மனிதா! உன் பிறப்பின் முதல் வரிகளும் வார்த்தைகளும் கண்ணீர்
வாழ்வின் இறுதியில் உயிர் பிரிவின் மடியினில் உறவுகளுக்கு விடைசொல்லும் கண்ணீர்
ஒவ்வொரு மனிதனிலும் ஒளிந்திருக்கும் நண்பன் கண்ணீர்!
வலிகள் தாளாமல் வார்த்தை சொல்ல இயலாமல் தத்தளிக்கும் வேளைதனில் உன் கன்னத்தில் கரை கழுக வரும் நண்பன் கண்ணீர்!
ஒவ்வொரு நிலைகளிலும் ஓராயிரம் படிப்பினையை மனதில் பதியவைக்கும் பாடம் கண்ணீர்!
ஒவ்வொரு துளிகளிலும் வலிகளும் இழப்பும் சிலவேளை மகிழ்ச்சியையும் அடையாளம் காட்டும் கண்ணீர்!
மொழியறியாத மனிதனுக்கும் நம் வேதனையின் முகத்தை விளக்கிச்சொல்லும் கண்ணீர்!
ஏழைகளின் கன்னத்தில் பரிதாபத்தின் ரேகையை படர்ந்திடச் செய்யும் கண்ணீர்!
உறவை பிரிகையில் உள்ளத்தின் வலிகளை உலகிற்கு சொல்லும் கண்ணீர்
நேசித்த மனிதரை பிரிந்திடும் நேரமதில் சுவாசித்து சந்தோச நிமிடங்களையும் எதிர் வரும் தனிமையின் தவிப்பையும் உள்ளத்தில் நினைவூட்டும் கண்ணீர்!
இழந்தது நம்மில் மீள்கையிலும் நினைத்தது நம்மில் சேர்கையிலும் இமைகளை கடக்கும் ஆனந்த கண்ணீர்!
உலகில் பிறந்த ஒவ்வொருவரும் பலமுறை ருசித்த பானம் கண்ணீர்!
மனிதா நிலைகளை கவனித்து கனத்துவிடும் கண்ணீர் துளிகள்!
எதிர்பார்ப்பு இல்லாமல் உனை வளர்த்தவர்களை முதுமையில் எதிர்பார்க்க வைத்தால் ரணத்தால் கொடியது கண்ணீர்!
பாசத்தை விதைத்து விட்டு மோசத்தை அறுவடை செய்தால் எப்போதும் உன் முகத்தை மறக்கச்செய்யாது ஏமாற்றத்தில் வடிந்த கண்ணீர்
தவிப்பின் வேளையில் உன்னால் இயன்றதை நீ உதவ திகைப்பின் உச்சத்தில் நன்றியை நவிலும் கண்ணீர்
வேதனையை வேடமாய் அணிந்து கபடத்தில் கரைசேரும் கயவர்கள் முகத்திலும் மேடையில் கண்ணீர்!
உலகின் உண்மையை அறியாமல் உன் வாழ்வைத் தொலைக்காதேயென உண்மையை உணர்த்தும் கண்ணீர்!
தேவையை முன்வைத்து கையேந்தும் வேளைதனில் இறைவனின் கிருபையை பெற்றுத்தரும் இமைகளைத்தாண்டி வழிந்தோடும் கண்ணீர்!
தனிமையில் இருந்தபோதும் செய்த தவறை நினைத்து இறைவன் முன் கன்னத்தில் கண்ணிரை வழிந்தோடச்செய் மறுமையில் நீ தவிக்கையில் இறைவன் தன் மாண்பால் சுவனத்தின் பக்கம் உள்ளை விரைந்தோடச்செய்யான்!!
மனிதா கண்ணீர் துளியை முளைக்கும் இடத்தில் சிந்து உனை பழிக்கும் இடத்தின் முன் ஒருபோதும் சிந்தாதே!!!
- கவிஞர் வடகரை ஃபரீது வாஹிதி

0 Comments