குண்டு வெடிகுண்டு என்னும்
கொடும்பயத்தை நிறுத்து
கொள்கையினால் மக்களினம்
ஒன்றுபடப் பொருத்து
மண்டிவரும் தீமைகளை
மண்ணை விட்டுத் துரத்து
மாறாத அன்பொன்றே
மனதில் நிலைநிறுத்து!
எண்டிசையும் அமைதிவழி
இயல்பை வரவழைத்து
எப்போதும் எந்நிலையும்
மக்கள் மனம் செழித்து!
- கவிஞர் மு.அ. அபுல் அமீன்
உண்மையிலே மக்கள்
மனம் உயர்ந்தநிலை கொண்டு
இதயங்கள் துடிக்கட்டும்
இறைவன்புகழ் என்று
எண்ணற்ற ஏழைகளின்
ஏற்கவொண்ணாப் பசியை இல்லாமல்
ஆக்குதற்கு இந்தபணம் தேவை
பள்ளியில்லா நிலையிருந்து
பாழ்பட்ட ஊர்கள்
பயிர் கல்வி விளைப்பதற்கு
பாதைவழி மிகுத்து
நோய்பரவி பாய்கூட
படுப்பதற்கு இன்றி
நொந்தழியும் மக்களுக்கு
மருத்துவமே நன்று.
ஆயுதங்கள் அணுகுண்டு
அதற்கான செலவில்
ஆலயமாய் பல்கலைகள்
அந்தநிலை உயர்த்து.
என்பதை மனத்திருத்தி
கண்டுபிடி அறிவியலால்
கணினிபொறித் திறனால்
அன்றாடம் மக்கள்பயன்
அடையட்டும் வளர்த்து.
இசைகலைகள் நடன வகை
எல்லாமும் வளர்த்து
இமயமென அமைதிஒளி
எத்திசையும் பரந்து,
கண்ணிருந்தும் குருடர்களாய்
போர்தொடுத்து அழிக்கும்
கயமைமனத் தோரையெல்லாம்
கழுவிலேற்றி ஒறுத்து.
அமைதிப்புறா பறக்கட்டும்
அவனியிலே உயர்ந்து
அறப்பணிகள் தொடரட்டும்
விண்வரையில்வளர்ந்து.
- கவிப்பேரொளி சே. அப்துல் லத்தீப் (நீரை அத்திப்பூ)

0 Comments