Nagore Puranam
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு | மு. முஹம்மது சுஹைப் | June 2026

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு | மு. முஹம்மது சுஹைப் | June 2026


நம்மைச் சுற்றி சூழ்ந்துள்ளவைகளை நாம் சுற்றுச்சூழல் என்று அழைக்கிறோம். இந்தச் சுற்றுச்சூழலை நாம் ஐந்து வகையாக பிரிக்கலாம். நிலம், நீர், காற்று, ஆகாயம், மற்றும் தீ ஆகியன.

இவை ஐந்தும் மனிதர்கள் மட்டுமின்றி இவ்வுலகில் வாழும் மற்ற உயிர்களும் வாழ முக்கிய காரணியாக அமைகின்றன.

இவைகளை பேணி பாதுகாக்காவிட்டாலும் அவைகளை அழிக்காமல் இருந்தால் அதுவே ஆகச்சிறந்தது. வளர்ச்சி என்னும் பாதையில் செயற்கை நுண்ணறிவுகளையும், தானியங்கிகளையும் உருவாக்கும் மனிதன் சுற்றுச்சூழலைப் பேணி பாதுகாக்க மறந்து விடுகிறான்.

மனிதன் செய்யும் ஒரு சில தவறுகளால் சுற்றுச்சூழல் மாசுபட்டு அவனை மட்டுமின்றி மற்ற உயிரினங்களையும் அது பாதிக்கிறது. அதன் விளைவு காலநிலை மாற்றம், உடல் உபாதைகள் மற்றும் வாழத் தகுதியற்றதாக நம்மை மாற்றுகிறது.

இது மட்டுமின்றி உலகில் ஏற்படும் பல பேரிடர்களுக்கு சுற்றுச்சூழல் மாசுபாடு முக்கிய காரணமாகும். உலகில் வாழும் உயிர்களில் தனது தேவைக்காக உபயோகிப்பதை விடுத்து ஆடம்பரத்திற்காக வாழ ஆரம்பித்து விட்டனர் இந்நூற்றாண்டின் மக்கள்.

வீட்டிலிருந்து வெளியில் செல்லும் தேவை ஏற்பட்டால் இருசக்கர வாகனத்தில் சென்று வரலாம் அதனை விடுத்து ஊரார் பார்க்க பகட்டான வாழ்விற்காக நான்கு சக்கர வாகனத்தில் சென்று வருகின்றனர். இருசக்கர வாகனத்தை விட நான்கு சக்கர வாகனங்களில் சற்று அதிகமாகவே கரும்புகை வெளியாகிறது.

மனிதன் மரங்களை வெட்டி காடுகளை அழித்து விட்டான். நீர்நிலைகளை மூடி மாடமாளிகை கட்டி விட்டான். தாகம் ஏற்பட்டால் விலை கொடுத்து தண்ணீர் வாங்கி அருந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டான்.

இதனால் சூரிய தாக்கம் நேரடியாக பூமியில் படுவதால் புவி வெப்பமயமாகிறது. அந்த வெப்பத்தின் காரணமாக குளம், குட்டைகள் நீரின்றி காணப்படுகின்றன.

இது ஒரு புறம் இருக்க மழைக்காலத்தில் இயற்கை நமக்கு அளிக்கும் அருட்கொடையாம் அம்மழையை சேமிக்க நீர்நிலைகள் இல்லாமல் போனதால் அவை தெருவெங்கும் தேங்கி சேராக மாறியும் கடலில் கலந்தும் உபயோகிக்க இயலாத நீராக மாறுகிறது.

நாம் அன்றாடம் பயன்படுத்தி விட்டு தூக்கி வீசும் பாலித்தீன் பைகளும், நெகிழி பொருட்களும் எவ்வாறு நிலத்தை சேதப்படுத்தும் என்று நாம் துளிக் கூட சிந்தித்து பார்த்தது கிடையாது. ஒரு முறை உபயோகிக்கும் நெகிழி பொருட்களால் நிலம் நீர் மாசடைகிறது என்றால் அதற்கு மாற்றாக பசுமை நெகிழி (Bio Plastic) உபயோகிக்க தொடங்க வேண்டும். அதுவும் சாத்திய கூறாக அமையவில்லையெனில் துணிப்பைகளை உபயோகிக்க வேண்டும்.

தெருவெங்கும் பிரச்சாரம் மற்றும் விளம்பர பதாகைகளை வைத்து புவி வெப்பமயமாவதை தடுக்க வேண்டும், நிலம் நீர் காற்றை பாதுகாக்க வேண்டும், இவையெல்லாம் உன்னிலிருந்து தொடங்கு என்று வெற்று கூச்சல் போடாமல், என்னிலிருந்து தொடங்கினேன் என்பதாக ஒவ்வொருவரும் தானாக முன் வந்து அதற்கான பணிகளை செய்ய வேண்டும்.

அவ்வாறு நாம் செய்து இப்புவி வெப்பமயமாவதிலிருந்து தடுப்போம் என இந்த பொழுதில் உறுதி மொழி எடுப்போம். அதை ஏற்போம்.

- மு. முஹம்மது சுஹைப் 

Published in Nagore Puranam June month magazine 2024

Post a Comment

0 Comments