Nagore Puranam
மரியாதைக்கு மரியாதை | கவிஞர் மு.அ. அபுல் அமீன் | September 2024

மரியாதைக்கு மரியாதை | கவிஞர் மு.அ. அபுல் அமீன் | September 2024

முன்னோர்கள் சொன்ன நிகழ்ச்சி எனினும் எண்ணத்தில் பதிக்கும் வண்ணம் ஏற்புடையது.

பிரஞ்சு ஆட்சி காலத்தில் காரைக்கால் அரசு மருத்துவமனையில் ஒரு பிரஞ்சு மருத்துவர் தலைமை மருத்துவர் பொறுப்பில் இருந்தார்.

அவர் காலையில் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒவ்வொரு நாளும் முறை வைத்து ஓரிருதெருக்களைச் சுற்றி தென்படும் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வந்து பரிசோதித்து மருந்து கொடுப்பார்.

ஒரு நாள் அந்த மருத்துவர் பெருமாள் கோயில் பேருந்து நிறுத்தத்தில் ஒருவர் வயிற்று வலியால் துடிப்பதை பார்த்து அவரை ரிக்ஷாவில் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். பரிசோதித்தார்.

நோயாளியின் பெயர் முகவரி அவரின் உறவினரின் பெயர் முகவரி கேட்டு மருத்துவமனை ஊழியரை தமிழில் கடிதம் எழுதி போடச் சொல்லிவிட்டு அறுவை சிகிச்சை செய்தார் மருத்துவரும் ஊழியர்களும் செவிலியரும் அந்த நோயாளியை ராஜ உபசரிப்போடு கவனித்தனர்.

கடிதம் கிடைத்து நோயாளியின் உறவினர்கள் ஒரு வாரம் கழித்து மருத்துவமனைக்கு வந்தனர் நோயாளியும் குணமடைந்து விட்டதால் வந்தவர்களுடன் ஊர் திரும்பினார்.

மருத்துவர் ஒரு மாதம் கழித்து நோயாளியை வரச் சொன்னார் அப்படியே நோயாளியும் வந்தார் அவரை பரிசோதித்த மருத்துவர் இனி நோயாளி அவரின் வேலையை பார்க்கலாம் என்று சொன்னார்.

நோயாளி மருத்துவரின் காலில் விழுந்தார். மருத்துவர் அருகில் நின்றவரிடம் இது என்ன ? என்று கேட்டார். உங்களுக்கு மரியாதை செய்கிறார் என்று பதில் கூறினார் பக்கத்தில் இருந்த அதிகாரி பிரஞ்சு மொழியில்.

நோயாளி எழுந்ததும் மருத்துவர் கோட்டை கழற்றி பக்கத்தில் இருந்தவரிடம் கொடுத்துவிட்டு நோயாளியின் காலில் விழுந்தார். பதறிய மருத்துவமனை அலுவலர்கள் மருத்துவரை தூக்கி நிறுத்தி நீங்கள் இப்படி செய்யக்கூடாது என்றனர்.

மருத்துவரோ மரியாதைக்கு மரியாதை என்று மலர்ந்த முகத்துடன் பதில் கூறினார்.

- கவிஞர் மு.அ. அபுல் அமீன்

Post a Comment

0 Comments