அஞ்சறைப் பெட்டியே அருமருந்து | மு. முஹம்மது சுஹைப் | June 2024

 


தமிழர்களின் உணவு முறைகளையும், வாழ்வியல் நெறிகளையும் பின்பற்றுபவர்களின் சமையலறையில் தனக்கென தனிச்சிறப்போடு தலைமை தாங்குவது இந்த அஞ்சறைப் பெட்டியாகும்.

இந்த பெட்டியினுள் வட்ட வடிவிலான ஐந்து சிறிய பெட்டிகள் இருக்கும். அதன் காரணமாகவே அதனை ஐந்தறை பெட்டி என்று அழைத்ததாகவும் அதுவே காலப்போக்கில் அஞ்சறைப் பெட்டி எனவும் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனுள் சமையலுக்கு தேவையான மிளகு, மஞ்சள், கடுகு, சீரகம், வெந்தயம் வைக்கப்பட்டிருக்கும். நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவில் நாமே அறியாமல் சேர்க்கப்படும் அரிய வகை மூலிகை மருத்துவம் மிக்க பொருட்களாக இவைகள் இருக்கின்றன.

மிளகு:

ருசிக்காகவும் வாசனைக்காகவும் சேர்க்கப்படும் பொருளாக கருதப்படும் மிளகின் மருத்துவ தன்மை சொல்லிலடங்காதது. உணவில் காரத்திற்காக மிளகாய் தூளை உபயோகிக்கும் இன்றைய தலைமுறையினருக்கு மிளகுவின் மருத்துவ குணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் தூளினால் வயிற்றில் பல உபாதைகள் உருவாகலாம். ஆனால் மிளகை காரத்திற்காக எவ்வளவு எடுத்துக் கொண்டாலும் அது நம்மை சுறு சுறுப்பாக்கி நலமுடன் வாழச் செய்கிறது. எத்தகைய விசத்தினையும் முறிக்கும் தன்மை கொண்டதாக மிளகு இருக்கிறது. பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பது நம் முந்தைய தலைமுறையினர் வரை பேச்சு வழக்கிலும் வாழ்வியலும் இருந்துள்ளது. பசியின்மை, வறட்டு இருமல், வயிற்று உபாதைகள், ஜீரண கோளாறு, இரத்த சுத்திகரிப்பு, மற்றும் வாதம், கபம், பித்தம் தொடர்பான பிரச்சினைகளுக்கும் இது சிறந்த மருந்தாக திகழ்கிறது.

மஞ்சள்:

இது குறித்து அதிக விளக்கம் நமக்கு தேவையில்லை. சிறுவயதிலிருந்து இந்நாள் வரை நமக்கு உடலில் எங்காவது அடிபட்டால் உடனே நம் வீட்டில் செய்யும் முதல் வைத்தியம் மஞ்சள் பத்து. அதாவது ஒரு கரண்டி மஞ்சள், நான்கு கல் உப்பு சிறிது நீரை கலந்து அடுப்பில் வைத்து சூடுகாட்டி அதனை நோவினை உள்ள இடத்தில் தேய்த்து விடுவார்கள். இவ்வாறு மஞ்சள் பத்து போடுவது தலைச்சிறந்த கிருமி நாசினி. இவை மட்டுமின்றி இருமல், பசியின்மை, சரும பிரச்சனைகள், கல்லீரல் நோய், கீழ் வாதம் மற்றும் புண்களை ஆற்றும் தன்மையை கொண்டுள்ளது. இதன் காரணமாகவே எல்லாவற்றிலும் மஞ்சளுக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர்.

இதன் காரணமாகவே பண்டைய காலத்திலிருந்து வீட்டு வாசலில் மஞ்சள் தெளிப்பது, மற்றும் இல்லத்தரசிகள் மஞ்சள் தேய்த்து குளிப்பது போன்றவைகள் பின்பற்றி வரப்படுகிறது. மேலும் இந்த மஞ்சளின் மகத்தான மருத்துவ குணத்தை உணர்ந்த அயல் நாட்டினர் இதனை இந்தி என்று அழைக்கின்றனர்.

கடுகு : 

கடுகு காரமானவை என்பது தெரியாது. இதனை மெய்பிப்பதாகவே நம் பேச்சுவழக்கில் கடுகு சிறிசானாலும் காரம் பெருசு என்கிறோம். காரத்திற்காக உபயோகிப்பது மட்டுமின்றி நாள்பட்ட இருமலை கட்டுப்படுத்துவதிலும், விஷத்தை முறிப்பதிலும் மிளகுக்கு அடுத்தபடியாக திகழ்கிறது. இணையத்திலும் நுண் பொறியியல் துறையிலும் அதீத நேரம் செயல்படுபவர்களுக்கு ஏற்படும் ஒற்றைத் தலைவலிக்கு கடுகை தொடர்ச்சியாக சாப்பிடுவதனால் நாளடைவில் அது பூரணமாக குணமடைகிறத. அது மட்டுமின்றி பல்வேறு நன்மைகளை கொண்ட கடுகு காரம் மிக்கது, உடலுக்கு உஷ்ணத்தை தரக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. காய்ச்சலை தணிப்பதுடன் வலியையும் குறைக்கும்.

சீரகம்:

சீரகம் என்பதனை சீர் + அகம் = சீரகம். சீரகத்தை உட்கொள்வதினால் நம் அகத்தில் ஏற்படும் சீரான தன்மை கருத்தில் கொண்டே இதனை சீரகம் என அழைக்கின்றனர். செரிமானத்தை மேன்மை படுத்துவதில் இதற்கு நிகர் வேறில்லை. மலச்சிக்கல், வாயு தொல்லை, குடல் புண், புற்றுநோய் மற்றும் நாள்பட்ட வயிறு உபாதைகள் உள்ளவர்கள் சீரகத்தினை உட்கொள்வதனால் இவைகள் நீங்கி சீரான உடலை அமைப்பதில் சீராகம் முதன்மையாக திகழ்கிறது. இதுமட்டுமின்றி இதயத்தின் ஆரோக்கியம் மற்றும் நரம்பு மண்டலம் சீராகச் செயல்பட உதவுகிறது.

வெந்தயம்:

இயற்கையாகவே உடல் சூட்டைக் குறைக்கும் தன்மைக் கொண்டது வெந்தயம். வெயில் காலங்களில் உடல் அதீத உஷ்ணம் அடைந்தால் ஒரு கரண்டி வெந்தயத்தை சிறிய பாத்திரத்தில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து அதிகாலையில் குடித்தால் சூடு நீங்கி உடல் சுகம் பெறும். நீரிழிவு நோயாளிகளுக்கு வெந்தயம் ஒரு வரப்பிரசாதம் ஆகும். இதனை தொடர்படியாக உட்கொள்வதினால் உடலிலுள்ள சர்க்கரை மற்றும் குளுகோஸ் அளவை ஏற்றத் தாழ்வின்றி ஒரே சீராக இருக்கச் செய்யும். அதுமட்டுமின்றி முகம் பொலிவு பெற இரசாயன பொருட்கள் கலந்த முகப் பூச்சுகளை தவிர்த்து விட்டு சிறிதளவு வெந்தயத்தை எடுத்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் சர்மம் மிருதுவாவதை நாம் கண்கூடாக காணலாம். மேலும் முகப்பரு, தேமல், கரும்புள்ளி போன்றவைகளையும் நீக்கும் மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் உடல் உபாதைகள் அனைத்திற்கும் வெந்தயம் நிவாரணம் அளிக்கிறது. பெண்களுக்கு சாதாரணமாக ஏற்படும் இரும்புச்சத்து கோளாறை வெந்தயம் போக்குகிறது.

நவீன அஞ்சறைப் பெட்டி:

பண்டைய காலத்தில் இருந்த ஐந்தறைப் பெட்டி இன்றைய காலத்தில் நவீன மயமாக்கப்பட்டு எவர்சில்வர் மட்டும் நெகிழி பொருட்களால் உருவாக்கப்பட்டு ஒன்பதிலிருந்து பன்னிரண்டு சிறிய நெகிழி பெட்டிகளை வைக்கும் அளவிற்கு அஞ்சறைப் பெட்டிகள் வளர்ந்துள்ளது. 

மஞ்சள், குங்குமம், மிளகு, சீரகம், கடுகு இவை மட்டுமின்றி லவங்கம், பட்டை, கிராம்பு போன்றவை அதனுள் வைத்து சமையலுக்கு உபயோகின்றனர்.

பணப்பெட்டி (அஞ்சறைப் பெட்டி):

முன்னேற்றம் அடைந்த இந்நூற்றாண்டில் வங்கியில் பணம் சேர்க்கும் இளம் தலைமுறையினருக்கு தன் வீட்டு அடுப்பங்கரையில் இருந்த பணப்பெட்டி குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தேவைக்கு போக மீதமுள்ள பணத்தை இல்லத்தரசிகள் யாருக்கும் தெரியாமல் இந்த அஞ்சறைப் பெட்டியினுள் மறைத்து வைப்பார்கள்.

எதிர்பாராத விதமாக பண தேவை ஏற்பட்டால் இந்த அஞ்சறைப்பெட்டியில் இருந்து சேர்த்து வைத்த பணத்தை எடுத்து வீட்டாருக்கு கொடுப்பார்கள்.

மேலும் கணவரிடம் மகன் கேட்ட பணத்தை அவர் கொடுக்க மறுத்தால் தாய் அன்பாக எடுத்து இரகசியமாக மகனுக்கு பணம் கொடுக்கும் அம்மாவின் அன்பு பெட்டியும் அந்த அஞ்சறைப்பெட்டி தான்.

அன்னையின் அன்பு பெட்டியாய் சமையலறையின் மூல பெட்டியாய் சித்த மருத்துவத்தின் மருத்துவ பெட்டகமாய் உணவையே மருந்தாக்கும் உயரிய பெட்டகமாய் இருக்கும் இந்த அஞ்சறைப் பெட்டியை இனிவரும் காலங்களிலாவது அஞ்சறைப்பெட்டி மூதாதையர்கள் உபயோகித்த வெறும் சமையல் பொருட்களாக பார்ப்பதை விடுத்து உணவின் மூலம் மருத்துவத்தை சேர்க்கும் பெட்டகமாக கருத வேண்டும்.

- மு. முஹம்மது சுஹைப் 

Published in Nagore Puranam June month magazine 2024

Post a Comment

0 Comments