கண்ணதாசன் ஐயாவை பற்றி அவருடன் பழகிய பல பேரின் தகவல்களை புத்தகத்தின் வாயிலாகவும் வளையொலி வாயிலாகவும் பல நான் கேட்டிருக்கிறேன். அதில் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் ஐயா கண்ணதாசனை ஒரு குழந்தை என்று சொல்லிருப்பார்.
அகமொன்று புறமொன்று இல்லாது சமமாக நடந்து கொள்ள கூடியவர் என்று சொல்லுவார். வாலி ஐயா பாட்டெழுத காரணமே கண்ணதாசன் தான் என்று அவரே நிறைய மேடைகளில் சொல்லுகிறார்.
வாலி ஐயாவிற்கு பாட்டெழுத வாய்ப்பு கிடைக்காமல் அவர் திரும்பி திருச்சி செல்ல நேரும் போது தான் அவர் காதில் ஒலித்தது மயக்கமா தயக்கமா மனதில் குழப்பமா" அந்த பாடலில் வரும் சரணம் பின்வருமாறு:
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்!
வாசல் தோறும் வேதனை இருக்கும்!
வந்த துன்பம் எதுவென்றாலும்!
வாடி நின்றால் ஓடுவதில்லை!
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்!
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்!
ஏழை மனதை மாளிகையாக்கி!
இரவும் பகலும் காவியம் பாடி!
நாளை பொழுதை இறைவனுக்களித்து!
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு!
உனக்கும் கீழே உள்ளவர் கோடி !
நினைத்து பார்த்து நிம்மதி நாடு!
அவருடைய வனவாசம் மனவாசம் புத்தகத்தில் தான் எப்படி பட்டவன் என்று அவரே எழுதிருப்பார்.
அவரிடம் ஒளிவு மறைவு என்று ஒன்றுமே இல்லை, தனக்கு பின்னாடி வரும் சந்ததிகள் அதனை படிப்பார்கள் தன்னை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற அச்சம் அவருக்கு இல்லை. இறைவனை பற்றி ஒரு கவிதை எழுதிருப்பார் அது பின்வருமாறு:
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்! பிறந்து பாரென இறைவன் பணித்தான்! படிப்பெனச் சொல்லது யாதெனக் கேட்டேன்! படித்துப் பாரென இறைவன் பணித்தான்! அறிவெனச் சொல்லது யாதெனக் கேட்டேன்! அறிந்து பாரென இறைவன் பணித்தான்! அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்! அளித்துப் பாரென இறைவன் பணித்தான்! பாசம் என்பது யாதெனக் கேட்டேன்! பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்! மணந்து பாரென இறைவன் பணித்தான்! பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்! பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்! முதுமை என்பது யாதெனக் கேட்டேன்! முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! வறுமை என்பது என்னெனக் கேட்டேன்! வாடிப் பாரென இறைவன் பணித்தான்! இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன் இறந்து பாரென இறைவன் பணித்தான்! அனுபவித்தேதான் அறிலது வாழ்க்கையெனில் ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன் ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி அனுபவம் என்பதே நான்தான் என்றான்!
கருத்தில் கலந்து வருவான் கண்ணதாசன்..
- பூ. நல்ல பெருமாள்

0 Comments