Nagore Puranam
புரட்சியின் புன்னகை | கவிஞர் சூ. சிவராமன் | July 2024

புரட்சியின் புன்னகை | கவிஞர் சூ. சிவராமன் | July 2024

வால்மார்ட்கள் கைப்பற்றுவதற்கும் முன்னமே 

கழுதைகளின் முதுகிற்கு கிடைத்து விட்டது சுதந்திரம் ...

லாப்ரடார்கள் ஜெர்மன் ஷெப்பர்ட் கள் வந்திறங்கிய பின் 

ராஜபாளையமும் கோம்பைகளும் குரைப்பை நிறுத்திவிட்டன ...


மலைச்சரிவுகளில் தேநீர் துளிர்க்கிறது

தரிசுகளில் தைலமரங்கள் நிமிர்கிறது...

சூளைகளில் பனைகள் கனன்று கொண்டிருக்கின்றன 

அத்தனையும் நாம் பறக்கும் சாலைகளுக்காகத் தானே ...

என்ன..!

அவசரச் சட்டங்கள் நிலங்களை விழுங்குகின்றனவா?

வல்லரசுப் பதாகைகளைப் கவனியுங்கள்

விண்முட்டும் சிலைகளைக் கண்டுகளியுங்கள் ...

காவியத் தலைவனுக்கோர் 

ஆலயம் எழும்பிய பிறகுமா 

பயிருக்கு தண்ணீர் போதவில்லையென கண்ணீர் உகுக்குறீர்கள்! 

ஆழ்ந்து மூச்சை உள்ளிழுங்கள்! 

யோகா செய்யுங்கள்!

எங்கே ஆழ்ந்து மூச்சை உள்ளிழுங்கள் !

நிலவின் தென்துருவத்தை உற்று நோக்குங்கள்! 

பதறாதீர்கள் அது புல்டோசர் அல்ல, சந்திராயன் 2.

- கவிஞர் சூ. சிவராமன் 

Post a Comment

0 Comments