ஏழைத்தோழனே

பாவம் நீ ,

உன் அறியாமை 

மூலதனத்தில்

ஊழல் முதலீட்டை

அறுவடை செய்கிறது 

அரசியல் கூட்டம்.


உழைத்து தேய்ந்து 

மறைந்து போன

உன் ரேகைகளைப்போல்

அஸ்தமனமல்லவா

ஆகிவிட்டது உன் வாழ்க்கை.


உண்மையற்ற தலைவர்களுக்கு 

பல்லக்கு தூக்கி தூக்கி

உன் தோள்கள் 

தோய்ந்தல்லவா போய் விட்டன.


ஆட்சியைப் பிடிக்க 

அடுக்கடுக்காய் பொய் உறுதிகள் 

அடுப்பெரியவில்லை

ஏழைகள் வயிறல்லவா 

எரிகின்றன. 


சாமானிய வாழ்க்கையைச்

சாக்கடை ஆக்கிவிட்டு 

சமத்துவமல்லவா

பேசுகிறார்கள்.


வாழ்கவென்று கோஷமிட்ட 

குரல்வளையை நசுக்கி விட்டு 

விளம்பரம் ஒட்டிய விரல்களை 

வெட்டி அல்லவா சாய்க்கிறார்கள். 


வாக்குகளை நம்பி 

வாக்குகளை விற்காதே !

விழித்துக் கொள் தோழா 

விழுந்து விடாதே ! 


- கவிஞர் காஞ்சி கிருபா 

Published in Nagore Puranam March month magazine 2026