Nagore Puranam
ஏழையின் தோழன் நெகிழி | மு. முஹம்மது சுஹைப் | May 2024

ஏழையின் தோழன் நெகிழி | மு. முஹம்மது சுஹைப் | May 2024


நெகிழி உலக அளவில் அனைவரையும் அச்சுறுத்தும் ஒரு பொருளாக பார்க்கப்படுகிறது. இதனால் உலக மக்களுக்கு ஏற்படும் பேராபத்து மற்றும் பெருநெருக்கடியை அறிந்த ஆய்வாளர்களும், சமூக ஆர்வலர்களும் நெகிழியினை தவிர்க்கும் படி எச்சரிக்கின்றனர்.

கடந்த நூற்றாண்டு வரை மக்களிடையே பயன்பாட்டில் இருந்த கண்ணாடி மற்றும் மண்பாண்டங்கள் இன்றைய சமூகத்தினறிடையே காணாமல் போய்விட்டது.

கடந்த 40 ஆண்டுகளை விட நெகிழி பொருட்களின் உபயோகம் மக்களிடையே 74 சதவீதம் அதிகரித்துள்ளது.

குவளைகள், பானைகள், குடங்கள், உணவு உட்கொள்ளும் தட்டில் இருந்து அணிகின்ற ஆடை வரை அனைத்துமே நெகிழியினால் உருவாக்கப்பட்டு மக்களிடையே பயன்பாட்டில் உள்ளது.

உதாரணமாக நாம் உபயோகிக்கும் பொருட்கள் மற்றும் உட்கொள்ளும் உணவுப் பொருட்களை பேக்கிங் செய்வதற்கு 84 சதவீத பொருட்கள் நெகிழியாலான பொருட்களாகவே உள்ளது.

நெகிழியினால் ஏற்படும் அபாயம் குறித்து ஆராய்ந்து அறிந்தும் படித்தும் கண்களினால் பார்த்தும் கூட அதனை மக்கள் உபயோகித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

தொழிற்சாலைகளில் இவை மறு சுழற்சி செய்யப்படும் போதும், எரிக்கப்படும் போதும் வெளியேறும் வாயுக்கள் நச்சுத் தன்மை உடையதாக இருப்பதால், அருகிலுள்ள மக்களின் உடல்நலனாது பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறது.

தோல் நோய், புற்று நோய், ஒவ்வாமை, மூச்சுக் குழாய் பாதிப்பு, குடல் புண், செரிமானமின்மை, நரம்புத்தளர்ச்சி, சிறுநீரகச் செயல் குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு போன்றவை ஏற்படக் கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன. இருப்பினும் ஓர் அதிர்ச்சி இன்றளவும் இதன் உபயோகம் மக்களிடையே குறையவில்லை.

இதன் தீமையை அறிந்தவர்களில் செல்வந்தர்கள் மட்டும் நெகிழியினை தவிர்த்துப் பண்டைய முறைப்படி செம்பு, பித்தளை, மண்பாண்டங்கள் மற்றும் கண்ணாடி பொருட்களை உபயோகிக்க தொடங்கிவிட்டனர். ஆனால் நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழ்மையில் வாடுவோரால் IT இதனை வாங்கி பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது.

அதற்கு காரணம் இவை அனைத்தும் நெகிழி பொருட்களை விட பல நூறு மடங்கு அதிக விலை. இதுவே நெகிழியினை உபயோகிக்க மூலக் காரணமாக அமைகிறது.

நெகிழியினை உபயோகிக்க வேண்டாம் என்று தெருவெங்கும் பிரச்சாரம் செய்கிறோம்.

இருப்பினும் என்ன பயன் நெகிழிக்கு மாற்றான மற்றவை அனைத்து ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரால் வாங்க இயலாமல் போகிறது.

500, 1000 ரூபாய் கொடுத்து ஒரு செம்பு பொருள் வாங்குவது அல்லது 100,200 கொடுத்து சில்வர் தட்டு வாங்குவதற்கு பதிலாக இருபது ரூபாய்க்கு ஒரு நெகிழி தட்டு வாங்கி விடலாம். இதனாலேயே நெகிழியை மக்கள் உபயோகிக்க தொடங்கினர்.

நெகிழியினை உபயோகிப்பது பேராபத்து, இதனை தடை செய்ய வேண்டும் என்ற பதாகைகள் ஊர் எங்கும் வைத்து மக்களை விழிப்புணர்வு படுத்துவது ஒருபுறம் இருந்தாலும் அதற்கு மாற்றமான பொருட்களை எளிய வகையில் கிடைக்கும் வலிவகை செய்ய வேண்டும்.

அதற்குரிய வாய்ப்புகள் ஏற்படவில்லை எனில் நெகிழிக்கு பதிலாக பசுமை நெகிழி (பயோ பிளாஸ்டிக்) குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

நெகிழிக்கு மாற்றான மற்ற பொருட்கள் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரால் வாங்க இயலாமல் போனதாலேயே நான் சொல்கிறேன் ஏழையின் தோழன் நெகிழி என்று.

- மு. முஹம்மது சுஹைப் 

Published in Nagore Puranam May  month magazine 2024

Post a Comment

0 Comments