மெத்தனமே மெத்தனால் | மு. முஹம்மது சுஹைப் | July 2024

இயற்கையை மறந்து விட்டு எல்லாவற்றிற்கும் செயற்கையை நோக்கி செல்லும் இன்றைய உலகத்தில் உணவு மற்றும் குளிர்பானங்களுக்கு மட்டும் என்ன விதி விலக்கா?

இருபது ரூபாய் கொடுத்து நம் கண் முன்னே பிழிந்து கொடுக்கப்படும் பலச்சாறுகளை வாங்குவதற்கு மாறாக 5 ரூபாய் கொடுத்து நெகிழியில் அடைக்கப்பட்ட செயற்கை முறையில் இரசாயன கலந்த சாறுகளை பழச்சாறு என வாங்கி குடிக்கிறோம்.

பல நாட்களுக்கு முன்பே தயார் செய்து விரைவாக கெடாமல் இருக்க செயற்கை இரசாயனங்களை கலந்து நெகிழியில் அடைத்து பின்னர் நம் கைகளுக்கு கிடைக்கிறது. இதனை நாம் அறிந்தும் நமது குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இது ஒரு புறம் இருக்க நம் நாட்டில் விஷச் சாராய உயிரிழப்புகள் ஒன்றும் புதிதல்ல. சாராயம் என்பது Ethanol (Ethyl Alcohol) பொருளைக் கலந்து தயாரிக்கப்படும். இதனை அரசின் அனுமதியில்லாமல் தயாரித்தால் அது கள்ளச்சாராயம் ஆகும். ஆனால் நம் நாட்டில் இன்று உயிரைக் குடிக்கும் வேதியல் பொருட்களை மது போதைக்காக கலந்து விஷச் சாராயங்களைக் குறைவான காசுக்கு விற்கிறார்கள்.

சாராயத்தின் மீது கொண்ட மோகம், வேலையில்லாத் திண்டாட்டம் வருமானமின்றி பண விரக்தியில் ஏதாவது ஒரு பாக்கெட் சாராயம் கிடைத்தால் போதும் என்ற நினைத்ததன் விளைவே இன்று கள்ளக்குறிச்சியில் மரண ஓசைகள்.

மது மனதை மயக்கும் மாயை என்பது ஆய்வாளர்களின் கூற்று.

குளிர்சாதனங்களை பதப்படுத்த செயற்கைப் பொருட்களை கலந்துக் கலப்படமாக உருவாக்கப்பட்ட காலம் போய் இன்று மதுவில் கலக்கத் தொடங்கி விட்டனர்.

பொதுவாக மதுவே விஷம் என்பது ஒரு புறம் இருந்தாலும் அதனைத் தயாரிக்க செயற்கை வேதியல் பொருட்களை கலந்து விஷச் சாராயமாக உருவாக்குகின்றனர். இவ்வாறான விஷச்சாராயங்களை குடித்ததனால் கடந்த இரு வாரங்களில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த 60 பேர் இறந்துள்ளனர்.

மெத்தனால் மனித உடலுக்குள் நுழைந்ததும் உணவு மண்டலம், நரம்பு மண்டலத்தை சீர்குலைத்துவிடும். வயிற்றுக்குள் விஷச் சாராயம் சென்றவுடன் மகிழ்ச்சியாக இருப்பது போல் தோன்றும். ஆனால் அடுத்த சில விநாடிகளில் வயிறும், குடலும் வெந்துவிடும்.

மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்தவர்கள் நுரைநுரையாக வாந்தி எடுப்பார்கள். அந்த வாந்தி எல்லாம் நுரையீரலுக்குச் சென்றுவிடும் என்பதால் சட்டென்று மூச்சு அடைத்துவிடும். அதேநேரத்தில் நரம்பு மண்டலம் வழியாக மெத்தனாலின் விஷத்தன்மை மூளைக்கும் பரவுவதால், மூளை செல்கள் உடனே அழிந்துவிடும்.

மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட்டு ஓரிரு நிமிடங்களில் அவர்கள் மயக்கமடைந்துவிடுவார்கள். அதிக போதை வேண்டும் என்ற எண்ணத்தில் அறியாமையால்தான் இதனைச் சிலர் சாப்பிடுகின்றனர். அதிக நேரம் போதையில் மிதக்கச் செய்வதன் மூலம் இது தங்களை நேராக சொர்க்கத்திற்கே கூட்டிச் செல்லும் என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால், நடப்பதோ வேறு, என்று BBC தமிழுக்கு அளித்தப் பேட்டியில் மருத்துவர் ஜெயராமன் கூறியுள்ளார்.

இதனையெல்லாம் கேட்டால் நம் குலை நடுங்குகிறது. இறந்தவர்களின் குடும்பம் என்ன நிலையாகும் ?. அப்பா வீட்டிற்கு வருவார் என எதிர்பார்த்து இருந்த அந்த குழந்தைகளுக்கு என்ன பதில் சொல்வது? அன்பு சொந்தங்களே! இனியாவது விழித்துக் கொள்ளுங்கள். மது நம்மை மட்டும் அல்ல நம்மைச் சார்ந்தவர்களையும் பாதிக்கிறது.

நம் மக்களின் மெத்தன்மே இன்று இது போன்ற மெத்தனால் கலைந்த விஷச் சாராயங்களைக் குடிக்கத் தூண்டுகிறது.

திருக்குறள்:

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு

பொருள்:

'கள்' என்னும் யாவரும் இகழும் பெருங்குற்றத்தை உடையவரை, 'நாண்' என்று சொல்லப்படுகின்ற உயர்ந்தவள், பார்ப்பதற்கும் அஞ்சி முகத்தைத் திருப்பிக் கொள்வாள்.

- மு. முஹம்மது சுஹைப் 

Published in Nagore Puranam July month magazine 2024

Post a Comment

0 Comments