காவிரியாற்றுக் கொடிக்கால்களில்

இலைவிரித்து ஏறும் வெற்றிலையின்

காம்பு கிள்ளி நரம்பெடுத்து

கொட்டைப்பாக்கோடு சுண்ணாம்பு தடவி 

வாயில் குதப்பி சிவந்து சிதறத் துப்பும்

 எச்சில் வாழ்வின் மீதான விமர்சனமா அம்மா !

நள்ளிரவில் பாத்திரங்கள் நிரம்பி வழிய

நமுத்தக் குடிசைக்குள் நடுங்கும் குடும்பம் 

கோழி குஞ்சுகளை அணைத்துக் கொள்ளும் கதையை.

கழற்றிக் கழற்றி திருகாணி மரை

தேய்ந்து வட்டியில் மூழ்கிவிட்ட

மூக்குத்தியை மீட்கச் சொன்னால் 

ஏது செய்வதென பயந்து சாகும் கையாலாகதவன்.. 

இதயம் நடுங்க அவளை எரியூட்டினான்

குடிசை கொள்ளாத பிள்ளைகள் 

கிழிந்த புடவைகளில் கிடக்கும் கும்பலை நிலவு அறியும்

அம்மா அழாத நாட்களில் சொல்லிக்கொண்டே இருந்தாள் நல்லத்தங்காள் கதையை

- கவிஞர் சூ. சிவராமன்