்கேற்ப தேவையான அரசியல், அறிவியல், ஆன்மீகம், ஒழுக்கம், பொதுநலம், சமூக சிந்தனை, சமய நல்லிணக்கம் மற்றும் பகுத்தறிவுகளை எடுத்துரைக்கும் ஆசிரியர்களை என்றைக்குமே போற்றிப் புகழ வேண்டும்.
குழந்தையை பெற்றெடுப்பது தாய், அக்குழந்தையை சான்றோராக வளர்ப்பது தந்தை, அவனை தன் சொல்லாலும் செயலாலும் செதுக்குபவர்கள் ஆசிரியர்களே. இதன் காரணமாகவே மாதா, பிதா அடுத்து தெய்வத்திற்கு முன்பு ஆசிரியர்களை வைத்தனர் நம் முன்னோர்கள்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராசர் ஒரு கூட்டத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களிடம் "ஐயா ஏழ பசங்கலயா நான் உங்கள்ட படிக்க அனுப்புறேன் ஏமாதிறாதிங்கயா எப்படியாவது அவன்களை படிக்க வைச்சுரங்கையா எனக் கைகூப்பி வேண்டிக்கொண்டாராம். அறிவார்ந்த சமுதாயத்தினை உருவாக்க சமுதாயத்தினை உருவாக்க ஆசிரியர்களால் மட்டுமே முடியும் என்பதனை அறிந்த காமராசர் அரசியல்வாதிகளிடமோ மத தலைவர்களிடமோ கேட்டுக் கொள்ளவில்லை. நாட்டின் முதல்வர் என்றும் பாராமல் தொடக்க பள்ளி ஆசிரியர்களிடமே கைக்கூப்பி கேட்டு கொண்டதிலிருந்தே நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
நமக்கு பாடம் கற்றுக் கொடுத்தவரை எவ்வாறு போற்ற வேண்டும் என்பதனை, "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என ஆத்திசூடியில் ஔவையார் பாடியிருக்கிறார்.
என்னானாலும் விதைக்கப்பட்ட விதை என்றாவது ஒருநாள் ஆலமரமாய் வேரூன்றி நிழல் பரப்பும் என்ற நம்பிக்கையிலேயே எல்லா மாணவர்களுக்கும் பாடம் கற்றுக் கொடுக்கின்றனர் ஆசிரியர்.
அவ்வாறு முளைத்த விதைகளில் சில தான் முன்னாள் குடியரசு தலைவரும் & விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே. அப்துல் கலாம், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை, முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி போன்றோர்கள்.
- மு. முஹம்மது சுஹைப்

0 Comments