ஆத்திலே போட்டுட்டு வா ! | கவிஞர் மு.அ. அபுல் அமீன் | July 2024

நாகூர் கௌதிய்யா நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் வெங்கடேசன் மாணவர்களுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர். எங்கள் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக சேர்ந்தார்.

அக்காலத்தில் கல்லூரிக்குச் செல்லாமல் தனி தேர்வு எழுதி பட்டம் பெறும் வாய்ப்பு ஆசிரியர்களுக்கு மட்டுமே உண்டு. ஆசிரியர் வெங்கடேசன் அவ்வாறு படித்து இளநிலை பட்டம் பெற்றார்.

ஓராண்டு விடுப்பு எடுத்துக் கொண்டு கல்லூரியில் சேர்ந்து படித்து கல்வி இயலில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் நாகை தேசிய உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக மாறுதல் பெற்றார்.

அங்கு பணியாற்றும் பொழுது இரண்டு ஆண்டுகள் எழுத வேண்டிய எட்டு தேர்வுகளை ஒரே ஆண்டில் எழுதி முதுகலை பட்டம் பெற்றார். அதே பள்ளியில் மேல்நிலை வகுப்பு ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார்.

ஐந்தாம் வகுப்பு ஆசிரியராக இருந்த பொழுது நடந்த ஒரு நிகழ்ச்சி. வெங்கடேசன் கலகலப்பான ஆசிரியர். சிரிக்க வைத்து பாடம் நடத்தி மாணவர்கள் மனதில் பதிய வைக்கும் பக்குவமான ஆசிரியர். அந்த ஆசிரியர் வகுப்பில் நுழைந்து வகுப்பு முடிந்து செல்லும் வரை சலசலப்பு இல்லாத கலகலப்போடு பாடம் நடக்கும்.

ஒரு நாள் வழக்கத்திற்கு மாற்றாக சினத்தால் சிவந்த முகத்தோடு ஒரு கையில் பையைக் கொண்டு வந்த ஆசிரியர் நெருப்பு சம்சீன் என்று கோபமான குரலில் அழைத்தார். அப்துல்ரஹீம் என்ற அந்த மாணவர் அச்சத்துடன் எழுந்து நின்றான். நாகூர் பகுதியில் பேச்சு வழக்கில் சம்சீன் என்ற சொல்லுக்கு வீரன் என்று பொருள்.

அந்த மாணவரிடம் சைக்கிள் இருந்தது. சைக்கிள் தெருவில் ஓடாது பறக்கும். கையிலிருந்த பையை அந்த சம்சீனிடம் கொடுத்த ஆசிரியர் கோபம் குறையாமல் ஆத்திலே போட்டுட்டு வா என்றார்.

சைக்கிளில் பறந்த சம்சீன் ஆசிரியர் சொன்னதைச் செய்து விட்டு வகுப்பிற்குத் திரும்பினார்.

மாலையில் வகுப்பிற்கு வந்த ஆசிரியர் வெங்கடேசன் பையை என்ன செய்தாய் என்று அந்த மாணவரிடம் கேட்டார். நீங்கள் சொன்னபடி வெட்டாத்துக்குப் போனேன். வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மதில் சுவரில் ஏறி நின்று அல்லாஹ் எங்கள் ஸார் நல்லாயிருக்கனும் என்று அல்லாஹ் விடம் துஆ செய்து ஆத்திலே போட்டேன் என்று பவ்வியமாக பதில் சொன்னார். (துஆஎன்றால் இறைவனை இறைஞ்சுதல்)

அத்தனை மாணவர்களும் மொத்தமாக சிரிக்க ஆசிரியரும் கோபம் மாறி குலுங்கி சிரித்தார்.

- கவிஞர் மு.அ. அபுல் அமீன்

Published in Nagore Puranam July month magazine 2024

Post a Comment

0 Comments