டெட் என்னும் ஆசிரியருக்கான தேர்வு இந்திய அரசால் 2011ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்தேர்வு பின்னர் மாநிலங்களிலும் அறிமுகமானது.
ஓர் அரசு பணிக்கோ பொதுத்துறை பணிகளுக்கோ தேர்ந்து எடுப்பதற்குத் தேர்வு நடக்கும். தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் அந்தந்த குறிப்பிட்ட பணிகளுக்குத் தேர்ந்து எடுக்கப்படுவர்.
ஒவ்வொரு துறையிலும் உயர்வு பெறுவதற்குத் தேர்வுகள் நடைபெறும். தேறியோர் உயர் பதவி பெறுவர். தேறாதோர் பழைய பணியிலேயே தொடர்வர்.
ஆனால் டெட் தேர்வில் தேறியவருக்கு எந்த உயர்வும் கிடையாது. எந்த உயர்வு படிகளோ ஊக்கத்தொகையோ கொடுக்கப்படுவது இல்லை.
பல ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்களும் அத்தேர்வை எழுத கட்டாயப்படுத்துவது சரியான திட்டமாக தெரியவில்லை.
தேர்வில் தேர்ச்சி உயர்வு தருவதாகவோ, ஊக்கத் தொகை தருவதாக இருப்பது உலக மரபு. இதற்கு முற்றிலும் முரணானது இந்த டெட் தேர்வு.
1950களில் நான் துவக்க பள்ளியில் படித்த காலத்தில் ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாவட்டக் கல்வி அதிகாரிதான். அவரின் தலைமையில் ஆய்வாளர்கள் (Inspectors) இருப்பர். அந்த ஆய்வர் ஆண்டுக்கு இருமுறையேனும் அறிவிப்பு இன்றி வருகை புரிந்து பள்ளியை ஆய்வு செய்வர். தலைமை ஆசிரியரிடம் மற்றும் சில ஆசிரியர்களிடம் உரையாடுவர். வகுப்புகளைப் பார்வையிட்டு மாணவர்களிடம் கேள்வி கேட்பர். சரியான பதில் சொல்லும் மாணவர்களைப் பாராட்டுவர். அவரின் ஆய்வறிக்கையைப் பார்வையிட்டு மாவட்டக் கல்வி அதிகாரி பள்ளிக்கு அனுப்பி பாராட்டுவதைப் பாராட்டி திருத்த வேண்டியதைத் திருத்த அறிவுறுத்தி பள்ளிகளுக்கு அனுப்பி பதில் பெறுவார்.
ஆண்டு ஆய்விற்கு அறிவித்து வருவர். ஆய்வின் அடிப்படையிலேயே ஆசிரியர்களின் தரம் நிர்ணயிக்கப்படும். ஆய்வறிக்கை பேரேடுகளில் ஒட்டப்பட்டு நிரந்தர ஆவணமாக பாதுகாக்கப்படும்.
இங்கு குறிப்பிடப்படும் ஆய்வுகளின் விளைவும். உயர்வை நோக்கி நன்மை பயப்பதாக இருக்கும்.டெட் தேர்வு இதற்கு முற்றிலும் முரணானது.
டெட் தேர்வைப் புதிதாக தேர்வு பெறும் ஆசிரியர்களுக்குக் கட்டாயமாக்கலாம். தேறியவர்களை மட்டுமே ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கலாம்.
அதிக பட்சம் நடைமுறைப்படி நான்கு வாய்ப்புகள் கொடுக்கலாம்.
இந்தக் கருத்தை அரசு ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பது ஏற்றதாக இருக்கும்.
அத்தோடு டெட் தேர்வுகளுக்கு ஆகும் செலவும் அரசுக்குக் குறையும். அந்த நிதியை கல்வி துறையின் பிற பயன் தரும் பணிகளுக்குப் பயன்படுத்தலாம்.
- கவிஞர் மு.அ. அபுல் அமீன்

0 Comments