உயிர் உள்ளவரை ! & உன்னதம் சேர்த்தாள் ! | கவிப்பேரொளி சே.அப்துல் லத்தீப் (நீரை அத்திப்பூ) | March 2026

 


அறநெறி நூல்கள் 

அறிவியல் கலைகள் 

அத்தனையும்படி 

அன்றாடம்- உன் 

ஆர்வம் என்பது 

எதிலே என்பதை 

அறிந்து ஆழ்ந்திடு 

நன்றாகும்.


நெறிமுறையாகவே 

தினமும் படிப்பதை 

நினைவில் இருத்தி 

செயலாற்று -உன் 

நிழலும் கூடவும் 

அறிவின் உயர்வில் 

நிலைத்து நிற்கும் 

வரவேற்று.


காலை எழுந்ததும் 

படிப்பு என்றே 

கற்பித்த பாரதி 

சொல்போற்று- ஆம்

படிபடி என்றே 

பாங்காய்ச் சொன்ன 

பாவேந்தர் வழிமுறை 

நீ ஏற்று.

ஓலைச் சுவடியில் 

உண்மை கற்றலை 

உயர்த்திச் சொன்ன 

வள்ளுவரை- நீ 

உணர்ந்து போற்றி 

ஒவ்வொருநாளிலும் 

ஓதிடு உயிரும் உள்ளவரை.

*****

பெற்ற அன்னை

புகழில் உன்னை

ஆக்கி வைத்தவள்- அவள்

புரிந்த தியாகம்

மிகுந்த சேவை

போற்றிச் செய்தவள்.


உற்றபிணிகள் 

நோய்க்கெல்லாமும் 

பத்தியம் இருந்தாள்- உன் 

உயிரின் உடலின் 

அணுவில் எல்லாம் 

உன்னதம் சேர்த்தாள்.


எல்லா வகையாம் 

சிறப்புக்கெல்லாம் 

அன்னையே மூலம்- உன் 

நல்ல குணங்கள் 

வெல்லும் ஆற்றல் 

அவள்தந்த தானம்.


உள்ளம் முழவதும் 

அன்னை சிறப்பை 

ஏற்றுபோற்றிடு- அவள் 

நினைவை என்றும் 

மறந்திடாமலே

புகழைப் பெற்றிடு


அடிப்படை: 

உலக நாதரின் 

உலகநீதி

மாதாவை ஒருநாளும் 

மறக்க வேண்டாம்.


கவிப்பேரொளி சே.அப்துல் லத்தீப் (நீரை அத்திப்பூ)  

Published in Nagore Puranam March month magazine 2026

Post a Comment

0 Comments