பஞ்சாப் பார்டரில் ஓராண்டு பணியாற்றி ஓய்வுக்காக காத்திருந்த எங்களை அசாமுக்கு அனுப்பினர். ஆறு மாதங்கள் அசாமில் நிர்மாண ஈடுபடுத்தி ஒரு மாத விடுப்பு அளித்தனர். மூன்று நாட்கள் தொடர்ந்து ரயில் பயணம் செய்து ஊர் திரும்பிய களைப்பு தீர இரண்டு நாட்கள் வெளியே செல்லாமல் ஓய்வு எடுத்தேன்.
பதினெட்டு மாதங்கள் அதிரடி ஆணைகளுக்குக் கட்டுப்பட்டு புதிய பகுதிகளிலும் தொகுதியாக சென்று சோர்வுறாமல் வீட்டிற்குத் திரும்பினால் மகிழ்ச்சியில் எல்லை ஏது ?
மாமியார் மருமகள் சண்டை வீடு தோறும் காணலாம். இதைத்தான் வீட்டிற்கு வீடு வாசற்படி என்று ஓசைப்படாமல் சொல்கிறார்கள் எங்கள் வீட்டிலோ நேர் மாற்றம். என் அம்மாவும் மனைவியும் கலந்து ஆலோசித்து விதமான உணவுகளும் கறிகளும் செய்து பப்பெட் லஞ்ச் போல பல பாத்திரங்களில் என்னை மலைக்க வைத்து விட்டார்கள்.
நாளை காலை இட்லியும் சட்னியும்தான் வேண்டு்ம். வேறு ஏதாவது அதிகமாக டிபன் செய்தால் சாப்பிட மாட்டேன் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டேன்.
மூன்றாம் நாள் காலையில் ஒன்பது மணிக்கு நன்கு தூங்கி எழுந்து காலை கடன்களை முடித்து காலை சிற்றுண்டியை சாப்பிட்டு விட்டு வெளியே புறப்பட்டேன்.
இரண்டு நாட்களாக வாய் ஓயாமல் பஞ்சாப் அசாம் நிகழ்ச்சிகளை வீட்டில் அளந்தாகி விட்டது. இனியும் வீட்டில் அளப்பதற்கு முடியாது. இனி நண்பர்களைத்தான் அறுக்க வேண்டும். அதனால்தான் வெளியேப் புறப்பட்டேன்.
வாசலில் இருந்த அப்பா எங்கேடா புறப்பட்டாய் என்றார்.
புறப்படும் பொழும்போதே எங்கே போய்கிறாய் ? என்று ஆரம்பித்து விட்டாரே என்று அகலாய்து கொண்டு நண்பர்களைப் பார்த்து வரலாம் என்று சொல்லிவிட்டு படியிறங்கினேன்.
வேகும் வெயிலில் ஏண்டா போறே ? வெயில் அடங்கி மாலையில் செல்லலாமே என்றார்.
சும்மா இருக்கவே மாட்டார். எதையாவது சொல்லி சொல்லிக் கொண்டு இருந்தால்தான் அவருக்குப் பொழுது போகும் என்று எண்ணிக் கொண்டே
பட்டாளத்துகாரனை வெயிலும் மழையும் ஒன்றும் பண்ணாதுப்பா என்று பதில் சொல்லி விட்டு நடந்தேன்.
மேனியை எரிக்கும் மே மாத வெயில் சுரீரென சுட்டது. மலையிலும் காட்டிலும் மேட்டிலும் அலையும் பொழுது எதையும் உணராத உடல் வேட்டியும் சட்டையுமாய் வெளியில் புறப்படும் பொழுது வெயிலின் சூட்டை விரைவாய் உணர்கிறது. வேலைக்கும் உள்ள வேறுபாடு இப்படிதான்.
ஏழைகள் எதையும் தாங்கிக் கொள்கின்றனர். பணக்கார்கள் ஒவ்வொன்றிலும் வசதியையும் சௌகரியத்தையும் தேடுகின்றனர் போலும்.
தெருவில் நான்கு வீடுகளைக் கடந்தேன். என் மகன் வெயிலில் விளையாடி கொண்டிருந்தான்.
செல்லமாக அவன் முதுகில் தட்டி வெயிலில் நின்று விளையாடுகிறாயே வியர்த்து கொட்டுகிறதே. சளி பிடித்து காய்ச்சல் வருமே என்று சொல்லி அவனை வீட்டிற்கு அழைத்து வந்து வியர்வையைத் துடைத்து என் மனைவியிடம் அவனை வெயிலில் வெளியே அனுப்பாதே என்று சுபேதார் பாணியில் கட்டளை பிறப்பித்து விட்டு மீண்டும் வெளியே புறப்பட்டேன்.
அப்பா, இங்கே வாடா என்று அருகே அழைத்தார்.
சும்மாவே இருக்கமாட்டாரே தொணதொணப்பு என்று பொருமிக்கொண்டே அருகே சென்றேன்.
வாள் பிடித்து மரம் அறுத்த அவரின் கைகள் வயது தளர்ச்சியால் நடுங்கின. நடுங்கும் அவரின் கைகளால் என் கைகளைப் பற்றிக் கொண்டு உன் பிள்ளை உனக்குப் பெரிசு. அதனால் அப்படி சொன்னாய். என் பிள்ளை எனக்குப் பெரிசு. அதனால்தான் உன்னை வெயிலில் போகாதே என்றேன்.
சொல்லி விட்டு சிரித்தார் அப்பா. நான் மௌனமாக வீட்டிற்குள் சென்றேன்.
- கவிஞர் மு.அ. அபுல் அமீன்

0 Comments