பூனைக் கூட்டியாடி | கவிஞர் மு.அ. அபுல் அமீன் | June 2024

 


காரைக்கால் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மஹிபாலன் கேரளாவில் பிரெஞ்சு ஆளுகையில் இருந்த மாஹேயிலிருந்து வந்தவர். மலையாளம் கலந்த மழலைத் தமிழ் பேசுவார்.

ஒரு நாள் பதினோராம் வகுப்பிற்கு வந்த தலைமை ஆசிரியர் முன் பெஞ்சில் உட்கார்ந்து இருந்த காசிமைப் பூனைக் கூட்டியாடி என்று பணித்தார். காசிம் வெளியில் சென்றான்.

ஆசிரியர் பாடம் நடத்த ஆரம்பித்தார்.

வழக்கம்போல் வகுப்பில் சுற்றி சுற்றி வந்து கரும்பலகையில் எழுதுவதை எழுதி படம் போடுவதைப் படம் வரைந்து விளக்கினார். எங்கள் வகுப்பு அறை சுவரில் சுவர் கடிகாரம் கிடையாது. ஆசிரியரும் கையில் கை கடிகாரம் கட்டமாட்டார். ஆனால் சரியாக முப்பத்தைந்து நிமிடங்களில் பாடத்தை முடித்து விடுவார்.

மாணவர்களிடம் ஏதேனும் சந்தேகங்கள் என்று கேட்பார். மாணவர்கள் சந்தேகம் கேட்காவிட்டால் ஆசிரியர் கேள்வி கேட்பார். ஆசிரியரின் கேள்வியைத் தவிர்க்க முன் பெஞ்சில் அமர்ந்து இருப்போர் ஏதேனும் கேள்விகள் கேட்பார்கள். ஆசிரியரிடமிருந்து தப்பிக்க மாணவர்களின் தந்திரம்.

காசிம் ஒரு சாக்கு மூட்டையுடன் வகுப்பு அறைக்குள் நுழைந்தான். எங்கே போனே? என்ன மூட்டையில்? என்று கேட்டார் ஆசிரியர்.

நீங்கள் தானே பூனையைக் கூட்டிக்கிட்டு வர சொன்னீங்க. படாதபாடுபட்டு கஷ்டப்பட்டு பூனையைப் பிடிச்சு சாக்கில் கட்டி கொண்டு வந்தேன் என்றான் காசிம். மூட்டையை அவிழ்த்ததும் பூனை மியாவ் என்று கத்திெ ஓடியது. மாணவர்கள் கலகலவென்று கை தட்டி சிரித்தனர்.

பியூனைக் கூப்பிட சொன்ன தலைமை ஆசிரியரும் கோபம் மாறி குலுங்கி சிரித்தார்.

- கவிஞர் மு.அ. அபுல் அமீன்

Published in Nagore Puranam June month magazine 2024

Post a Comment

0 Comments